Ad

ஞாயிறு, 28 ஜூன், 2020

புதுச்சேரி: முதல்வர் அலுவலகத்தில் கொரோனா; தனிமையில் நாராயணசாமி

முதல்வர் அலுவலகத்தில் கொரோனா:

புதுச்சேரியில் தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்று மக்களை பீதியடைய வைத்திருக்கிறது. முதல் மற்றும் இரண்டாம் ஊரடங்கு உத்தரவின்போது இரட்டை இலக்கத்தில் இருந்த தொற்றின் எண்ணிக்கை தற்போது 619 ஆக உயர்ந்திருக்கிறது. 221 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் மீதமுள்ள 388 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சட்டப்பேரவை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி

சிகிச்சைப் பலனளிக்காமல் இதுவரை 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். புதுச்சேரியில் தற்போது அதிகப்படியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 27-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 517 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பரிசோதனை:

அதில் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

முதல்வர் அறையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது

மேலும் அவர் வசிக்கும் உருளையன்பேட்டை கண்ணகி தெருவுக்கும் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் நாராயணசாமியின் வீடு மற்றும் அலுவலகப் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸார் என 74 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதல்வர் வீட்டில் பரிசோதனை:

முதல்வர் நாராயணசாமியின் எல்லையம்மன் கோயில் தெரு வீட்டில் அவருக்கும், அவரது முதன்மை அதிகாரிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல அவரது அலுவலக ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்களுக்கு ஈ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை

சட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், சட்டப்பேரவை வளாகம் முழுவதுமாக மூடப்பட்டிருக்கிறது. அத்துடன் 5 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்வதுடன், பொது நிகழ்வுகளில் பங்கெடுக்காமல் இருக்கும்படியும் முதல்வர் நாராயணசாமிக்கு அறிவுறுத்தியிருக்கிறது சுகாதாரத்துறை.

அதேசமயம் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவுவதற்கு ஊரடங்கு தளர்வும், சென்னையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் முழு ஊரடங்கும்தான் காரணம் என்று தெரிவித்திருக்கிறது சுகாதாரத்துறை.

Also Read: `தொற்றுநோய் தடுப்புச் சட்டம்; ஓராண்டு சிறைத்தண்டனை!'-கொரோனா விவகாரத்தில் கொதித்த முதல்வர் நாராயணசாமி

முதல்வர் அலுவலகம் வரை நுழைந்திருக்கும் கொரோனா தொற்றால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், அரசு உயர் அதிகாரிகளும் கலக்கத்தில் இருக்கின்றனர்.



source https://www.vikatan.com/news/india/puducherry-cm-narayanasamy-isolated-himself-because-of-a-staff-who-infected-by-corona-in-his-office

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக