Ad

சனி, 31 அக்டோபர், 2020

`நேர்மையாக இருப்பதால் ஏற்பட்ட வெறுப்பா?' - சகாயத்தின் `விருப்ப ஓய்வு' பின்னணி!

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு மூன்றாண்டுகள் உள்ள நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார் தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ். ` கடந்த 6 ஆண்டுகளாக தலைமைச் செயலகத்தோடு அவருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. இனியும் அவர் பணியில் நீடிக்க விரும்பவில்லை' என்கின்றனர் சகாயம் தரப்பினர்.

`சகாயம் ஐ.ஏ.எஸ் ராஜினாமா?' என்ற தலைப்பில் கடந்த ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதனைத் தொடர்ந்து, அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு கேட்டு சகாயம் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது விருப்ப ஓய்வு முடிவுக்கு அரசிடம் இருந்து இன்னமும் பதில் வரவில்லை.

Also Read: “நேர்மையான அதிகாரிகளுக்கு நெருக்கடி!” - ராஜினாமா முடிவில் சகாயம் ஐ.ஏ.எஸ்

``இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏன் வந்தது?" என சகாயம் ஆதரவாளர்களிடம் கேட்டோம். `` கடந்த 2014 செப்டம்பர் மாதம் அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக, கோ-ஆப்டெக்ஸில் பணியாற்றினார். அப்போது 11.5 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய கோஆப்டெக்ஸுக்கு, ஒரே ஆண்டில் 13.5 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துக் கொடுத்தார். இதன்மூலம், நிகர லாபமாக முதல்முறையாக 2 கோடி ரூபாய் கிடைத்தது. கோ-ஆப்டெக்ஸ் என்பது தலைமைச் சங்கம். இங்கிருந்து நெசவாளர்களுக்கு எந்தவித சலுகைகளையும் கொடுக்கும் வழக்கமில்லை. அதனை மாற்றி, 80 ஆண்டுகால வரலாற்றில் ஏழை நெசவாளிகளுக்கு ஒரு கோடி ரூபாயை போனஸாகக் கொடுத்தார். நெசவாளர்கள், திருநங்கைகள் ஆகியோரை வைத்து பேஷன் ஷோ நடத்தியது, வேட்டி தினம், தங்கமழை பரிசுத் திட்டம் என்றெல்லாம் புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

இந்தநேரத்தில், கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் ஒன்று சகாயத்தின் கோபத்தை அதிகப்படுத்தியது. அங்கு 50 ஆண்டுகளாக கோ-ஆப்டெக்ஸின் கடை ஒன்று இயங்கி வந்தது. அந்தக் கடைகளை எடுத்துவிட்டு, புதிய வளாகம் கட்டப்பட்டதால், அங்கு இடம் கேட்டுச் சென்றார் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் சோமசுந்தரம். `உனக்கெதுக்கு கடை?' எனக் கேட்டு உள்ளூர் அ.தி.மு.க சேர்மனால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதுகுறித்து சகாயத்தின் கவனத்துக்குத் தகவல் வந்ததும், காவல்நிலைத்தில் புகார் கொடுக்க வைத்தார். கள்ளக்குறிச்சி மேலாளரும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த விவகாரத்தில் சேர்மன் மீதான புகாரை வாபஸ் பெறச் சொல்லி, தலைமைச் செயலகத்தில் வைத்தே அழுத்தம் கொடுத்தனர் அமைச்சர்கள் சிலர். `இது எங்க அரசாங்கம்... அம்மா போலீஸ்' என அமைச்சர் ஒருவரே நேரடியாகப் பேசியது சகாயத்துக்கு வேதனையை ஏற்படுத்தியது.

சகாயம் ஐ.ஏ.எஸ்

இதுகுறித்து தலைமைச் செயலாளருக்கு அவர் அளித்த மனுவில், ` ''அந்த அமைச்சர் மீது முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுங்கள்'' எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், அடுத்து வந்த நாள்களில் இந்திய மருந்துக் கழகத்துக்கு அவரை இடமாற்றம் செய்தனர். இதனால் பதறிப் போன அமைச்சர் ஒருவர், `என்னுடைய துறைக்கு அவர் வேண்டாம். தயவு செய்து மாற்றிவிடுங்கள்' எனக் கோரிக்கை வைத்ததால், அடுத்த 24 மணிநேரத்தில் அறிவியல் நகரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்" என விவரித்தவர்கள்,

`` வேளாண்மைத்துறையின் உதவி இயக்குநருக்கு உண்டான வசதிகள்கூட அறிவியல் நகரத்தில் இல்லை. ஆண்டுக்கு 1.30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 9 ஊழியர்களைக் கொண்டு இயங்கக்கூடிய சிறிய அலுவலகம் இது. இருப்பினும், கண்காட்சிகளை நடத்துவது, மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது எனத் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். ஆனால், அவருடைய பொறுமையைச் சோதிக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் செயல்பட்டு வந்தனர்.

`இப்படியொரு சிறிய துறைக்கு அரசு செயலர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி தேவையில்லை. இதே கட்டடத்தில் உள்ள மற்ற 2 துறைகளையும் இணைத்து ஒரே துறையாக மாற்றிவிடலாம்' என அரசுக்குப் பரிந்துரை கடிதமும் அனுப்பினார் சகாயம். அதனை அரசு கண்டுகொள்ளவில்லை. சம்பளக் குறைப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் இருந்தாலும், பிரான்ஸ் தமிழ் மன்றத்தில் அவர் பேசுவதற்காகச் செல்ல இருந்த வாய்ப்பையும் அதிகாரிகள் கெடுத்துவிட்டனர்.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

இதனால் மிகுந்த வேதனையோடு தலைமைச் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தில், `பிரான்ஸ் தமிழ் கலாசார மன்றம், 15-வது ஆண்டு விழாவுக்கு என்னை (14.4.2020) என்னை அழைத்துள்ளனர். எஃப்சிஆர்ஆர் விதி 7-ன்படி, `நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழை அனுப்பினால் போதும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நான் செல்கிற விமானச் செலவு, உணவுச் செலவு ஆகியவற்றுக்கான விபரங்களை இப்போதே கேட்பது வியப்பை அளிக்கிறது. விமான செலவு என்பது மாறிக் கொண்டே இருக்கும். அரசிடம் இருந்து அனுமதி பெற்று பிரான்ஸ் தமிழ் அமைப்பிடம் தெரிவித்த பிறகுதான் அவர்கள் பயணச் சீட்டையே எடுப்பார்கள். அதற்கு முன்பே கேட்பது விந்தையிலும் விந்தை.

எனக்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழர்கள் வீட்டில் விருந்தோம்பல் நடக்குமா அல்லது உணவகத்தில் நடக்குமா எனக் கேட்பது கடினமான ஒன்று. இது அரசுக்கும் நன்றாகத் தெரியும். அப்படியிருக்கையில், ஏன் கேட்கிறார்கள் எனத் தெரியவில்லை. இந்தச் செலவுகளை மத்திய அரசோ, மாநில அரசோ கொடுக்கப் போவதில்லை. இதுபோன்ற தேவையற்ற தரவுகளைக் கேட்பதன் மூலம் எனக்கு அனுமதி கொடுப்பதை தாமதிக்கும் எண்ணம், கோப்புகளை நகர்த்துபவர்களுக்கு இருக்கிறது. இதில் ஆழ்ந்த உள்நோக்கம் இருக்கக் கூடும். இன்றைய தினம், தமிழக அரசாங்கத்தில் நேர்மையான அதிகாரிகள் ஒருவித நெருக்கடிக்கு உள்ளாவதை ஆழ்ந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்' எனக் குறிப்பிட்டவர்,

Also Read: `குஜராத்தில் இருந்து வருத்தத்தோடு திரும்பி வந்தேன்!' - தேர்தல் அனுபவத்தை விவரிக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ்.

`` தமிழ் அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான அனுமதி கேட்கும்போது, என் போன்ற அதிகாரிகளுக்கு உடனடியாக மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசு அனுமதி பெற்றுத் தந்திருக்க வேண்டும். அப்படி பெற்றுத் தராதது, வேதனையை அளிக்கிறது. இதுபோன்று தேவையற்ற தகவல்களைக் கேட்பது என்பது, காலம் கடத்துபவர்களின் உயர்ந்த யுக்தியாகவே நான் கருதுகிறேன். இதை தமிழ் மொழியின் மீதான வெறுப்பின் செயலாகப் பார்ப்பதா அல்லது நேர்மையாகப் பணியாற்றும் என் போன்ற அதிகாரிகளின் மீது கொண்டுள்ள வெறுப்பா என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த நாட்டில் ஐ.ஏ.எஸ் பதவி என்பது இளைஞர்களின் உச்சபட்ச கனவு. என்னைப் பொறுத்தவரையில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யக் கிடைத்த வாய்ப்பாகக் கருதித்தான் இந்தப் பணிக்கு வந்திருக்கிறேன். அத்தகைய ஐ.ஏ.எஸ் பணியில் நேர்மையாக இருந்து செயலாற்றியதில் எனக்கு அளப்பரிய பங்கு உண்டு. அதேநேரத்தில் என் தமிழ்மொழிக்குப் பங்களிப்பு செய்வதை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.

இந்தச் சூழலில் ஐ.ஏ.எஸ் பதவியா என்னுடைய தமிழ் மொழியா என்று எவராவது என்னிடம் கேட்டால், என் மொழிதான் எனக்குப் பெரிது என்பேன். அதுவே, ஐ.ஏ.எஸ் உள்பட அனைத்தையும் விட பெரிது என்பேன்' எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தை தலைமைச் செயலருக்கு அனுப்பியிருக்கிறார். விரைவில் அரசுப் பணியில் இருந்து வெளியேற இருக்கிறார். இதுதொடர்பாக, கட்டாய விருப்ப ஓய்வு கேட்டு தலைமைச் செயலருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அரசிடம் இருந்து விருப்ப ஓய்வுக்கு அனுமதி கிடைத்த பிறகு, இளைஞர்களை நல்வழிப்படுத்தும் கூட்டங்களை நடத்த இருக்கிறார்" என்றனர் விரிவாக.

Also Read: "20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்!" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'

விருப்ப ஓய்வு முடிவு குறித்து சகாயத்திடம் பேசினோம். `` அரசுப் பணியில் நேர்மையாகப் பணியாற்றுவது என்பது வலிகளும் வேதனைகளும் நிரம்பிய ஒன்று. என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் தெரிவிக்கிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/sagayam-ias-wrote-letter-to-chief-secretary-regarding-his-vrs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக