Ad

வெள்ளி, 26 ஜூன், 2020

சாத்தான்குளம்: `உடற்கூறாய்வுக்கு முன்னரே எப்படி முதல்வர் காரணம் சொன்னார்?’ - கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 22-ம் தேதி மாலையில் பென்னிக்ஸும் 23-ம் தேதி காலையில் ஜெயராஜும் மர்மமான முறையில் அடுத்தடுத்த சில மணிநேரங்களில் உயிரிழந்தனர். காய்ச்சல், நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக போலீஸார் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் வியாபாரிகள், பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆறுதல் கூறிய கனிமொழி

பல கட்சித் தலைவர்களும் கண்டனத்தைத் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். மற்ற காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, `இரண்டு உதவி ஆய்வாளர்கள் மீதும் இரட்டைக்கொலை வழக்கு பதிவு செய்தால்தான் உடல்களை வாங்குவோம்’ என ஜெயராஜின் மனைவி மற்றும் மகள்கள் கூறினர். வியாபாரிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், `கணவர், மகனின் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ என ஜெயராஜின் மனைவி செல்வராணி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். பின்னர், பிரேதப் பரிசோதனைக்கு முன்பாக ஜெயராஜின் மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ``உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து இருவரது இறப்பு குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

பென்னிக்ஸ் - ஜெயராஜ்

இருவரது உடலில் படிந்துள்ள கைரேகைகள் மற்றும் காயப்பட்ட தடயங்கள் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரும் வகையில் இருப்பதால் அதை நீதிமன்றம் உறுதி செய்து உரிய நீதி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், அப்பா, தம்பி உயிரிழந்ததை நினைத்து அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் உள்ளதால் இருவரது உடல்களைப் பெற்றுக்கொள்கிறோம்’ என ஜெயராஜின் மகள் பெர்சி கூறினார்.

Also Read: சாத்தான்குளம்:`அப்பா, மகன் தரையில் புரண்டதால் ஏற்பட்ட காயம்!'- எஃப்.ஐ.ஆர் சர்ச்சை

இதையடுத்து, நேற்று மாலை 3.30 மணிக்கு இருவரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. சாத்தான்குளத்துக்கு மாலை 6 மணியளவில் உடல்கள் எடுத்து வரப்ப்பட்டன. அப்போது, போலீஸாரின் வாகனங்களை வியாபாரிகள், ஊர் மக்கள் முற்றுகையிட்டு போலீஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால், சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயராஜின் செல்போன் கடையின் முன்பாகத் தந்தை, மகனின் உடல்கள் வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இரவு 8 மணி அளவில் அடக்கம் செய்யப்பட்டது. இருவரின் இறப்பைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

செல்போன் கடைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடல்கள்

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, திருச்செந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதன், ஓட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சண்முகையா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இருவரது இறப்பு குறித்து முறையாக விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கனிமொழி எம்.பி தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி கனிமொழி, ``கொலைக் குற்றவாளிகள் போல தந்தை, மகன் இருவரையும் போலீஸார் நடத்தி துன்புறுத்தியுள்ளார்கள். போலீஸாரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுதான் இருவரும் உயிரிழந்தாக உறவினர்கள், வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், இருவரின் உடல்கள், உடற்கூறாய்வு செய்யப்படுவதற்கு முன்பாகவே நெஞ்சுவலியாலும் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுதான் இருவரும் உயிரிழந்தனர் என முதல்வர் எப்படிக் கூறினார்? அவரது இந்தப் பேச்சு வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் இந்தக் கூற்றால் வழக்கு விசாரணை திசை திரும்பிவிடக் கூடாது. இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை அறிக்கை கேட்டுள்ளது. தற்போதும் நீதிமன்றத்தையே முழுமையாக நம்புகிறோம். இருவரின் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்றார்.

திரண்ட வியாரிகள், பொதுமக்கள்

பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவரான சுப.உதயகுமாரன், ``சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 40 முதல் 50 பேர் வரை சித்ரவதை செய்யப்பட்டு, பெரும்பாலானவர்கள் கோவில்பட்டி கிளைச்சிறைக்கு அனுப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன. நேற்றும் அதே காவல்நிலையத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட ராஜாசிங் என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கடந்த 5 ஆண்கள் என்னென்ன நடந்தன என்பதை விசாரிக்க ஒரு குழுவை அரசு ஏற்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.



source https://www.vikatan.com/news/politics/dmk-mp-kanimozhi-speaks-about-sathankulam-father-and-son-death-acc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக