Ad

ஞாயிறு, 28 ஜூன், 2020

தஞ்சாவூர்:`எந்தப் பெற்றோருக்கும் இந்தநிலை வரக்கூடாது!' - கொரோனாவால் இறந்த 13 வயது சிறுவன்

தஞ்சாவூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த 13 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக் கல்லூரி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பகட்டுவான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ரேஷன் கடையில் சேல்ஸ்மேனாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மகன் இறந்துவிட்டார். இந்நிலையில் மற்றொரு மகனான 13 வயதுச் சிறுவனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மருத்துவமனை ஊழியர்கள் சிலர், ``சீனிவாசனின் மகன் தசை மற்றும் இணைப்புத்திசு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனுக்கு அதற்கான சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்தச் சிறுவனுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு தஞ்சாவூர் வ.உ.சி நகரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 24-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

கொரோனா மரணம்

அங்கு அந்தச் சிறுவனுக்கு இரண்டு நாள்களாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையில் சிறுவனுக்கு கொரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டிருந்தது. இதில் அந்தச் சிறுவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் உடனடியாக நேற்று அந்தச் சிறுவன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

ஆனால், நேற்று இரவு 11 மணிக்கு அந்தச் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனை வளாகத்திலிருந்த அவனது பெற்றோர் கதறி அழுதனர்.

கிராமம்

அவனின் தந்தை, `ஏற்கெனவே ஒரு மகன் இறந்துவிட்ட நிலையில் ஆசை ஆசையாக வளர்த்த மற்றொறு மகனையும் இழந்துவிட்டு நிற்கிறோமே... இதுபோன்ற நிலை எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது' எனக் கதறினார். அருகில் இருந்த சிலர் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி தேற்ற முடியாத சோகத்தில் நின்றனர்" எனக் கலங்கினர்.

இந்தச் சம்பவம், மருத்துவக்கல்லூரி வளாகம் முழுதுவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் தரப்பில் கூறுகையில், `` அந்தச் சிறுவன் தசை மற்றும் இணைப்பு திசு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவன் அதன்பிறகு இங்கு சேர்க்கப்பட்டான்.

Also Read: கொரோனா:`1 கோடி பேர் பாதிப்பு; 5 லட்சம் பேர் பலி!’ - திணறும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா

இதய இயங்குவிசை 70 சதவிகிதம் இருக்க வேண்டிய நிலையில், 27 சதவிகிதம் மட்டுமே அவனுக்கு இருந்தது. இருப்பினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டான். இதற்கு தசை மற்றும் இணைப்புத் திசு சிதைவு நோயே காரணம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசு கொரோனாவல் பாதிக்கப்பட்டு ஏற்படும் மரணங்களை வேறு நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகக் கூறி கொரோனா மரணங்களை மறைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு 13 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்திருப்பது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/death/tanjore-13-years-old-boy-died-due-to-corona-infection

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக