Ad

சனி, 27 ஜூன், 2020

கொரோனா:`1 கோடி பேர் பாதிப்பு; 5 லட்சம் பேர் பலி!’ - திணறும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா

சீனாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வேகமாகப் பரவிவரும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பலவும் திணறி வருகின்றன. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

இந்தநிலையில், தற்போது உலகளவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைக் கடந்துள்ளது. அதாவது, ஒரு கோடியைக் கடந்துள்ளது. வைரஸால் பாதிப்படைந்த மக்களில் அரை மில்லியன் மக்கள் அதாவது கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் காய்ச்சல் தொடர்பான நோய்களின் எண்ணிக்கையைவிட இந்தக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா

மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும் பொருளாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வைரஸைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் படிப்படியாகப் பல நாடுகளும் தளர்வுகளைச் செய்து வருகின்றன. இதனால், வைரஸ் பரவல் இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் சுகாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பைக் குணப்படுத்த மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் அதன் பரவலைக் கட்டுப்படுத்த தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதாரத்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல்கள்தான் தற்போதைய தீர்வாக இருந்து வருகிறது. தடுப்பூசிகள் கிடைக்க ஒரு வருடம் அல்லது அதற்கு அதிகமாகவே ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. வரும் மாதங்களிலும் 2021-ம் ஆண்டிலும் வைரஸ் தொடர்ந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால் சில நாடுகள் ஊரடங்கைக் கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என நிபுணர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Also Read: கொரோனா: 93 வயதில் நம்பிக்கையால் மீண்ட முன்னாள் குடியரசுத் தலைவரின் மனைவி

வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் முறையே 25 சதவிகித வைரஸ் பாதிப்புகளைக் கொண்டுள்ளன. அதேநேரம், ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் முறையே 11 சதவிகிதம் மற்றும் 9 சதவிகித பாதிப்புகளைக் கொண்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய்த்தொற்று தற்போது புதிய கட்டத்துக்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் ஒவ்வொருநாளும் 10,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின்றன. கடந்த வாரத்தில் உலகளவில் பதிவான மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கைக்கு இந்த இரண்டு நாடுகளுமே காரணமாக இருந்துள்ளன.

பிரேசிலில் கடந்த ஜூன் 19-ம் தேதி மட்டும் 54,700 பேர் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. பிரேசிலில் இதுவரை 1.32 மில்லியன் மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 57,103 பேர் உயிரிழந்துள்ளனர். லத்தீன் அமெரிக்காவில் மட்டும் அக்டோபர் மாதத்துக்குள் 3,80,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பார்கள் எனச் சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலும் வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 15,000-த்தைக் கடந்துள்ளது.

கொரோனா | Covid-19

சீனா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் பாதிப்படைந்து வருகின்றன. பெய்ஜிங்கில் உள்ள சந்தைப் பகுதியில் நூற்றுக்கணக்கான நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சம் பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. உலக நாடுகளில் அதிக பாதிப்புகளைச் சந்தித்த அமெரிக்காவில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். அமெரிக்காவில் கிராமப் பகுதிகள் மற்றும் இதுவரை பாதிப்படையாத பகுதிகளில் தற்போது வைரஸ் அதிகளவில் பரவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் பாதிப்பால் அங்கு 1.28 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் `ஊரடங்கு தொடர்பான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவில்லை’ என்ற குற்றச்சாட்டுகள் அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் மீது தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நாடுகளில் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கைகள், தளர்த்தப்படும் ஊரடங்குகள், போராட்டங்கள், மருத்துவமனை வசதிகள் தொடர்பான தகவல்கள் ஆகியவற்றால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

Also Read: கொரோனா: முழு ஊரடங்கு அறிவிப்புகள் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தியதா... கட்டவிழ்த்துவிட்டதா?



source https://www.vikatan.com/health/international/world-crosses-1-crore-corona-cases-and-5-lakhs-deaths

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக