Ad

திங்கள், 29 ஜூன், 2020

`` `இந்த ஹீரோ நடிச்சா பணம் பிரச்னை இல்லை'... ஆனா, எனக்கு அவர்?!'' - சுசீந்திரன்

``நான் இயக்குநர் எழில் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தேன். `வெண்ணிலா கபடிக்குழு' கதையை அப்பவே பாஸ்கர் சக்தி சார், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் சார், எடிட்டர் காசி விஸ்வநாதன் சார், ஒளிப்பதிவாளர் லக்‌ஷ்மன்னு எல்லோர்கிட்டேயும் சொல்லியிருந்தேன். எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்தப் படத்துக்கான இசையமைப்பாளரை கமிட் பண்ணனும்னு நினைச்சப்போ, லக்‌ஷமன் சொன்னவர்தான் செல்வகணேஷ். ஏன்னா, `நமனை அஞ்சோம்' ஒரு படத்துல அவங்க ரெண்டு பேரும் வேலை பார்த்திருந்தாங்க. ஆனா, அந்தப் படம் டிராப் ஆகிடுச்சு. செல்வகணேஷ்கிட்ட கதை சொல்லலாம்னு நானும் லக்‌ஷமனும் போனோம். அங்க ஆனந்த் சக்ரவர்த்தினு ஒருத்தர் இருந்தார். அவர் ஒரு தயாரிப்பாளர். அவரை எனக்கு அறிமுகம் செஞ்சு வெச்சாங்க. செல்வகணேஷுக்கு கதை சொல்ல வந்திருக்கோம்னு தெரிஞ்சவுடன் `நாங்களும் கதை கேட்கலாமா?'னு கேட்டார். `தாராளமா கேட்கலாம்'னு கதையை சொன்னேன். ரெண்டு நாள் கழிச்சு அவங்களே இந்தப் படத்தை தயாரிக்க ரெடியா இருக்காங்கன்னு தகவல் வந்தது.

எல்லோரும் தயாரிப்பாளரைத் தேடி அலைவாங்க. ஆனா, எனக்கு தயாரிப்பாளரே தானா முன்வந்து படம் தயாரிக்கிறேன்னு சொன்னதுல ரொம்ப சந்தோஷம். தயாரிப்பாளர் முடிவானவுடனே நடிகர்களை தேர்ந்தெடுக்க ஆரம்பிச்சேன். `தீபாவளி' படத்துல நான் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தப்போ, அந்தப் படத்துல சின்னச்சின்ன கேரக்டர்கள் பண்ண சூரி, அப்புக்குட்டினு எல்லோரும் பழக்கம். அவங்களை எல்லாம் இந்தப் படத்துக்குள்ள கூட்டிவந்துட்டேன். ஹீரோ, ஹீரோயினைத் தவிர எல்லோரும் கன்ஃபார்மாகிட்டாங்க. ஹீரோ தேடல் ஆரம்பமாச்சு. இந்தக் கதையை முதல்ல ஜெய்கிட்டதான் சொன்னேன். அவருக்காக ரெண்டு மாசம் காத்திருந்தேன். ஆனா, அது நடக்கலை. சாந்தனுவை நடிக்க வைக்கவும் அப்ரோச் பண்ணேன். இந்த சமயத்துல தயாரிப்பாளர் ஆனந்த் சொன்னவர்தான் விஷ்ணு விஷால். அவரைப் பார்த்ததுமே `இவர் இந்தக் கதைக்கு நிச்சயமா சரியா இருக்கமாட்டார்'னு தயாரிப்பாளர்கிட்ட சொல்லிட்டேன். காரணம், அவர் தோற்றம். பக்கா சிட்டி பையனா இருந்தார். நான் தயாரிப்பாளரை எவ்வளவோ சமாதனம் பண்ணிப் பார்த்தேன், முடியலை. `விஷ்ணு படத்துல இருந்தா படத்துக்கு இன்னும் கொஞ்சம் ஃபைனான்ஸ் கிடைக்கும், பணப் பிரச்னை இருக்காது'னு சொல்லி அவர் என்னை சமாதானப்படுத்தினார். என்னடா இப்படி சொல்றார்னு அதிர்ச்சியா இருந்தது. அந்தக் கேரக்டர்தான் படத்தை தாங்கணும். அது சரியில்லைனா, எல்லாமே சொதப்பிடும்.

Vishnu Vishal

முதல் படங்கிறதுனால என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம். தயாரிப்பாளர்கிட்ட 5,000 ரூபாய் பணம் வாங்கிக்கிட்டு நேரா வேளாங்கண்ணிக்குப் போயிட்டேன். சர்ச் பக்கத்துல ரூம் புக் பண்ணிட்டு அஞ்சு நாள் தனியா இருந்தேன். `இனி வேற வழியே இல்லை... நாம நம்ம ஸ்கிரிப்டை மட்டும் நம்புவோம், ஜெயிப்போம்'னு எனக்குள்ளேயே முடிவெடுத்துட்டு பாசிட்டிவ் மைண்டோட சென்னை வந்து விஷ்ணுவை சந்திச்சேன். மாரிமுத்து கேரக்டர் எப்படி இருப்பான்னு சொல்லிப் புரியவெச்சேன். கலரை குறைக்க தினமும் பீச் மண்ணுல படுக்க வெச்சு, உடம்பை குறைக்க வெச்சு விஷ்ணுவை மாரிமுத்தா மாத்தினோம். தேனி ஈஸ்வர் சார்தான் போட்டோஷூட் பண்ணார். அப்போ விஷ்ணுவோட அப்பா வந்து `இதுல என் பையன் எங்க?'னு கேட்டார். அப்போதான் எங்களுக்கு நம்பிக்கை வந்துச்சு. அடுத்து ஹீரோயின். முதல் சாய்ஸ் பிந்து மாதவி. நடிக்க `ஓகே' சொல்லிட்டு அப்புறம் அவங்க கோ ஆர்டினேட்டர்கிட்ட இருந்து `நோ'னு பதில் வந்திடுச்சு. ஹீரோயின் தேடுற சமயத்துல விஷ்ணுவுக்கும் மத்தவங்களுக்கு கபடி ப்ராக்டீஸ் போயிட்டிருந்தது.

தயாரிப்பாளர் ஒரு மும்பை பொண்ணை ஹீரோயினா நடிக்க வைக்கச் சொன்னார். அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் கூட நம்ம ஊர் சாயல் இல்லை. அந்தப் பொண்ணும் வந்துட்டாங்க. வேற வழியில்லாமல் அந்தப் பொண்ணுக்கு நடிக்க சொல்லிக்கொடுத்தேன். ஆனா, அவங்களுக்கு நடிப்பே வரலை. ஷூட்டிங்குக்கு முன்னாடி கணக்கம்பட்டி ஊருக்குப் போய் நாலு நாள் ஹேண்டி கேமரா வெச்சு ரிகர்சல் பண்ணோம். அதுல நாயைப் பார்த்து பயப்படுற சீனை ரிகர்சல் பார்த்துட்டு இருந்தப்போ, அங்க ஒருத்தர் குடிச்சிட்டு வந்துட்டு `ஷூட்டிங்கை நிறுத்து... இது எங்க ஊர் பொண்ணு மாதிரி தெரியலை'னு சொல்லி கலாட்டா பண்ணிட்டார். `அதைத்தாங்க நானும் சொல்றேன். ஆனா, ப்ரொடியூசர் கேட்கமாட்டேங்குறாரே'னு மனசுல நினைச்சிக்கிட்டேன். ஷூட்டிங்கும் ஆரம்பிச்சிடுச்சு. ஆனா, அந்தப் பொண்ணை வெச்சு படம் எடுக்க எனக்கு சுத்தமா மனசில்ல.

Saranya Mohan

முதல் ஆறு நாள் ஹீரோயின் இல்லாத போர்ஷனா எடுத்துட்டு இருந்தேன். ஆனா, அந்தப் பொண்ணு தினமும் ஸ்பாட்டுக்கு வந்து பார்த்துட்டு இருக்கும். அந்தப் பொண்ணை ஸ்பாட்ல வெச்சுக்கிட்டே வேற ஹீரோயினுக்காக போன்ல பேசிட்டு இருப்பேன். அப்போதான் `யாரடி நீ மோகினி' ரிலீஸ் ஆகியிருந்தது. அதுல நடிச்ச சரண்யா மோகன் இந்தப்படத்துக்கு சரியா இருப்பாங்கன்னு நண்பர்கள் சொன்னாங்க. உடனே படத்தைப் பார்த்துட்டு சரண்யா மோகனை அப்ரோச் பண்ணோம். அவங்க கேட்ட சம்பளம் நாங்க போட்ட பட்ஜெட்டுக்குள்ள வரலை. அதனால, ஷூட்டிங்கை மூணு நாள் முன்னாடியே முடிச்சுத்தந்து செலவை குறைக்கிறேன்னு தயாரிப்பாளர்கிட்ட சொல்லி அவரை கன்வின்ஸ் பண்ணி சரண்யா மோகனை கமிட் பண்ணேன். 

சரண்யாவை கமிட் பண்ற வரைக்கும் அந்த மும்பை பொண்ணு ஸ்பாட்லதான் இருந்தது. எனக்கு அந்தப் பொண்ணுக்கிட்ட என்ன சொல்றதுனு தெரியலை. `இந்த கேரக்டர் சொதப்பிட்டா படமே சொதப்பிடும். எனக்கு, ஹீரோவுக்கு, தயாரிப்பாளருக்கு, கேமராமேனுக்கு எல்லோருக்கும் இது முதல் படம். இதுலதான் எல்லோருடைய வாழ்க்கையும் இருக்கு. அதனால, வேற ஒரு பொண்ணை நடிக்க வைக்க ப்ளான் பண்ணியிருக்கோம். நீயும் பல கனவுகளோட உங்க ஊர்ல இருந்து கிளம்பி வந்திருப்ப. தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடும்மா'னு நான் சொன்னதை விஷ்ணு அப்படியே அந்தப் பொண்ணுகிட்ட இந்தில சொல்லி புரியவெச்சார். அவங்களும் புரிஞ்சிக்கிட்டு எங்களுக்கு ஆல் தி பெஸ்ட் சொன்னாங்க.

ஹீரோயின் பிரச்னை முடிஞ்சிருச்சுன்னு நினைச்சா `எனக்கு இந்தப் படத்துல என்ன கேரக்டர்னே தெரியலை... வசனமே கொடுக்கமாட்டேங்குறீங்க. வேற யாராவது இதுல ஹீரோயினா நடிக்கிறாங்களா? நான் அட்வான்ஸ் திருப்பிக் கொடுத்திடுறேன்'னு சரண்யா மோகன் கோபப்பட்டாங்க. `நீதான்மா ஹீரோயின். இதுல அவ்வளவா டயலாக்கே இருக்காது. ஆனா, படத்துல உன்னுடைய கேரக்டர் பெரிய ப்ளஸா இருக்கும்'னு சொல்லி சமாதானப்படுத்தினேன். அப்புறம், `லேசா பறக்குது மனசு' பாட்டு சரண்யாவுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அதுக்குப்பிறகுதான், இன்வால்வ் ஆகி நடிச்சுக்கொடுத்தாங்க.

சரியா 25 நாள் ஷூட்டிங் முடிஞ்சதும் பணம் இல்லாம ஷூட்டிங் நின்னுடுச்சு. எல்லோரும் சென்னை கிளம்பி வந்துட்டோம். மறுபடியும் ஷூட்டிங் ஆரம்பிக்குமா இல்லையானு குழப்பம், பயம். அந்த சமயத்துல ரொம்ப அப்செட்ல இருந்தேன். `ஈஸியா தயாரிப்பாளர் கிடைச்சுட்டார்னு சந்தோஷப்பட்டோமே ஆனா, இவ்ளோ பிரச்னைகள் வருதே'னு அவ்ளோ வருத்தம். அப்புறம், ஆறு மாசம் கழிச்சு மறுபடியும் ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒருவழியா படத்தை முடிச்சோம்.

Vennila Kabadi Kuzhu Movie

ஜனவரி 29, 2009... என்னோட முதல் படம் `வெண்ணிலா கபடிக்குழு' ரிலீஸாச்சு. எழில் சார், சசி சார், பாலாஜி சக்திவேல் சார், லிங்குசாமி சார், அமீர் சார் எல்லோரும் ஒண்ணா படம் பார்த்துட்டு நல்லாயிருக்குனு போன் பண்ணி பாராட்டினாங்க. இவ்வளவு பிரச்னைகள் கடந்து நம்ம படம் ரிலீஸாகி பெரிய பெரிய இயக்குநர்கள்கிட்ட இருந்து பாராட்டு வந்ததை மறக்கவேமாட்டேன். `அழகர்சாமியின் குதிரை' பண்ணும்போது இளையராஜா சார் என்கிட்ட, `நான் பிரசாத் ஸ்டூடியோவுக்கு கார்ல போயிட்டிருந்தப்ப உன்னுடைய `வெண்ணிலா கபடிக்குழு' போஸ்டர் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். அப்போவே இந்தப் படம் ஹிட்டாகும்னு கூட இருந்தவங்கக்கிட்ட சொன்னேன்'னு சொன்னார். இதுக்கு மேல என்ன வேண்டும்'' என எமோஷனல் ஆகிறார் சுசீந்திரன்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/director-suseenthiran-speaks-about-his-first-movie-vennila-kabadi-kuzhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக