Ad

வெள்ளி, 26 ஜூன், 2020

போயஸ் கார்டன் புது வீடு; தஞ்சைப் பளிங்கு மாளிகை! -எங்கே தங்குவார் சசிகலா?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் சசிகலா வரும் ஆகஸ்ட் மாதம் விடுதலையாகி வெளியே வர வாய்ப்பிருக்கிறது என்ற தகவலால் உற்சாகத்தில் உள்ளனர் மன்னார்குடி உறவுகள். கூடவே, `சிறையிலிருந்து வந்த பிறகு சசிகலா எங்கே தங்குவார்' என்ற விவாதமும் உறவினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தஞ்சாவூரில் உள்ள இல்லம்

இதுகுறித்து மன்னார்குடி வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்தோம். ``சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறைக்குச் சென்றபோது போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா இல்லத்திலிருந்துதான் சென்றார். அதன்பிறகு முதல்வர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என அறிவித்ததுடன், அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இந்நிலையில் சிறையிலிருக்கும் சசிகலா விடுதலையாகி வெளியே வந்த பிறகு யாருடைய இல்லத்தில் தங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சசிகலா தன்னுடைய கணவர் ம.நடராசனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தபோது, பரோலில் வந்த சசிகலா இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியாவின் இல்லத்தில் தங்கினார்.

ஜெயலலிதா

சென்னையை விட்டு வெளியே செல்லக்கூடாது எனச் சிறைத்துறை கூறியிருந்ததையடுத்து அவர் கிருஷ்ண பிரியாவின் வீட்டில் தங்கினார். மேலும், சசிகலாவின் முக்கிய உறவினர்களுக்குச் சென்னையில் வீடு உள்ளதால் தங்கள் வீட்டில் தங்கவில்லை என்ற வருத்தம் பலருக்கும் ஏற்பட்டது. அதன்பின்னர் கணவர் நடராசன் இறந்த பிறகு அவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பத்து நாள்கள் பரோலில் வந்த சசிகலா தஞ்சாவூர் அருளானந்த நகர் அருகே உள்ள பரிசுத்தம் நகரில் தங்கினார்.

மனைவி சசிகலாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என ஆசை ஆசையாக நடராசனால் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட அந்த வீட்டில் ஒருநாள் கூட இருவரும் சேர்ந்து வாழவில்லை. இந்தக் கவலை இரண்டு பேருக்குமே இருந்துள்ளது. கணவரின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு அந்த வீட்டில் தங்கியிருந்த சசிகலா தனது உறவினர்களிடம் இதைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

சசிகலா இல்லம்

அந்த வீட்டின் முதல் தளத்தில் நடராசனுக்கு எனப் பிரத்யேக அறை உள்ளது. அந்த அறையில்தான் சசிகலா தங்கினார். பரோல் முடிந்து சென்ற பிறகு வாஸ்து சாஸ்திரப்படி அந்த அறையில் சில மாற்றங்களைச் செய்துவிட்டுச் சென்றார். `என் கணவரின் ஆன்மா உள்ள இடமான இந்த வீட்டைப் பத்திரமாக கவனித்துக்கொள்ள வேண்டும்' எனச் சொல்லிவிட்டுச் சென்றார். அப்போது முதல் அந்த அறை பூட்டியேதான் இருக்கிறது.

நடராசனின் தம்பி ராமச்சந்திரனின் குடும்பம்தான் அவ்வப்போது அந்த வீட்டைப் பயன்படுத்திக்கொண்டு வருகிறது. சென்னையில் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சசிகலா வெளிய வரும் நேரத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அத்துடன் போயஸ் கார்டன் இல்லத்துக்கும் செல்லமுடியாது. இதுபோன்ற காரணங்களால் சென்னைக்குச் செல்ல மாட்டார். தஞ்சையில் உள்ள வீட்டிற்கு வந்து தங்குவதற்குத்தான் வாய்ப்புகள் உள்ளன.

Also Read: சசிகலா `விடுதலை' ரகசியம்; முதல்வருக்கு ஆபத்தா? உளவுத்துறை பதில் என்ன? - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

ஏன் என்றால் யாருடைய உறவினர்கள் வீட்டிலும் தங்குவதற்கு சசிகலாவிற்கு விருப்பமில்லை. அப்படி யாரோ ஒருவர் வீட்டில் தங்கினால் மற்றவர்களுக்கு வருத்தம் உண்டாகும். இதைத் தவிர்க்கவே தஞ்சையில் உள்ள இல்லத்திற்குச் செல்வதை சசி விரும்புகிறார். அத்துடன் ஜெயலலிதாவுடன் சுமார் 25 வருடங்களுக்கு மேல் போயஸ் கார்டனில் இருந்தார் சசிகலா. அந்த இல்லம் தற்போது தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பது அவருக்கு வருத்தம்தான். மேலும் போயஸ்கார்டன் பகுதியில் இருந்தால் கைவிட்டுச் சென்ற ஆட்சி, அதிகாரம் மற்றும் கட்சி நிர்வாகம் என அனைத்தும் திரும்பக் கிடைக்கும் என நினைக்கிறார்.

இதற்காக வேதா இல்லத்துக்கு எதிரிலேயே சசிகலாவுக்கு எனப் புதிய வீடு கட்டும் பணி நடந்துவருகிறது. அவை தற்போது முடிவடையும் தறுவாயில் உள்ளது. இளவரசியின் மருமகன் ராஜராஜன் மேற்பார்வையில்தான் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இருந்தால் கட்சிப் பணிகளையும் அரசியல் நிகழ்வுகளையும் கவனிப்பதற்குச் சரியாக இருக்கும் என அங்கு தங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பெசன்ட் நகரிலும் நடராசனுக்குச் சொந்தமான இல்லம் உள்ளது. அங்கு செல்வதற்கான எண்ணம் அவருக்கு இல்லை. பெரும்பாலும் தஞ்சையில் உள்ள வீடு அல்லது போயஸ்கார்டனில் தயாராகும் புதிய வீட்டில் தங்குவார் என்றே தெரிகிறது” என்கிறார்கள்.

சசிகலா விடுதலை ஆவாரா என்பதே விவாதத்தில் உள்ள நிலையில், அவர் தங்கப்போகும் வீடு குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர் உறவுகள்.



source https://www.vikatan.com/news/politics/where-is-sasikala-going-stay-after-prison-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக