Ad

சனி, 31 அக்டோபர், 2020

திருச்செந்தூர்:`ரஜினி பேச்சில் உண்மை இருக்கிறது; நியாயம் இருக்கிறது!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அரசுப்பள்ளி மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு இந்த அரசாணையை பிறப்பித்துள்ளது. ஆனால், அரசு இந்த இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எங்களின் போராட்டம்தான் காரணம் எனக்கூறி தனக்கு விளம்பரம் தேடியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அமைக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும்.

Also Read: `அறிக்கை என்னுடையது அல்ல; தகவல்கள் உண்மை!’ - மௌனம் கலைத்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சித் துவக்கம் குறித்து வெளிப்படைத் தன்மையுடன்தான் பேசியுள்ளார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவலை அடுத்து, உண்மை நிலையை வெளிப்படுத்தவே கருத்துச் சொல்லியுள்ளார். சூப்பர் ஸ்டார் 70 வயதைக் கடந்த பின்னரும், கதாநாயகனாக நடிக்ககூடிய அளவுக்கு திகழ்ந்து வருகிறார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இன்றைய இளம் நாயகிகள் கூட அவருடன் நடிக்க ஆவலாக உள்ளனர். ரஜினியின் பேச்சில் உண்மை இருக்கிறது. நியாயம் இருக்கிறது. திடீரென கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றிவர அவரது உடல் நிலை ஒத்துவருமா என்று அவரது நண்பர்கள் அச்சப்படுகிறார்கள்.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அவருக்குக் கூறிய அறிவுரைகள் குறித்த தகவல் அனைத்தும் உண்மை எனச் சொல்லியுள்ளார். அதன் வெளிப்பாடுதான் அவரது அறிக்கையாக வந்துள்ளது. கொரோனா காலத்தில் புதிய கட்சி துவக்கி, அரசியலைச் சந்திக்க வேண்டுமென்றால், மாநிலம் முழுவதும் சுற்றிவந்து மக்களைச் சந்திப்பது என்பது கடினம்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதற்கு அவரின் உடல்நிலை ஒத்து வருமா என்பது அவருக்குதான் தெரியும். அதற்காக ரஜினி கட்சி துவக்கப் பயப்படுகிறார் என்ற அர்த்தமல்ல. மொத்தத்தில் ரஜினியின் எண்ணம் நல்ல எண்ணம். அவர் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்; வராவிட்டாலும் ஏற்றுக் கொள்வோம். அவ்வாறு அவர் கட்சி துவக்கினால் நல்லாட்சி கொடுப்பவர்களை மட்டுமே ஆதரிப்பார்” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/there-is-truth-in-rajinis-speech-there-is-justice-says-minister-rajendra-balaji

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக