Ad

வியாழன், 25 ஜூன், 2020

`30% போலி உரிமங்கள்!’- 97 பேர் பலியான பாகிஸ்தான் விமான விபத்தின் பின்னணி

பாகிஸ்தானில் செயல்படும் பொது விமானிகளில் 30% பேர் போலியான விமானி லைசென்ஸ் வைத்துள்ளதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். மூன்றில் ஒரு விமானி போலி விமானி உரிமம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாகப் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் குலாம் சுரூர் கான், `260 விமானிகள் தகுதி தேர்வு எழுதாமல் பணம் கொடுத்து மற்றவர்களை தேர்வு எழுத வைத்து மோசடி மூலம் பணியில் சேர்ந்துள்ளனர்’ என்று கூறினார்.

நாட்டின் முதன்மை விமான நிறுவனமான பிஐஏ (PIA-Pakistan International Airlines) மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் உட்பட அனைத்து விமான நிறுவனங்களிலும் மொத்தமாக 850 விமானிகள் பணியாற்றி வருகின்றனர்.

விமானிகள்

மேலும் அவர் கூறுகையில், ``பிஐஏ வைச் சேர்ந்த போலி உரிமம் வைத்திருந்த விமானிகள் கண்டறியப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனினும் இந்தப் போலி உரிமம் பிரச்னை பிஐஏ வையும் தாண்டி அனைத்து விமான நிறுவனங்களிலும் உள்ளது’’ என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே 22ம் தேதி பாகிஸ்தான் கராச்சியில் நடைபெற்ற விமான விபத்து குறித்து கண்டறியப்பட்டுள்ள விவரங்களையும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் குலாம் சுரூர் கான் தெரிவித்தார். பயணிகள், விமானிகள் உட்பட 99 பேர் இருந்த அந்த விமானம் விபத்துக்குள்ளானதில், 2 பேர் மட்டுமே உயிர் தப்பினர். ஏனைய 97 பேர் விபத்தில் பலியாகினர். பிஐஏ நிறுவனத்தின் விமானம் மே 22ம் தேதி லாகூரிலிருந்து கராச்சி செல்லும் போது விபத்திற்குள்ளனது. பயணத்தின் போது விமானிகள் முழுக் கவனத்துடன் பணியை மேற்கொள்ளாததும், விமானிகள் செய்த தவறே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் விமான விபத்து

``விமானிகள் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் அறிவுறுத்திய வழிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டியுள்ளனர். விமானத்தில் இருந்த இயந்திரக் கோளாறு குறித்து விமானிகளுக்கு அறிவுறுத்தப்படாமல் இருந்தது. இது மட்டுமல்லாமல் விமானிகள் பயணம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பேசிக்கொண்டே இருந்ததால் அவர்கள் விமானம் ஓட்டுவதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக தங்களது குடும்பத்தில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது விமானப் போக்குவரத்து கட்டுபாட்டாளர்கள் விமானத்தை உயரமாகப் பறக்கவைக்கும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால், விமானியோ தான் பார்த்துக்கொள்வதாகக் கூறிவிட்டார். இதுவே விபத்துக்கு முக்கியக் காரணம்’’ எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/accident/pakistan-airline-suspends-150-pilots-over-alleged-licence-fraud

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக