ரஜினிகாந்த்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமானதொரு திரைப்படம் என்று `தில்லு முல்லு’வைச் சொல்லலாம். அவருக்குள் இருந்த நகைச்சுவை என்னும் பரிமாணத்தை கண்டெடுத்த படம் இது. பிற்பாடு அவர் பல நகைச்சுவைத் திரைப்படங்களில் மிளிர்ந்ததற்கு விதை போட்டது இந்தத் திரைப்படம்தான்.
பொதுவாக ஆக்ஷன் ஹீரோக்கள், முழு நீள நகைச்சுவைத் திரைப்படங்களில் நடிக்க விரும்ப மாட்டார்கள். அது அவர்களின் இமேஜ்க்கு பாதகம் ஏற்படுத்திவிடலாம் என்கிற கவலை ஒரு புறம் இருக்கும். இன்னொரு புறம், ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் நடிப்பதென்பது பெரிய சவால். ஆக்ஷன் ஹீரோக்களுக்கு அது இன்னமும் சிரமமானது. உதாரணமாக, எம்.ஜி.ஆரைச் சொல்லலாம்.
எனவே, ரஜினிகாந்த் `தில்லுமுல்லு’வில் நடிக்க தயக்கமும் மறுப்பும் காட்டினதில் பெரிய ஆச்சர்யமில்லை. அப்போது, அவர் மெல்ல மெல்ல ஒரு முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்தார். `பில்லா’, `முரட்டுக்காளை’ போன்ற வெகுசன திரைப்படங்களின் பிரம்மாண்டமான வெற்றி அவரை உச்சத்துக்கு அழைத்துச் சென்றன.
ரஜினியின் தயக்கத்துக்கு இன்னொரு உப காரணமும் உண்டு. இந்தத் திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தால் அவர் தனது மீசையைத் துறந்தாக வேண்டும். ஆம். ஹீரோவுக்கு இணையானதொரு முக்கியத்துவத்தை மீசை இந்தத் திரைப்படத்தில் கொண்டிருந்தது.
`மீசை இல்லாத தனது முகத்தை தனது ரசிகர்கள் உட்பட பொதுமக்கள் ரசிக்க மாட்டார்கள்’ என்கிற தயக்கமும் ரஜினியிடம் இருந்ததாகத் தெரிகிறது. இது மட்டுமல்லாமல் இப்படியொரு நகைச்சுவைத் திரைப்படத்தில் ரஜினியை நடிக்க வைப்பதை சினிமாவின் உள்வட்டத்தில் இருந்தவர்களே ஏற்கவில்லை. `இது அவருக்கு செட் ஆகாது சார்’ என்று திரைக்கதை, வசனம் எழுதிய விசு உட்பட பலரும் தங்களின் ஆட்சேபத்தைத் தெரிவித்தார்கள்.
நாகேஷ் அல்லது கமல்ஹாசனை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் பெரும்பாலோரின் அபிப்ராயமாக இருந்தது.
ஆனால், ரஜினி உட்பட அத்தனை பேர்களின் தயக்கத்தையும் உடைத்தெறிந்து `இந்தத் திரைப்படத்தில் ரஜினிதான் நாயகன்’ என்று தன்னுடைய முடிவில் மிக உறுதியாகவும் பிடிவாதமாகவும் நின்று ஜெயித்துக் காட்டியவர் கே.பாலசந்தர். ரஜினிக்குள் இருந்த நகைச்சுவை நடிகனை வெற்றிகரமாக வெளியே கொண்டு வந்ததில் அவருக்கு பெரிய பங்குண்டு. ரஜினியை ஹீரோவாக வைத்து இதை வெற்றிப்படமாக மாற்ற முடியும் என்கிற அவரின் கனவும் தீர்க்கதரிசனமும் பொய்க்கவில்லை.
ஏற்கெனவே பல முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை இயக்கி வெற்றிபெற்ற பாலசந்தருக்கு தன்னுடைய திறமை மீது இருந்த அசாதாரணமான நம்பிக்கை இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். இது ஒவ்வொரு இயக்குநருக்கும் ஆதாரமாக இருக்க வேண்டிய தன்னம்பிக்கை. `தில்லு முல்லு' வெளிவந்து மிக மகத்தான வெற்றியைப் பெற்றது.
தமிழ் சினிமாவின் நகைச்சுவைத் திரைப்படங்களைக் கறாராக பட்டியல் இட்டால் அதில் ‘தில்லு முல்லு’ உத்தரவாதமாக இடம் பெறும் என்பது உறுதி.
பிறகு ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ பிம்பம் மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்துகொண்டே போனதால் அவருக்கேற்ற திரைப்படங்களை தன்னால் இயக்க முடியாது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தார் பாலசந்தர். பிறகு, ரஜினி நடித்த பல திரைப்படங்களை பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கினாலும் ‘இயக்குநர் - நடிகர்’ என்கிற உறவின் அடிப்படையில் பாலசந்தர் மற்றும் ரஜினி என்கிற கூட்டணியின் கடைசி திரைப்படமாக அமைந்தது `தில்லு முல்லு.’
`தில்லு முல்லு’ திரைப்படத்தின் முதற்ல்காட்சியிலேயே ரஜினி தோன்றி... ‘இதில் ஒரு மாறுபட்ட ரஜினியை பார்க்கவிருக்கிறீர்கள். உங்களை சிரிக்க வைப்பதுதான் எங்களின் பிரதான குறிக்கோள்’ என்கிற முன்னுரையை (Disclaimer) வழங்குவார். பார்வையாளர்களை முதலிலேயே மனதளவில் தயார்ப்படுத்தும் உத்தியாக இது இருந்திருக்க வேண்டும். ‘Humorously yours’ என்கிற குறிப்புடன் இயக்குநரின் கையெழுத்தும் டைட்டில் கார்டில் இடம் பெறும்.
இந்தத் திரைப்படத்தின் கதையும் இது போலத்தான். நல்ல சம்பளத்தில் உள்ள வேலையில் இணைவதற்காக பல உபத்திரவமல்லாத பொய்களைச் சொல்லும் ஓர் இளைஞன், தன்னுடைய வேலையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அந்தப் பொய்களை இன்னமும் வளர்க்க வேண்டியிருக்கிறது. இதற்காக ‘மீசையில்லாமல் தனக்கொரு சகோதரன் இருக்கிறான்’ என்று அவன் சொல்லும் பொய், அவனை இடியாப்பச் சிக்கலில் மாட்டி விடுகிறது. இதிலிருந்து அவன் எப்படி வெளியே வருகிறான்... அதற்காக என்னவெல்லாம் ‘கோல்மால் செய்கிறான்’ என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறது ‘தில்லுமுல்லு’.
ரஜினியின் நகைச்சுவை பரிமாணம் பிரமிக்கத்தக்க அளவில் இந்தத் திரைப்படத்தில் ஒருபுறம் வெளிப்பட்டது. அதற்கு இன்னொரு முக்கிய காரணம் இருந்தது. ஏறத்தாழ நாயகனுக்கு ஈடான பாத்திரத்தை ஏற்றிருந்தவர் தேங்காய் சீனிவாசன். அவர் ஏற்கெனவே பல நகைச்சுவைத் திரைப்படங்களில், தன்னுடைய பிரத்யேகமான பாணியில் நடித்திருந்தாலும் ‘தில்லுமுல்லு’ திரைப்படத்தை அவருடைய நடிப்புப் பயணத்தில் ஒரு சிறப்பான ‘மைல்கல்’ எனலாம்.
பொதுவாக தன்னுடைய திரைப்படங்களில் பங்களிக்கும் நடிகர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க விரும்பும் இயக்குநர் பாலசந்தர், இந்தத் திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனை அவருடைய இயல்பான பாணியில் நடிக்க விட்டு விட்டார். இந்த முடிவு படத்துக்கு கூடுதல் வசீகரத்தைச் சேர்த்தது. ‘தில்லு முல்லு’வின் மகத்தான வெற்றிக்கு ரஜினிக்கு இணையாக கிரெடிட் வழங்கப்பட வேண்டியவர் ‘தேங்காய் சீனிவாசன்’ என்றால் அதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.
நல்லொழுக்கமும் தேச பக்தியும் நல்ல இயல்புகளும் நிறைந்த ஒரு லட்சியவாத தொழிலதிபர் பாத்திரத்தை ஏற்றிருந்தார் சீனிவாசன். (ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி) தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களும் தன்னைப் போலவே நேர்மையாக இருக்க வேண்டும் என்கிற பிடிவாத குணம் உடையவர். இசை, விளையாட்டு என்று வெட்டித்தனமாக பொழுதைப் போக்கும் இளைஞர்களை அவருக்குப் பிடிக்காது.
இதன் மறுமுனையில் குறும்பும் அலட்சியமும் நிறைந்த ஒரு நவீன இளைஞனின் பாத்திரத்தை ஏற்றிருந்தார் ரஜினிகாந்த். இப்படி இரண்டு எதிர்முனைகளும் ஒன்றொன்றையொன்று எதிர்கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யமாகவும் உத்தரவாதமான நகைச்சுவைக்கும் காரணமாக இருந்தன.
தன்னுடைய நிறுவன ஊழியரை தேர்வு செய்வதற்காகத் தேங்காய் சீனிவாசன் இன்டர்வியூ செய்யும் காட்சி ரகளையானது. சட்டையில் பூனை படம் போட்டுக்கொண்டு வரும் இளைஞனை ‘அதில் என்ன பெருமை... கெட்... அவுட்’ என்று விரட்டிவிடுவார்.
சுப்பிரமணிய பாரதி என்று பெயர் உள்ள இளைஞனை அவனது பெயருக்காகவே எழுந்து நின்று வரவேற்பார் சீனிவாசன். ஆனால், அந்த இளைஞன், தமிழை கொத்துப் பரோட்டா போடுவது போல் பேசுவதைக் கண்டு ‘ழன்னாவும் வராது... ஷன்னாவும் வராது… பேரு மட்டும் சுப்பிரமணிய பாரதி’ என்று அவனையும் விரட்டி விடுவார்.
“இந்தக் காலத்துப் பசங்க இப்படி இருக்காங்ளே... என்னால முடியல... நீயே கேள்வி கேளு’ என்று ஹெட்கிளார்க்கை ஏவிவிடுவார் முதலாளி. “சென்னைல... எத்தனை லேடீஸ் காலேஜ் இருக்கு... தேவி பாலா தியேட்டர் டைமிங் என்ன... சிகரெட் விலை என்ன?” என்று ஹெட்கிளார்க் கேட்கும் கேள்விகளுக்கு ‘டான்.. டான்’ என்று பதில் சொல்வான் ஓர் இளைஞன். (இந்த இளைஞனுக்கு குரல் தந்திருப்பவர் உங்களுக்குப் பரிச்சயமானவர்தான். அடுத்த முறை படம் பார்க்கும்போது கவனமாகக் கேட்டுப் பாருங்கள்).
கதராடை அணிந்து, லட்சியவாத வாசனையுடன் ‘எங்கப்பா சொல்வார்... சார்' என்று பொன்மொழிகளை அவ்வப்போது உதிர்க்கும் ‘அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்’ என்கிற இளைஞனை முதலாளிக்குப் பிடித்துவிடும். அப்படியொரு தோரணையில் ‘சந்திரனாக’ வரும் ரஜினி சரமாரியாக அடித்து விடும் பொய்களையெல்லாம் அப்படியே நம்பி ‘உடம்பே புல்லரிக்குதுப்பா’ என்று சீனிவாசன் நெகிழ்ந்து போகும் காட்சிகள் எல்லாம் பட்டாசு ரகம். ஒருபுறம் சிரிப்பு வழிந்தோடும் என்றால், இன்னொரு புறம்... இப்படியொரு அப்பாவியாக இருக்கிறாரே என்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மீது பரிதாபமாக வரும்.
இதில் எனக்கு தனிப்பட்ட வகையில் பிடித்த ஒரு காட்சி உண்டு. சந்திரனின் உருப்படாத தம்பியான ‘இந்திரனை’ வீட்டுக்கு வரச்சொல்வார் சீனிவாசன். தன்னுடைய மீசை பறிபோவதற்கு காரணமாக இருந்தவரை பழிவாங்கும் ஆவேசத்தோடு வருவார் ‘இந்திரன்’. தோட்டத்தில் நீர் பாய்ச்சிக்கொண்டிருக்கும் சீனிவாசனை நோக்கி ‘ஏ கிழவா... உன்னோட முதலாளி இருக்காரா?” என்று வேண்டுமென்றே சீண்டலாகக் கேட்பார்.
அடுத்த காட்சியில் பணக்கார உடையை சீனிவாசன் அணிந்து வந்து... ‘என்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு உன் மனசு துடிக்குதுன்னு எனக்குத் தெரியும்’ என்று சொல்வார். பொதுவாக அதுவரையான தமிழ் திரைப்படங்களில் அப்படித்தான் நிகழும். ஆனால் இதற்கு ‘இந்திரன்’ தரும் கவுண்ட்டர் ரகளையானது.. “நோ.. நோ... தலைப்பாகை கட்டிட்டு... தோட்டத்துல நீர் பாய்ச்சினா... அது தோட்டக்காரன்னுதான் தோணும். உங்க அந்தஸ்துக்கு அதைச் செஞ்சது உங்க தப்பு. நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்?” என்று அமர்த்தலாக அளிக்கும் பதில் அட்டகாசமாக இருக்கும்.
கையில் சாவியைச் சுழற்றிக்கொண்டே… ஸ்டைலான நடையுடன் நுழைந்து “மிஸ்டர் ஸ்ரீராம்…’ என்று அலட்சியமாக ரஜினி அழைக்கும் விதமும்... "யாரது.. யாரது..?” என்று அதற்கு சீனிவாசன் தரும் பதற்றமான எக்ஸ்பிரஷனும் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கக்கூடியது.
“சிந்து பைரவி ராகத்த சிவரஞ்சனி ராகத்துல மிக்ஸ் பண்ணி... அட்டானா ராகத்த அவரோகணத்துல புடிச்சு, தொடைல ஆதி தாளம் போட்டா... கிடைக்கற ராகம் கல்யாணியா, காம்போதியா… கரகரப்பிரியாவா, சண்முகப்பரியாவா.. இல்ல ஸ்ரீப்ரியாவா..?” என்று ‘இந்திரன்’ கன்னாபின்னாவென்று மிக்ஸ் செய்து கேட்கும் அந்த சங்கீதக் கேள்வி சுவாரசியமானது. இதை ‘அரக்கோணத்துல பிடிச்சு...’ என்று தன்னுடைய பாணியில் தன் தங்கையிடம் தப்பும் தவறுமாக சீனிவாசன் சொல்வது ரகளையான மாடுலேஷன்.
‘தில்லு முல்லு’ திரைப்படத்தின் casting வரிசையும் சுவாரஸ்யமானது. ஏறத்தாழ தேங்காய் சீனிவாசனுக்கு இணையாகக் கலக்கியிருப்பார் செளகார் ஜானகி. இவர் ஏற்கெனவே ‘பாமா விஜயம்’ உள்ளிட்ட சில பாலசந்தரின் நகைச்சுவைத் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பொதுவாக ‘அழுது வடியும்’ குணச்சித்திர பாத்திரங்களில்தான் அதிகம் நடித்தவர். இப்படியொரு பிம்பத்தை அதிரடி நகைச்சுவையில் பயன்படுத்த அசாதாரணமான துணிச்சல் வேண்டும். அது பாலசந்தருக்கு இருந்தது.
வீட்டின் பின்புறம் சுவரேறிக் குதித்து, ஸ்ட்ண்ட் நடிகர்களுக்கு இணையாக செளகார் ஜானகி சாகசம் செய்த காட்சிகளைப் பார்த்தால் இன்றும் வியப்பாக இருக்கும். தேங்காய் சீனிவாசன் வீட்டிற்கு வருகை தரும் காட்சிகளில் எப்படியோ தம் பிடித்து சமாளித்து பிறகு அவர் சென்றவுடன் ‘நான் செத்தேன்...’ என்று செளகார் ஜானகி நாற்காலியில் சாய்ந்துவிடும் காட்சிகள் எல்லாம் ரகளையான நகைச்சுவை. சந்தர்ப்ப சூழல் காரணமாக, ரஜினியைப் போலவே இவரும் ‘இரட்டை’ சகோதரி பாத்திரத்தை உருவாக்கி விட்டு பிறகு அல்லாடுவது சுவாரஸ்யம்.
தன்னுடைய படத்தில் நடிக்கும் நடிகர்களின் தனிப்பட்ட மேனரிசங்கள், திறமைகள் போன்வற்றை படத்திலும் பயன்படுத்திக்கொள்வது பாலசந்தரின் ஸ்டைல்களில் ஒன்று. ஸ்கேட்டிங்கில் விஜிக்கு இருந்த பழக்கத்தைக் கவனித்த இயக்குநர், அதையே திரைப்படத்தில் பயன்படுத்திக்கொண்டது சுவாரஸ்யம்.
ரஜினியின் மாமாவாகவும் சீனிவாசனின் குடும்ப டாக்டராகவும் வரும் பாத்திரத்தில் பூர்ணம் விஸ்வநாதன் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருப்பார். இது தவிர நாகேஷ், லஷ்மி, விசு, பிரதாப் போத்தன், ஒய்.விஜயா போன்றவர்கள் அவர்களின் ஒரிஜினல் அடையாளங்களில் தலையைக் காண்பித்திருப்பார்கள். நாயகியாக மாதவி நடித்திருப்பார். `காந்தக் கண்ணழகி’ என்னும் அடைமொழி இவருக்குத்தான் நன்கு பொருந்தும்.
இறுதிக்காட்சியில் ரஜினிக்கு ஆதரவாக வாதாடும் `சாருஹாசன்’ என்னும் பெயருடைய வழக்கறிஞராக ‘கமல்ஹாசன்’ நடித்திருப்பார். தான் நடித்திருந்த திரைப்படங்களின் தலைப்புகளைக் கொண்டே இவர் வாதாடி சீனிவாசனை ‘ஜெர்க்’ ஆக்க முயல்வதும், அதைக் கேட்டு "என்னய்யா... நீ... ஒரிஜினல் வக்கீல் மாதிரியே பேச மாட்டேன்றே” என்று தேங்காய் சீனிவாசன் பயத்துடன் ஆட்சேபிப்பதும் ரகளையான காட்சி. ஒருவகையில் ரஜினியும் கமலும் இணைந்து தோன்றிய இறுதியான திரைப்படம் இதுவே. (இது வருங்காலத்தில் மாறும் அதிசயம் நடக்குமா?).
ரஜினியின் உடல்மொழியையும் ஸ்டைலையும் அப்படியே பின்பற்றி, ரஜினியை மிரட்டிப் பணம் பறிக்கும் பாத்திரத்தில் ஒரு சிறுவன் கலக்கியிருப்பான்.
‘தில்லு முல்லு’ திரைப்படத்துக்கு இசையமைத்தவர், பாலசந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன். ‘ராகங்கள் பதினாறு’ என்னும் ஆபேரி ராகத்தில் அமைந்த பாடல் இன்றளவும் கேட்பதற்கு மிக மிக இனிமையானது. எஸ்.பி.பி இதை அருமையாகப் பாடியிருப்பார். `நல்லதிற்கு பொய் சொல்லலாம்’ என்கிற நீதியை பல்வேறு வரிகளில் நியாயப்படுத்தும் டைட்டில் பாடலான ‘தில்லு முல்லு உள்ளமெல்லாம் கள்ளு முள்ளு’ பாடலும் துள்ளலிசையைக் கொண்டது.
‘தங்கங்களே... தம்பிகளே...’ என்கிற பிறந்தநாள் கொண்டாட்ட விழாப்பாடலில் எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, கமல், ரஜினி ஆகிய நடிகர்களின் வேடத்தில் வந்து ஆடிப்பாடுவார் ரஜினி. வெகுசன சுவாரஸ்யத்துக்காக திணிக்கப்பட்டது போல் தோன்றினாலும் இதுவும் ஒரு சுவாரஸ்யமான பாடலே. மலேசியா வாசுதேவன் குரல் மாற்றி மாற்றிப் பாடினது ஜாலியாக இருக்கும். ஹஸ்கியான குரலில் வாணி ஜெயராம் வித்தியாசமாகப் பாடியுள்ள ‘அந்தி நேரம்’ என்கிற பாடலும் மிக இனிமையானது.
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.
‘இந்தத் தமிழ்த் திரைப்படம் எந்த அயல்நாட்டுத் திரைப்படத்திலிருந்து நகலெடுக்கப்பட்டது?’ என்கிற ஆராய்ச்சிக் குறிப்பு இந்தத் தொடரின் பல கட்டுரைகளில் இடம்பெற்றிருந்தது அல்லவா? ‘தில்லுமுல்லு’வுக்கு அப்படிப்பட்ட ஆராய்ச்சி தேவையில்லை.
1979-ல் வெளியான Gol Maal என்கிற இந்தித் திரைப்படத்தின் அதிகாரபூர்வமான ‘ரீமேக்’தான் ‘தில்லு முல்லு’. இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவரான ஹிரிஷிகேஷ் முகர்ஜி, இந்தி ஒரிஜினல் வடிவத்தை இயக்கியிருந்தார்.
இந்தியில் மகத்தான வெற்றியைப் பெற்ற ‘கோல் மால்’ திரைப்படத்தில் ரஜினி ஏற்றிருந்த பாத்திரத்தை, அமோல் பலேகரும், தேங்காய் சீனிவாசனின் பாத்திரத்தை ‘உத்பல் தத்’தும் ஏற்று சிறப்பாக நடித்திருந்தனர். தமிழோடு ஒப்பிடும்போது இந்தி வடிவமானது அடக்கமான தொனியைக் கொண்ட நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும்.
ஏற்கெனவே சிறப்பாக வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தால் மறு ஆக்கம் செய்யும்போது ஒரிஜினலை விடவும் அதிகமாக ஒரு படியைத் தாண்டுவதுதான் ஒரு சிறந்த இயக்குநர் செய்யும் வேலை. ஆனால், பொதுவாக ஒரிஜினல் வடிவத்தை சிதைத்து கொத்துப் பரோட்டா செய்யும் வேலைதான் அதிகம் நடைபெறுகிறது.
இந்த விபத்து நடைபெறாமல், இந்தி வடிவத்தை விடவும் ‘தில்லு முல்லு’ சுவாரஸ்யமாக அமைந்ததற்கு பிரதான காரணமாக இருந்தவர் பாலசந்தர் என்னும் மேதை என்றால் அது மிகையாகாது.
இன்னொரு முக்கியமான ஒருவரின் பெயரைக் குறிப்பிடாவிட்டால் இந்தக் கட்டுரை முழுமை அடையாது. தமிழ் வடிவத்தின் ‘திரைக்கதை - வசனத்தை’ எழுதியவர் விசு.
ஏறத்தாழ ஒரிஜினலின் அதே காட்சியமைப்புகளை தமிழ் வடிவம் பின்பற்றியிருந்தாலும் அது தனித்தன்மையுடனும் கூடுதல் சுவாரஸ்யத்துடனும் அமைந்ததற்கு விசுவின் நகைச்சுவை எழுத்து இன்றியமையாத காரணமாக அமைந்தது. அரசியல் நையாண்டிகளும் ஆங்காங்கே படத்தில் இடம் பெற்றிருந்தன.
‘கோல் மால்’ என்கிற இந்தித் திரைப்படம், அந்தச் சமயத்தில் தமிழில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் ஆனது. சிங்கள மொழியில்கூட 1988-ல் ரீமேக் செய்யப்பட்டது.
‘தில்லு முல்லு’, 2013-ல் சிவா நடிப்பில் இன்னொரு ரீமேக் ஆக உருவானது. சிவாவின் நகைச்சுவைப் பாணிக்கு ஏற்ற கதைதான் என்றாலும் அசலில் இருந்த சுவாரஸ்யமும் புத்துணர்ச்சியும் 2013-ல் வெளிவந்த வடிவத்தில் இல்லை என்பதுதான் பார்வையாளர்களின் பொதுக்கருத்தாக இருக்கிறது.
‘சபாஷ் மீனா’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘மைக்கேல் மதன காமராஜன்' போன்ற மிகச் சிறந்த கிளாசிக் காமெடி படங்களின் வரிசையில் ‘தில்லு முல்லு’வுக்கு பிரத்யேக இடம் எப்போதும் உண்டு. இன்றளவும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்து ரசிக்கக்கூடிய எவர்கிரீன் காமெடி படம்.
இந்தப் படத்துக்கு அப்போது ஆனந்த விகடன் எழுதிய விமர்சனத்தைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.
இந்தப் படம் குறித்த உங்களின் `நச்' விமர்சனம் ப்ளீஸ்!
source https://cinema.vikatan.com/tamil-cinema/revisiting-rajini-and-balachanders-comedy-classic-thillu-mullu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக