Ad

ஞாயிறு, 28 ஜூன், 2020

கொரோனா குணமாகிவிட்டதா என எப்படிக் கண்டறிவது? #Covid-19 FAQ

கொரோனா நோய் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்குப் புரிந்துவிட்டது. ஆனால், நோய் வந்து குணமானதும் என்ன செய்ய வேண்டும், நோய் குணமாகிவிட்டது என்று எப்படி உறுதிசெய்வது என்ற புரிந்துணர்வு நம்மிடம் இல்லை. இந்த நோய்க்குத் தடுப்பூசியே தேவையில்லை. அதைக் கண்டறிவதற்குள் கொரோனா வைரஸ் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று இத்தாலியைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Dr.Ram Gopal Krishnan

இதுபோன்ற பல்வேறு புதிய புதிய தகவல்கள் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. குழப்பங்களுக்கும் சந்தேகங்களுக்கும் விடையளிக்கிறார் தொற்றுநோய் மருத்துவர் ராம் கோபால் கிருஷ்ணன்.

கோவிட்-19 நோயாளிகள் தொற்று நீங்கிவிட்டது என்பதை அறிந்துகொள்ள மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டுமா?

மனித உடலில் உயிருடன் இருக்கும் வைரஸை ஆய்வு செய்ய வைரஸ் கல்ச்சர் என்ற பரிசோதனை செய்யப்படும். ஒரு சோதனைக்குழாயில் வைரஸைப் போட்டு அது வளர்கிறதா என்று ஆய்வு செய்வார்கள். தொழில்நுட்பம் அதிகமுள்ள பெரிய ஆய்வகத்தில்தான் அந்தப் பரிசோதனையைச் செய்ய முடியும். அப்படி ஆராய்ந்தபோது 8 நாள்களுக்கு மேல் அந்த வைரஸ் வாழாது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நோய் குணமானவர்களுக்கு மீண்டும் பரிசோதனை தேவையில்லை என்று அமெரிக்க நெறிமுறைகளில் மே 5-ம் தேதி மாற்றம் செய்துவிட்டனர். அதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐ.சி.எம்.ஆர்) அதன் நெறிமுறைகளை மாற்றிவிட்டது.

rtPCR test for Covid-19

ஒரு பாதுகாப்புக்காகத்தான் 14 நாள்கள் நோயாளிகளைத் தனிமைப்படுத்தச் சொல்கிறார்கள். 10 நாள்களுக்கு மேல் சிகிச்சை முடிந்து, நோயாளிகள் நன்றாக இருக்கிறார்கள் என்றால் மீண்டும் எந்தப் பரிசோதனையும் தேவையில்லை.

சில நோயாளிகளுக்கு அறிகுறிகள் குணமடைந்த இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பிறகுகூட பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வரும். இறந்து போன வைரஸ் உடலில் தங்கியிருந்தாலும் அந்த முடிவு கிடைக்கும். அதனால் அச்சப்படத் தேவையில்லை.

2021 செப்டம்பர் மாதம் வரை இந்த நோய்ப் பரவல் இருக்கும் என்றும், தடுப்பு மருந்து கண்டறியும் முன்னரே வைரஸ் அழிந்துவிடும் என்றும் இருவேறு கருத்துகளை நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மை நிலை என்ன?

மருத்துவ அறிவியலுக்கே இது புதிய நோய். இது போன்ற பெருந்தொற்று இதுவரை ஏற்பட்டதேயில்லை. அதனால் யாராலும் துல்லியமாக இதைப் பற்றி கணிக்க முடியாது. அதனால்தான் ஒவ்வொரு நிபுணரின் கருத்தும் வேறுபடுகிறது. ஒருவேளை இன்னும் ஓரிரு ஆண்டுகள் இந்த நோய் நம்முடன்தான் இருக்கப் போகிறது என்றால் அதற்கேற்றாற்போல் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும். 2 மீட்டர் தனிமனித இடைவெளி மிகவும் முக்கியம்.

Social distancing

ஏ.சி பயன்பாடு மிகவும் ஆபத்து. ஏ.சி பயன்பாடு இருந்தால் கொரோனா வைரஸால் எங்கும் தப்பிக்க முடியாது என்பதால் அங்கிருக்கும் மனிதர்களின் மூச்சுக்குள் போய்க்கொண்டே இருக்கும். அதனால் காற்றோட்டமுள்ள இடங்களில் இருக்க வேண்டும். கைகழுவும் பழக்கமும் முக்கியமானது.

இந்தப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்துவிட்டால் திரையங்குகள், ஹோட்டல், விமானப் பயணம் என எங்கும் செல்லலாம். எத்தனை ஆண்டுகள் வேண்டுமென்றாலும் கொரோனாவுடன் வாழலாம். ஆனால், அந்த ஒழுங்கு நமக்குள் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. அதனால்தான் ஊரடங்கு போன்ற கட்டாய விதிமுறைகள் விதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படுகிறது.

ஹெர்டு இம்யூனிட்டி என்ற கருத்தாக்கம் இந்தியாவுக்குப் பொருந்துமா?

தடுப்பு மருந்தின் அடிப்படையில்தான் ஹெர்டு இம்யூனிட்டி (குழு நோய் எதிர்ப்பு சக்தி) என்பதை அடைய முடியும். போலியோ, பெரியம்மை போன்ற நோய்களுக்கு தடுப்பு மருந்தின் மூலம்தான் ஹெர்டு இம்யூனிட்டி வந்தது.

அதாவது, 65 சதவிகிதம் மக்கள்தொகைக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டால் மீதம் 35 சதவிகிதம் பேருக்கு நோய் பரவாது. தடுப்பு மருந்தைக்கொண்டு ஹெர்டு இம்யூனிட்டியை அடைவது பாதுகாப்பானது. ஆனால், நோய்ப் பரவல் ஏற்பட்டு அதன் மூலம் எதிர்ப்பு சக்தியை மக்களிடம் உருவாக்குவது என்பது சற்று ஆபத்தான விஷயம்தான்.

இந்திய மருத்துவக் கழகத்தின் புதிய ஆராய்ச்சி முடிவில் இந்திய மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம் பேர்கூட இன்னும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போதே 16,095 உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட்டன. இந்நிலையில் 65 சதவிகிதம் பேருக்குத் தொற்று ஏற்பட்டு ஹெர்டு இம்யூனிட்டி வருவதற்கு ஓரிரு ஆண்டுகள் ஆகிவிடும்.

அதற்குள் இறப்பு எண்ணிக்கை எங்கோ போய்விடும். இடைப்பட்ட காலத்தில் தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு 65 சதவிகிதம் பேருக்கு கொடுத்துவிட்டால் மீதம் 35 சதவிகிதம் பேருக்குப் பரவாது. அதனால் ஹெர்டு இம்யூனிட்டி இந்தியாவுக்குப் பெரிய அளவில் பொருந்தாது.

Standard Q Antigen Test நமக்குப் பயனளிக்குமா? ரேபிட் டெஸ்ட் போன்று சொதப்பவும் வாய்ப்பிருக்கிறதா?

நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், அந்தப் பரிசோதனையை எங்கே செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். Standard Q Antigen பரிசோதனைக்கு மின்சாரம் தேவையில்லை. மிகவும் எளிய ரத்தப் பரிசோதனை, மருத்துவத் துறையைச் சேராதவர்களுக்குக்கூட பயிற்சி அளித்து பரிசோதனை செய்ய வைக்க முடியும். ஆய்வகக் கட்டமைப்பு இல்லாத இடத்தில்கூட பரிசோதனை செய்யலாம். நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் இதன் மூலம் வீடு வீடாகச் சென்றுகூட பரிசோதனை செய்து பார்க்க முடியும்.

Covid -19 test

பிரச்னை என்னவென்றால் 50 முதல் 80 சதவிகிதம் வரைதான் இது நோயைக் கண்டறியும். அப்படியென்றால் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளைக் கண்டறிய முடியாமல் போகலாம். ஐ.சி.எம்.ஆர். விதிகளின்படி, Standard Q Antigen பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்து, கொரோனா அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.

பாசிட்டிவ் முடிவு வந்தால் அதில் மாறுபாடு இருக்காது. சென்னை போன்ற அதிக ஆய்வக வசதியுள்ள நகரங்களுக்கு Standard Q Antigen பரிசோதனை தேவைப்படாது. கிராமப்புறப் பகுதிகளுக்கு அல்லது வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்ய நேரும்போது இது பயனளிக்கும்.

சி.டி.ஸ்கேன் பரிசோதனையிலும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படுகிறதே. அதையும் ஒரு பரிசோனை முறையாகக் கருத்தில் கொள்ளலாமா?

ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நூற்றில் 70 பேரைக் கண்டறிய முடிகிறது என்றால் சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் 80 - 85 சதவிகிதம் பேரைக் கண்டறிய முடியும். ஆனால், சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் தெரியும் நுரையீரல் மாறுபாடு ஃப்ளூ காய்ச்சல், இதயப் பிரச்னைகளால்கூட ஏற்படலாம்.

CT Scan

கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்து, கொரோனா அறிகுறிகள் இருந்தால் சி.டி.ஸ்கேன் மூலம் அதில் தொற்று இருக்கிறதா என்று கண்டறிய முடியும். சி.டி.ஸ்கேன் மிகவும் விலை அதிகமுள்ள பரிசோதனை. அதன் தேவை இருக்கும் தனிப்பட்ட நோயாளிகளுக்கு அதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், பொதுமக்களுக்கு நோயைக் கண்டறிய சி.டி.ஸ்கேன் தேவையில்லை.

முதியவர்கள் குறிப்பாக முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கான பாதுகாப்பு ஆலோசனைகள் என்ன?

முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு நோய் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் முதியோர்களுக்கான நர்ஸிங் ஹோம்கள் அதிகம். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் வசிக்காமல் அங்கு வாழ்வார்கள். அதுபோன்ற இடங்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளன.

Old age home

ஒருவருக்கு இருந்தால்கூட முதியோர் மத்தியில் விரைவில் அதிகமாகப் பரவிவிடும். முதியோர் இல்லத்தில் வசிப்போருக்கு அங்கு பணியாற்றும் உதவியாளர், சமையல்காரர் போன்று யார் மூலமாகவோதான் நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே, அவர்களை அடிக்கடி முழுவதுமாகப் பரிசோதிக்க வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் உடனே கோவிட்-19 பரிசோதனை செய்துவிட வேண்டும். முகக்கவசம், கைகழுவுதல், தனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகிய பழக்கங்களையும் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்த பகுதிகளில் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறதே?

இரண்டும் சளி, எச்சில், தொடுதல் ஆகியவற்றால் பரவக்கூடிய நோய்தான். ஆனால், கொரோனா பன்றிக்காய்ச்சலைவிட அபாயமானது. அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரே ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவலாம். மற்றபடி இரண்டு நோய்க்கும் தொடர்பில்லை.

Covid-19 & H1N1

தமிழகத்தில் உச்சநிலை எப்போது ஏற்படும்? அதைக் கையாள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தமிழகத்தில் உச்சநிலை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் குறைவு. வென்டிலேட்டர் சிகிச்சையைக் கையாளும் மருத்துவர்களும் அரசு மருத்துவமனைகளில் மிகவும் குறைவாக உள்ளனர். மேலும் செவிலியர்கள் பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது.

சிகிச்சையளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் கொரோனா சிகிச்சைக்காகப் புதிய மருத்துவமனையை உருவாக்குவதாலோ, படுக்கை எண்ணிக்கையை அதிகரிப்பதாலோ எந்தப் பயனும் இல்லை.

மேலும் மருத்துவமனைகளை உருவாக்கும்போதும், தற்போது செயலாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சிகிச்சைக்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே, சென்னையில் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

Hospital

Also Read: கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவுக்கு எப்போது கிடைக்கவரும்? #Covid19FAQ

ஆனால், தற்போதுதான் கொரோனாவின் உச்சநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் எனும்போது எவ்வளவு தேவை இருக்கிறது என்பதை அரசு யூகிக்க வேண்டும். கொரோனாவுடன் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதால், போர்க்கால அடிப்படையில் அவசரமாக மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/how-can-we-tackle-covid-19-effectively-doctor-explains

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக