சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (42). இவர், கடந்த செப்டம்பர் மாதம் 12- ம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றி தங்க நகைகள், பணம் ஆகியவற்றை மோசடி செய்ததாக புகாரளித்தார். அதன்பேரில் நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கை எஸ்.ஐ தமிழன்பன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``சிவக்குமாரின் மனைவி கவிதா. இவர், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12- ம் தேதி அந்தப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் மீது தீப்பிடித்தது. இதில் கவிதா உயிரிழந்தார். அதனால், சிவக்குமார் மனவேதனையில் இருந்தார். அந்தச் சமயத்தில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணி என்ற பெண் சிவக்குமாருக்கு அறிமுகமாகியுள்ளார். அவரிடம் தன்னுடைய மனைவி உயிரிழந்த தகவலை சிவக்குமார் கூறியுள்ளார்.
அதைக்கேட்ட நாராயணி, உன் மனைவியின் ஆத்மா சாந்தியடையவில்லை. அதற்கு சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என சிவக்குமாரிடம் கூறியுள்ளார். அதை உண்மையென சிவக்குமார் நம்பியுள்ளார். இதையடுத்து நாராயணி, உன் மனைவி அணிந்திருந்த தங்க நகைகளை ஒரு மண்டலம் பூஜை செய்ய வேண்டும் என்று சிவக்குமாரிடம் கூறியுள்ளார். அதற்கு சம்மதித்த சிவக்குமார், வீட்டிலிருந்த 11.5 சவரன் தங்க நகைகள், 1,45,000 ரூபாய் பணம் ஆகியவற்றை நாராயணியிடம் கொடுத்துள்ளார்.
அதை வாங்கிக் கொண்ட நாராயணி, நகைகளையும் பணத்தையும் தன்னுடைய வீட்டில் வைத்து பூஜை செய்துள்ளார். நாராயணி கூறிய ஒரு மண்டலம் முடிந்தப்பிறகு அவரிடம் நகைகள், பணத்தை சிவக்குமார் கேட்டுள்ளார். அதற்கு 365 நாள்கள் பூஜை செய்ததால்தான் முழு பலன் கிடைக்கும் என நாராயணி கூறியுள்ளார். அதனால், சிவக்குமாருக்கு நாராயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் சிவக்குமாரைப் போல குணசுந்தரி என்ற பெண்ணிடம் 7.5 சவரன் தங்க நகை, 1,50,000 ரூபாய், ரேவதி என்பவரிடம் 13.5 சவரன் தங்க நகை, 55,000 ரூபாய், பாலாஜி என்பவரிடம் 22 சவரன் தங்க நகை, 2,55,000 ரூபாய், புவனேஸ்வரி என்பவரிடம் 21 சவரன் தங்க நகை, 40,000 ரூபாய், மேகலா என்பவரிடம் 7 சவரன் தங்க நகை, 1,60,000 ரூபாய், அருணகிரி என்பவரிடம் 20.5 சவரன் தங்க நகை, 65,000 ரூபாய் என நாராயணி பரிகார பூஜைக்காக வாங்கியத் தகவல் சிவக்குமாருக்கு தெரியவந்தது. அவர்களிடம் வாங்கிய தங்க நகைகள், பணத்தை நாராயணி திரும்பக் கொடுக்கவில்லை.
Also Read: சென்னையில் ஹூக்கா போதைக் கலாசாரம்... திடீர் ரெய்டு; 14 பேர் கைது! - பின்னணி என்ன?
இதையடுத்து சிவக்குமாரின் புகாரின் பேரில் நாராயணியை கையும் களவுமாக பிடிக்க வியூகம் அமைத்தோம். அதனால் காவலர் ஒருவரை, நாராயணியிடம் போனில் பேச வைத்தோம். அந்தக் காவலர், தன்னுடைய வீட்டில் பிரச்னை இருப்பதாகக் கூறினார். உடனே நாராயணி, வழக்கம்போல நகைகள், பணத்தை வைத்து பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்கு காவலரும் சம்மதித்தார். இதையடுத்து நாராயணி, காவலர் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு காத்திருந்து அவரை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தோம்.
அப்போது நாராயணி, 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பரிகார பூஜை, பில்லி, சூன்யம் என கட்டுக்கதைகளைக் கூறி தங்க நகைகள், பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. அந்த நகைகளை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தில் டூவிலர், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை வாங்கி ஆடம்பரமாக பெண் மந்திரவாதி நாராயணி வாழ்ந்து வந்துள்ளார். அதனால், அவரைக் கைது செய்து நகைகளையும் பணத்தையும் மீட்டுள்ளோம். மேலும் பெண் மந்திரவாதி, பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறுபவர்களிடம் பூஜை நடந்துக் கொண்டிருக்கும்போது தங்க நகைகள், பணத்தைத் திரும்ப கேட்டால், `ரத்தம் கக்கி சாவாய்’ என்று கூறி மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. நாராயணியிடம் இருந்து நகைகளை வாங்கிய ரத்தன்லால் என்பவரையும் கைது செய்துள்ளோம்" என்று போலீஸார் தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-woman-in-cheating-charges
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக