Ad

திங்கள், 29 ஜூன், 2020

`மேல்நிலைப்பள்ளி பாடங்கள் குறைப்பு!' -என்னவாகும் எதிர்காலம்? #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

`மலை வாழை அல்லவோ கல்வி' என்று பாடினார் பாரதிதாசன். எளியோர்க்கு கல்வி என்பது மலை வாழை போல் அபூர்வமானது. அதை வீணடிக்காது அவசியம் படிக்க வேண்டும் எனும் நோக்கில் சொல்லியிருப்பார். இன்றும் எளியோர்களின் ஒரே மூலதனம் கல்வி மட்டுமே.

தமிழகத்தில் முன்பு மாநில அரசே கல்விக் கொள்கைகளை வகுத்து செயல்படுத்தியது. கல்வியும் மாநிலப் பட்டியலில் இருந்து வந்தது. 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து 1976-ம் ஆண்டில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு தமிழகத்தில் 1977-1978-ம் ஆண்டு 10, +2 எனும் அடிப்படையில் மேல்நிலைக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. அறிவியல், கலை, தொழில்பாடம் எனப் பிரிவுகள் இருக்கும். அதில் மொழிப்பாடம் தவிர்த்து நான்கு முதன்மைப்பாடம் இருக்கும். அதை மாணவ மாணவியர் விருப்பம்போல் தேர்ந்தெடுத்து பயின்று வந்தனர்.

Representational Image

இதில் சமீபத்தில் மாற்றம் செய்து கடந்த சில ஆண்டுக்கு முன் 1200-க்கு பதில் 600 மதிப்பெண்ணாக மாற்றப்பட்டது. அதாவது பாடத்துக்கு நூறு மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டது. எனினும் 6 பாடங்கள் தொடர்ந்தன.

நடைமுறையில் உள்ள பாடத்திட்ட பிரிவின்படி இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் என அறிவியல் பிரிவும் பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், கணினி பயன்பாட்டியல் என 4 பாடங்கள் இருக்கும். அகில இந்திய அளவில் ஒப்பிடும்போது உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் நல்லநிலையில் தமிழக மாணவர்கள் தற்போதும் சிறந்து விளங்குவதற்கு இத்தகைய பாடப்பிரிவுகளே காரணம்.

12-ம் வகுப்பு முடிக்கும் அறிவியல் பிரிவு மாணவர் பி.இ, எம்.பி.பி.எஸ், அக்ரி எனச் செல்ல முடியும். தற்போது மாணவர்களின் மனஅழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் ப்ளஸ் 1 வகுப்பில் 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளைப் பள்ளியில் நடைமுறைப்படுத்த ஆணையிட்டுள்ளது.

அதன்படி, ப்ளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள 4 முதன்மைப் பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து, புதிதாக 3 முதன்மைப் பாடத் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது 600 மதிப்பெண் அல்லது 500 மதிப்பெண் என இருவகைப் பிரிவுகள் நடப்பாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பாடத்திட்ட குறைப்பினைத்தான் பல்வேறு கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசாணை எண் 166, நாள் 18.09.2019

புதிய அம்சங்கள் என்ன?

அரசாணை எண் 166, நாள் 18.9.2019-ன்படி.. முதன்மைப் பாடங்கள் இனி 3 மட்டும் இருக்கும். புதிய பாடத்திட்டப் படி மொழிப்பாடம் தவிர்த்து,

*அறிவியல் பிரிவில்

1) இயற்பியல், வேதியியல், கணிதம்

2) இயற்பியல், வேதியியல், உயிரியல்

3) இயற்பியல், கணிதம், கணினி அறிவியல்

4) வேதியியல், உயிரியல், மனை அறிவியல்

*கலைப்பிரிவில்

1) வணிகவியல், பொருளியல், வணிககணிதம்

2) வணிகவியல், பொருளியல், வணிக கணிதம்

3) வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல்

ஒவ்வொரு பிரிவிலும் ஒரு பாடம் குறைக்கப்பட்டுள்ளது.

*சிபிஎஸ்சியில் ஒரு மொழிப்பாடம் +நான்கு முதன்மைப்பாடம் அல்லது இரு மொழிப்பாடம்+மூன்று முதன்மைப்பாடம் மற்றும் விருப்பப் பாடமாய் பிறிதொன்றும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என உள்ளது.

சாதகமும், பாதகமும்!

மூன்று பாடங்களை முதன்மைப் பாடமாய் பயிலும்போது சாதகமும் பாதகமும் உண்டு. இந்த மாற்றம் குறித்து என்னளவில் தோன்றிய சாதக பாதகங்களை இங்கே பகிர்கிறேன்..

*மருத்துவம் அல்லது பொறியியல் ஒன்றில் மட்டுமே நுழைய முடியும்.

மருத்துவம் கிடைக்கவில்லையெனில் இன்ஜினீயரிங் செல்ல முடியாது

*குறிப்பிட்ட படிப்பு மட்டும் படித்தால் அதில் ஆழ்ந்து படிக்கலாம் என்கின்றனர் சில கல்வியாளர்கள்.

*அறிவியல் பிரிவில் கணினி அறிவியலும், கலைப்பிரிவில் கணினி பயன்பாட்டியலும் தற்போது நடைமுறையில் உள்ளது.

கலைப்பிரிவு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் இல்லை.

பயன்பாட்டியல் (applications) மட்டும் உண்டு.

*கணிதமே முக்கிய நுழைவுத் தேர்வுகளுக்கு முதுகெலும்பு போல. அப்பாடம் பயில வாய்ப்பு இல்லையெனில் எதிர்காலத்தில் சிரமம் ஏற்படும்.

*கணிதம் படிக்கும்போது இயற்பியலில் வரும் கணக்குகள் எளிதாய் இருக்கும். வெறும் அறிவியல் மட்டும் படிக்கும்போது அதில் வரும் கணக்குகள் செய்ய இடர்பாடுகள் ஏற்படும்

*பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் எனவும், மன அழுத்தம் குறையும் என்று கூறி அவர்களின் எதிர்காலத்தை முடக்குகின்றனர்.

* கணினி அறிவியல் குறைவாக உள்ளதால் எதிர்காலத்தில் பி.இ, பி.டெக்கில் சேருவோர் குறைவர். கணினி அறிவு குறைவாய் இருக்கும்பட்சத்தில் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு குறையும்

Representational Image

#மாணவர்களின் எதிர்காலம்

மேல்நிலை வகுப்பில் இருக்கும் பாடங்கள் அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

இதில் ஒன்று குறைந்தாலும் மற்ற பாடங்களில் பாதிப்பு ஏற்படும். ஒரு மாணவனிடம் 4 பாடம் வேண்டுமா 3 பாடம் வேண்டுமா எனில் குறைவானதை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், அதில் உள்ள இடர்களைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

மாணவ மாணவியர் சிறந்து விளங்க 6 பாடங்கள் பயில்வதுதான் முக்கியம். மருத்துவம் கிடைக்காத 90%-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த காலத்தில் பொறியியல் படித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டித்தேர்வு எழுதும்போது 6 பாடங்கள் படித்தது நிச்சயம் உதவும்.

தற்போது புதிய பாடத்திட்டத்தின் மூலம் பயிலும் ஒருவர் குறைவான பாடங்கள் மட்டும் படித்து தனக்கான எதிர்கால வாய்ப்பு குறைந்துள்ளதையே எதிர்காலத்தில்தான் உணர்வார். கிராமப்புற மாணவர் நிலை இன்னும் மோசமாகும். பள்ளி அளவில் பாடம் குறைத்தால் உயர்கல்வியிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். இல்லையெனில் விழலுக்கு இரைத்த நீராகிவிடும்.

Representational Image

பெண்கல்வி குறித்து சொல்ல வேண்டியதே இல்லை. படிப்பதற்கான வாய்ப்பு உயர்கல்வியில் குறையும்.

கணிதம் பயிலாமல் அறிவியல் மட்டும் பயில்வது ஒரு கண்ணால் மட்டும் பார்ப்பதுபோல ஒருதலைப்பட்சமானது. கலைப்பிரிவில் பி.எஸ்ஸி இயற்பியல் சேரும்போது கணிதம் பயிலவில்லையெனில் நினைத்துப்பாருங்கள் அவர்களின் நிலையை. நீட் தேர்வில் கணிதம் இல்லையெனில் மருந்து சீட் மட்டும் நம் கையிலிருக்கும் மருத்துவ சீட் இருக்காது எதிர்காலத்தில்.

பாடத்தின் கடினத்தன்மை குறைக்கலாம். பாடத்தையே குறைப்பதில் என்ன நியாயம்?

ஐந்து பாடம் அல்லது ஆறு பாடம் என விருப்பமாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் தங்களுக்கு உகந்த பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம்.

உயர்கல்வி என்பது ஒரு சாராருக்கு போட்டித்தேர்வுக்கு உதவும் வாய்ப்புள்ள கருவியாகும். அவர்கள் பள்ளி அளவில் படித்ததை வைத்தே அடுத்த கட்டத்துக்குச் செல்கின்றனர். எனவே, இவையெல்லாம் கவனத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும் என்பதே எளியோரின் நிலை. எதிர்காலத்திற்கான வாய்ப்பு எல்லாருக்கும் வேண்டும் என்பதே மாணவர்கள் மனநிலை.

-மெல்லினா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/tamilnadu-higher-education-department-order-and-its-demerits

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக