Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

சென்னைக்கு மிக அருகே சிதையப்போகும் இன்னொரு மலை... எடமிச்சி மலையும் மக்கள் போராட்டமும்!

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் தாலுகாவில் அமைந்துள்ளது, எடமிச்சி மலை மற்றும் ஏரி. அந்தப் பகுதியைச் சுற்றி வாழ்கின்ற மக்கள், அங்குப் புதிதாக வரவுள்ள குவாரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அவர்களுடைய வாழ்வாதாரமாக நிற்கின்ற ஒரு மலையின் உடலைக் குத்திக் குடைந்து, வயிற்றினுள் வெடி வைத்துத் தகர்த்து, அதன் பாகங்களைக் கூறுபோட்டுப் பயனடையப் போகிறது ஒரு நிறுவனம். ஆனால், அதைப் பார்க்கும் அளவுக்குத் தங்களுடைய மனம் கல்லாகிவிடவில்லை என்பதைத் தங்களுடைய எதிர்ப்பின் வழியே வெளிப்படுத்துகின்றனர் நெற்குன்றம் பகுதி மக்கள்.

எடமிச்சி ஏரியைச் சார்ந்துள்ள விவசாய நிலங்கள்

எடமிச்சி மலைப் பகுதியில் ஒரு குவாரி நிறுவனத்திற்கு, தொழில் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான முதல்கட்ட வேலைகள் தொடங்கும் நிலையில், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தான எதிர்வினைகளைக் குறிப்பிட்டு, நெற்குன்றம் பகுதி மக்கள், காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில்,

``எடமிச்சி மலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் நாங்கள், இந்தப் பகுதியில் குவாரிகள் செயல்படத் தொடங்கப்படுவதையும் அதற்காகக் கல் உடைக்கும் இயந்திரங்கள் கொண்டுவரப்படுவதையும் அறிந்து, மிகவும் கவலை அடைந்துள்ளோம். இந்தச் செயல்பாட்டிற்கு எங்களின் எதிர்ப்பையும் ஆட்சேபத்தையும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

இந்தக் குவாரிகள், காப்புக் காடுகள், மலைக் குன்றுகள், எடமிச்சி ஏரி போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியில் செயல்பாட்டிற்கு வந்தால், இங்கு வாழ்கின்ற உயிரினங்கள், தாவரங்கள், பறவைகள் அனைத்தும் அவற்றுடைய வாழ்விடங்களை இழக்க நேரிடும். இந்தக் குவாரி திட்டத்திற்குப் பலியாகப் போகும் எடமிச்சி ஏரியின் நீரை நம்பியே, இங்குள்ள எல்லாக் கிராம மக்களும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர்த் தேவைக்கும் இந்த ஏரி ஒரு முக்கிய ஆதாரமாகச் செயல்படுகின்றது" என்று பொதுமக்கள் ஆட்சியருக்கு அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு குவாரி செயல்படத் தொடங்கினால், இவையனைத்துமே காணாமல் போய்விடும் ஆபத்து நிலவுகின்றது. அது அப்பகுதி மக்களுடைய வாழ்வியலையே சிதைத்துவிடும். மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் குவாரிகளால், ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலத்தில் நிலச்சரிவுகளும் வெள்ள அபாயங்களும் பல்வேறு சேதங்களை விளைவித்துக் கொண்டிருக்கின்றன. செங்குன்றம் போல, சென்னையைச் சுற்றியிருந்த பல்வேறு மலைக் குன்றுகள் இன்று குவாரி செயல்பாடுகளால் காணாமல் போயின. தற்போது தலைநகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள நெற்குன்றம் போன்ற இயற்கை வளப் பகுதிகளும் குறிவைக்கப்படுகின்றன. இது, வருங்காலத்தில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலங்களைப் பாலையாக்கிவிடும் ஆபத்து உள்ளது. ஏற்கெனவே, பாதிக்கும் மேற்பட்ட பல்லுயிரியவளப் பகுதிகளை சென்னையும் அதன் புறநகர்ப் பகுதியும் இழந்துவிட்டது. இந்நிலையில், இருப்பதையாவது பாதுகாக்க வேண்டுமென்று சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

குவாரி திட்டத்தால் பாதிக்கப்போகும் எடமிச்சி ஏரி

ஒரு குவாரி வருவதால், அந்த நிலம் அதன் பல்லுயிரிய வளத்தை முற்றிலுமாக இழக்க நேரிடும். அந்தப் பகுதி முழுவதும் மாசுபாடும் தூசிப் படலமும் நிறைந்திருக்கத் தொடங்கும். நிலத்தடியிலும் மேற்பரப்பிலும் உள்ள நீர்வளம் மாசுபடும். இவையனைத்துமே அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமவாசிகளின் உடல்நிலையைப் பாதிக்கும். இருமல், மூச்சுத் திணறல், கண்களில் எரிச்சல் போன்ற ஆரம்பக்கட்ட பிரச்னைகள் தொடங்கி, நுரையீரல் செயல்பாட்டைக் குறைப்பது, மார்பில் இறுக்கம், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள், நுரையீரல் புற்றுநோய், எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுடைய நோய் எதிர்ப்புத் திறன் குறைதல் என்று நீண்டகாலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

குவாரி நடவடிக்கைகளால் பரவும் தூசுப்படலம் தாவரங்களின் மீது படிந்து அவற்றுடைய வளர்ச்சியைப் பாதிக்கும். இதன் தாக்கம், அப்பகுதியின் பயிர் விளைச்சல் மீது இருக்கும் என்பதால் விவசாய உற்பத்தியும் பாதிக்கப்படும். பாறைகளை வெடி வைத்துத் தகர்ப்பதும் பாறைகளைத் தொடர்ந்து உடைப்பதும் வெளியேற்றுவதுமாக இருப்பதால், மக்களின் வாழ்விடங்களைச் சுற்றி அதிகச் சத்தத்தையும் அதிர்வுகளையும் அது உருவாக்குகின்றது. அது ஒலி மாசுவை ஏற்படுத்துவதோடு, வெடி பொருள்களின் நச்சுப் பொருள்கள் தொடர்ந்து காற்றில் கலந்துகொண்டேயிருக்கும்.

``நெற்குன்றம் கிராமம், எடமிச்சி மலையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. வடக்குப் பகுதியில் எடமிச்சி ஏரி அமைந்துள்ளது. உத்திரமேரூர், மதுராந்தகம் ஏரிகளுக்கு அடுத்தபடியாக இதுதான் இந்தச் சுற்றுவட்டாரத்திலுள்ள பெரிய ஏரி. இதன்மூலமாகச் சுமார் 5 கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனம்பாக்கம் பஞ்சாயத்தினுடைய நிலத்தடி நீர் வளத்திலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ஏரியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இடியம்புதூர் என்ற கிராமத்திற்குக் கீழுள்ள நிலத்தடி நீரகத்தோடு (aquifer) இந்த ஏரி நிலத்தடியில் இணைந்திருக்கிறது. மனிதர்களால் கட்டமைக்கப்பட்ட தடுப்புகளைக் கடந்து இந்த ஏரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது ஒவ்வோர் ஆண்டும் இயல்பாகவே நடக்கும்.

அர்ஜூன் கோபாலரத்னம் / Arjun Gopalaratnam

வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் காப்பிடங்களுக்கு வருகின்ற பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய இந்த ஏரியைச் சுற்றியுள்ள வனப்பகுதியைச் சார்ந்திருக்கின்றன. மேலும் எடமிச்சி பஞ்சாயத்து மக்கள் இந்த ஏரியின் மீன் வளத்தைத் தங்கள் உணவுக்காகச் சார்ந்திருக்கின்றனர். இந்த மொத்தப் பகுதியுமே மிக முக்கியமான வளம் நிறைந்த பசுமையான பகுதி.

இவையனைத்திற்கும் மேலாக, இந்த மலைப்பகுதியைத்தான் கால்நடை மேய்ச்சலுக்காக கிராம மக்கள் சார்ந்திருக்கின்றனர். நெற்குன்றம் கிராமத்திலிருந்து மட்டும் தினமும் நூற்றுக்கணக்கான லிட்டர் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே, நெல்வாய் கூட் ரோடு மற்றும் திருமுக்கூடலை இணைக்கின்ற சாலை முழுக்க குவாரிகளால் நிரம்பியிருக்கின்றது. தற்போது அதற்கு அருகிலேயே அமைந்துள்ள இந்தப் பகுதியையும் குவாரியாக மாற்றுவது இந்த மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைத்துவிடும்" என்கிறார் நெற்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும் முன்னாள் ராணுவ வீரருமான அர்ஜூன் கோபாலரத்னம்.

``நெற்குன்றமும் அதன் அருகிலுள்ள கிராமங்களும் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ளன. இந்நிலையில், இங்கு குவாரிகள் தொடங்கப்பட்டால், இந்தக் கிராம மக்களின் முழு வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். முக்கியமாக இங்குள்ள பலர் இயற்கை முறை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தக் கிராமங்களை ஒட்டியுள்ள எடமிச்சி குன்று மற்றும் ஏரி பல்லுயிர்த்தன்மை மிகுந்துள்ள வாழ்விடங்களாக இருக்கின்றன. இந்தக் குன்றில் தேத்தான் கொட்டை, காம்பில் மரம், பாதிரி, பூத்தாளி போன்ற அரிய வகை மரங்கள் வளர்வது குறிப்பிடத்தக்கது.

நரி, மரநாய், முள்ளம்பன்றி போன்ற விலங்குகள் உள்ளன. இந்த ஏரி அருகி வரும் பறவை இனங்களான மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கிடா போன்றவற்றுக்கான உணவிடமாகத் திகழ்கின்றது. வேடந்தாங்கல் சரணாலயமும் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால், அங்கு இனப்பெருக்கம் செய்ய வருகின்ற பறவைகள் இங்குள்ள ஏரிக்கும் விவசாய நிலத்திற்கும் உணவைத் தேடி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. வேடந்தாங்கலில் இனப்பெருக்கம் செய்யும் பறவைகள், அங்கிருந்து பல கிலோமீட்டர் சென்று விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளிலிருந்து உணவு சேகரிக்கும் பழக்கம் கொண்டுள்ளதால் எடமிச்சி ஏரியும் அதைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று எடமிச்சி மலை மற்றும் ஏரியின் முக்கியத்துவம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார் சூழலியல் ஆர்வலர் பேராசிரியர் த.முருகவேள்.

எடமிச்சி ஏரிக்கு அருகில் குவாரி வரவுள்ள பகுதியிலுள்ள மேய்ச்சல் நிலம்

அரசு இயற்கை வளங்களின் பாதுகாவலானகத்தான் இருக்க வேண்டுமே தவிர, உரிமையாளரைப் போல் நடந்துகொள்ளக் கூடாது. ஆனால், சமீபகாலமாக வேகமெடுக்கும் வளர்ச்சித் திட்டங்கள், இயற்கை வளங்களுக்கு எமனாக வந்து நின்று கொண்டிருக்கின்றன. இப்போது அந்த `வளர்ச்சி'யின் பார்வைக்கு எடமிச்சி மலைப்பகுதி இரையாகவுள்ளது. அதனிடமிருந்து அப்பகுதியைக் காப்பாற்ற பொதுமக்கள் களமிறங்கியுள்ளனர். நெற்குன்றம், மாமண்டூர், பளீஸ்வரம் ஆகிய கிராமங்கள் தங்கள் எதிர்ப்பு ஆட்சேபனைக் கடிதங்களை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவிட்டனர். விரைவில் சின்னலம்பாடி மக்களும் அனுப்பப் போகின்றனர்.

இந்த மக்களுடைய கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, எடமிச்சி மலையின் சூழலியல் முக்கியத்துவத்தை உணர்ந்து மாவட்ட ஆட்சியர் அங்கு குவாரி தொடங்கத் தடை விதிக்க வேண்டும்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/new-quarry-project-endangers-edamichi-hill-and-lake-in-kanchipuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக