Ad

திங்கள், 29 ஜூன், 2020

சீர்காழி: `அரசின் நவீன அரிசி ஆலை; பாதிக்கப்படும் விவசாயம்!’ -கலங்கும் விவசாயிகள்

சீர்காழி அருகே எருக்கூர் அரசு நவீன அரிசி ஆலை கரித்துகள் மற்றும் கழிவு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

பாதிக்கப்படும் விவசாயம்!

கழிவு நீரால் பாதிப்பு

நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலை அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல், இந்த ஆலையில் அரைக்கப்பட்டு நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆலையில் நெல்லை பதப்படுத்தி அரிசியாக மாற்றுவதற்கு எரிபொருளாக உமி போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் கரித்துகள்கள் பறந்து சென்று அருகேயுள்ள விளைநிலங்களில் படர்ந்து பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், ஆலையிலிருந்து வரும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் பாசான வாய்க்காலில் கலக்க விடுவதாகவும் இந்தக் கழிவு கலந்த நீர் நிலத்துக்குள் புகுவதால் மகசூலும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கலங்கும் விவசாயிகள்!

இதுபற்றி அப்பகுதி விவசாயிகளிடம் பேசியபோது, ``இந்த அரிசி ஆலை சீர்காழி-சிதம்பரம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளதால் கரித்துகள்கள் பறந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது படுவதால் பல விபத்துகள் நடந்துள்ளது. அருகில் வசிக்கும் கிராமத்தினர் சிலர் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதை அருந்தும் கால்நடைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்து விடுகின்றன. மேலும், விவசாய நிலத்தில் கழிவு நீர் புகுவதால் நாற்றங்கால் அழுகி விடுகிறது. கரித்துகள்கள் காற்றில் பறந்து பருத்தி சாகுபடி மீது படர்ந்து வளர விடாமல் அழுகிவிடுகிறது. கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதால் அக்கம்பக்கத்தினர் குடியிருக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

எங்கள் கோரிக்கையை ஏற்ற ஆலை நிர்வாகம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதிய நவீன அரவை இயந்திரம் அமைத்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் புதிய அரவை இயந்திரம் இயங்காமல், மீண்டும் பழைய முறையிலேயே நெல் அரவை செய்யப்படுவதால் விவசாயிகளாகிய நாங்கள் மீண்டும் அதே பாதிப்புகளைச் சந்தித்து வருகிறோம்.

அரசு ஆலை கழிவு நீர் பாதிப்பு

முதலமைச்சர் தனிப்பிரிவு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயம் பாதித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கரித்துகள்கள் பற்றி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி ஆலையை இயக்க வேண்டும். ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்புச் செய்து விவசாயத்துக்கு வழங்க வேண்டும்" என்றனர்.

அரிசி ஆலை நிர்வாகம் சொல்வதென்ன?

இப்புகார் பற்றி எருக்கூர் அரசு நவீன அரிசி ஆலை உதவிப் பொறியாளர் குலோத்துங்கனிடம் கேட்டோம். ``கரித்துகள் கொட்டும் இடத்திலிருந்து வாகனப் போக்குவரத்தால் வெளியில் துகள் பறப்பதாகப் புகார் வந்தது. தற்போது உடனுக்குடன் கரித்துகள்களை அப்புறப்படுத்தி வருகிறோம். ஒரு கோடி ரூபாய் செலவில் கழிவுநீரைச் சுத்திகரித்து ரீசைக்கிளிங் முறையில் மீண்டும் பயன்படுத்த திட்டம் உள்ளது. இந்நேரம் முடிந்திருக்க வேண்டிய இத்திட்டம் கொரோனா காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இப்பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டப்படும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/farming-is-affected-by-government-rice-factory

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக