Ad

புதன், 28 அக்டோபர், 2020

குமரி மீனவர்களைத் தாக்கி போலீஸில் ஒப்படைத்த கர்நாடக மீனவர்கள்! -வேதனையில் குடும்பத்தினர்

கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளை தோப்பைச் சேர்ந்த ராபின்சன் (36), கன்னியாகுமரியைச் சேர்ந்த டென்னிஸ் (56), வாவுதுறையைச் சேர்ந்த அருள்ராஜ் (42), மணக்குடியைச் சேர்ந்த ஜோசப்(50), அழிகலைச் சேர்ந்த அருள் சீலன் (40), கடியப்பட்டணத்தைச் சேர்ந்த சுபின் (20), முட்டத்தைச் சேர்ந்த ரோஹன் டிஜோ (18), பெரியவிளையைச் சேர்ந்த சாமுவேல்(18), எறும்புகாட்டை சேர்ந்த சக்கரியா(27) ஆகிய 10 மீனவர்களும் கேரளத்தில் தங்கி மீன் பிடித்தொழில் செய்துவருகின்றனர். கடந்த 19-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த உஸ்மான் என்பவருக்கு சொந்தமான "இந்தியன்" என்ற விசைப்படகில் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்கள்.

மீனவர்கள் கர்நாடக மாநிலம் மால்பே என்ற பகுதியில் ஆழ்கடலில் சுமார் 23 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கடந்த 22-ம் தேதி கர்நாடக  மீனவர்கள் 10 படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கடலுக்குள் சுற்றிவளைத்துப் பிடித்திருக்கிறார்கள். பின்னர், அவர்களைத் தாக்கி கர்நாடக கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், குமரி மீனவர்கள் கர்நாடக மீனவர்களை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில்

இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இதுகுறித்து சர்ச்சில் கூறுகையில், ``தேசிய கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை கர்நாடகா மீனவர்கள் ஆயுதங்களோடு தாக்கி காயப்படுத்தியுள்ளார்கள். படகு ஓட்டுநர் ராபின்சன் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். மற்ற மீனவர்களும் கர்நாடக மீனவர்களால் தாக்கப்பட்டனர்.

Also Read: `63 மீனவர்கள் எங்கே... கப்பலில் வந்தவர்கள் யார்?' - இரானில் தவிக்கவிட்ட இந்திய அதிகாரிகள்

பின்னர் இந்தியன் என்ற விசைப்படகையும் அதிலிருந்த 10 தமிழக மீனவர்களையும் பிணைக் கைதிகளாகக் கர்நாடக மீனவர்கள் மால்பே பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காயப்பட்ட 10 மீனவர்களையும் மால்பேயில் உள்ள கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். குமரி மீனவர்கள் காயத்துடன் இருந்ததைப் பார்த்த கர்நாடகா மாநில கடலோரக் காவல் குழும அதிகாரிகள், மீனவர்களை உடுப்பி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குமரி மீனவர்கள் 10 பேரும் ஆயுதங்களோடு கர்நாடக மாநில மீனவர்களைத் தாக்கியதாக மீனவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளது கர்நாடகா போலீஸ்.

மீனவர்களை விடுவிக்கக் கோரி குமரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது

கொலை முயற்சி, அத்துமீறல், கூட்டமாகச் சேர்ந்து கடலுக்குள் கலவரத்தில் ஈடுபடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் குமரி மீனவர்கள் மீது கடந்த 23-ம் தேதி வழக்கு பதிவு செய்ததுள்ளனர். அன்றைய தினமே மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உடுப்பி சிறையில் அடைத்துள்ளனர். மீனவர்களை, தங்களது உறவினருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு கூட அனுமதிக்கவில்லை. குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற குமரி மீனவர்களை கர்நாடக மீனவர்கள் பிடித்து சென்றதுடன், தற்போது சிறையில் அடைத்து வைத்திருப்பது அவர்கள் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காயம்பட்ட மீனவர்களுக்கு போதுமான மருத்துவ வசதி கிடைக்கவில்லை.

குமரி மீனவர்கள் கர்நாடகா மாநில கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கவில்லை, அவர்கள் தேசியக் கடல் பகுதியில் மீன்பிடித்ததாகத் தான் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்கக் குமரி மீனவர்களுக்கு தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் விசைப்படகில் இருந்த மீன்கள், ஜி.பி.எஸ், எக்கோ சவுண்டர், வயர்லெஸ், செல்போன் போன்ற விலையுயர்ந்த பொருட்களையும் கர்நாடகா மீனவர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

Also Read: ``மீனவர்கள் மீனில்லாத சாப்பாடு சாப்பிடுவது இப்போதுதான்...” - வடசென்னையிலிருந்து ஒரு குரல்!

தேசியக் கடல் பகுதி இந்தியாவில் அனைத்து மீனவர்களுக்கும் மீன்பிடிப்பதற்கு உரிமைப்பட்ட பகுதி என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கும், கர்நாடகா முதல்வருக்கும், மத்திய மீன்வளத்துறை அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/karnataka-fishermen-attacks-kanyakumari-fishermen-alleges-families

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக