Ad

வெள்ளி, 26 ஜூன், 2020

1962 யுத்தக் களத்தில் சீனப் படையின் வஞ்சகமும் இந்திய பதிலடியும்! #IndiaChinaFaceOff - பகுதி 4

குறிப்பாக, போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னாலுள்ள அரசியல் நெருக்கடிகள் விவரிக்கப்பட்டன.

இந்த அத்தியாயத்தில், 02.12.1962 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம் பகுதியைப் பார்ப்போம்.

சீனா வெடி!

சீனாக்காரன் சென்ற 20-ம் தேதியன்று போட்ட வெடியொன்று பெரும் சத்தத்தைக் கிளப்பிவிட்டது. அதைக் கேட்ட உலகினர் சிறிது நேரம் திகைத்தனர். பிறகு சிந்திக்கலாயினர்.

``21-ம் தேதி நடுநிலையுடன் நாங்கள் போர் நிறுத்தம் செய்யப் போகிறோம்" என்று சீனர்கள் ஒரு திடீர் அறிக்கை விட்டார்கள். அதன்படி அவர்களுடைய சிப்பாய்களும் சுடுவதை நிறுத்திவிட்டார்கள்.

இதன் காரணம் என்ன? இந்த அறிக்கையின் உட்கருத்தென்ன? இந்திய மண்ணில் வாலாங் வரை வந்து வெற்றி கண்ட சீனர்கள் ஏன் இப்போது வாலைச் சுருட்டிக்கொண்டார்கள்? இத்தகைய கேள்விகள் இன்று எங்கும் கேட்கப்படுகின்றன.

பாலுக்குப் பூனை பதுங்குவதுபோல் பாய்ச்சலுக்காகச் சீனா பதுங்கிக்கொண்டிருக்கலாம். இமயமலைப் பகுதிகளில் இப்போது பனியுறையும் காலம் ஆரம்பமாகிவிட்டது. இதனால் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஏராளமான படை பலத்தைத் திரட்டி, குளிர் விட்டவுடன் மீண்டும் பாய அவர்கள் திட்டமிட்டிருக்கலாம். இந்தப் போர் நிறுத்தம் அதற்காகச் செய்யப்படும் ஒரு சூழ்ச்சியாகவே இருக்கலாம்.

02.12.1962 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம்

அல்லது ``இன்று உலகச் சூழ்நிலை நமக்குச் சாதகமாக இல்லை. இந்தியாவை நாம் தாக்கியதால் உலகமே நமது விரோதியாகிவிட்டது. மேலை நாடுகள்தான் எப்போதுமே நம் விரோதிகள் என்றாலும், கீழை நாடுகளாகிய ஆசிய ஆப்பிரிக்க நாடுகள்கூட இன்று இந்தியாவின் பக்கம் சாய்ந்துவிட்டன. இந்தியாவுக்குச் சாதகமாகப் பேசுகின்றன. நம்மை ஏசுகின்றன. இத்தகைய நிலையை நீடிக்கவிடக் கூடாது. இவர்கள் கண்ணைத் துடைக்க ஒரு தந்திரம் செய்ய வேண்டும்'' என்று எண்ணத்துடன் சீனா வெடித்த பிரசார வெடியாகவும் இது இருக்கக்கூடும்.

அல்லது பயத்தின் காரணமாகவும் சீனா போர் நிறுத்தம் செய்திருக்கக் கூடும். ``இந்தியாவின் ஆயுத பலம் பெருகி வருகிறது. அமெரிக்காவும் பிரிட்டனும் இந்திய மண்ணில் நடக்கும் இந்தப் போரைத் தங்கள் சொந்தப் போராகவே கருதுகிறார்கள். இப்பொழுதே நாம் போரை நிறுத்தாவிட்டால் நம் நாட்டுக்கே ஆபத்து வந்துவிடும்" என்ற உண்மையை உணர்ந்து சீனா போரை நிறுத்தியிருக்கலாம்.

அதோடு. ``நமது அண்ணன் காலை வாரி விட்டுவிடுவான் போலிருக்கிறதே! குருஷ்சேவை நம்ப முடியவில்லையே! கென்னடியோ, மாக்மில்லனோ யாருக்காவது ஒரு ஓட்டைத் துப்பாக்கியைப் பரிசளித்தால்கூட, `ஏன் கொடுத்தாய்? எதற்குக் கொடுத்தாய்? ஏகாதிபத்தியத்தை வளர்க்கக் கொடுத்தாயா?' என்றெல்லாம் முன்பு அவன் கேட்பானே! இப்பொழுது அமெரிக்காவும் பிரிட்டனும் இந்தியாவில் ஆயுதங்களைக் கொண்டு வந்து மலைபோல் குவிப்பதைப் பார்த்தும் அவன் ஒரு கேள்விகூடக் கேட்கவில்லையே! கேள்வி கேட்காதது மட்டுமல்ல; சொன்ன சொற்படி `மிக் (MIC) விமானங்கள் கொடுக்கப்போகிறேன், தொழிற்சாலைகள் திறக்க உதவப் போகிறேன்' என்றெல்லாம் கூறுகிறானே! உன்பாடு இந்தியாவின்பாடு என்று ருஷ்யா நம்மை நட்டாற்றில் விட்டுவிட்டால் என்ன செய்வது" என்ற தொடை நடுக்கமும் சீனாவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோம், தலை தப்பினால் போதும். ஆனால், நம்முடைய அச்சத்தை நாம் வெளிக்காட்டக் கூடாது, தொடை நடுங்கினாலும் நம் குரல் நடுங்கக் கூடாது என்று கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் செய்த தந்திரமாகவும் இது இருக்கக்கூடும்.

இதில் எது உண்மை எது ஹேஷ்யம் என்பது போகப் போகத்தான் தெரியும்.

ஆனால், இந்திய மக்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

02.12.1962 மற்றும் 26.12.1962 தேதிகளிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான கார்ட்டூன்கள்
02.12.1962 மற்றும் 26.12.1962 தேதிகளிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான கார்ட்டூன்கள்
02.12.1962 மற்றும் 26.12.1962 தேதிகளிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான கார்ட்டூன்கள்
02.12.1962 மற்றும் 26.12.1962 தேதிகளிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான கார்ட்டூன்கள்

சீனாக்காரன் தான் செய்த தவற்றை உணர்ந்து போரை நிறுத்தவில்லை, தருமத்துக்கு அஞ்சியும் அவன் போரை நிறுத்தவில்லை என்று அவர்களுக்குத் தெரியும். எனவே, அவனுடைய பசப்பு வார்த்தைகளுக்கு அவர்கள் ஏமாற மாட்டார்கள். சீனாக்காரத்தைக் கற்கண்டு என்று எண்ணிவிட மாட்டார்கள்.

இந்தியர்களுக்கும் நாடகம் ஆடவும் தெரியும்; பார்க்கவும் தெரியும். சீனா நாடகத்தில் இந்தப் போர் நிறுத்தம் ஒரு பொய்க் காட்சி என்பதை அவர்கள் அறிவார்கள். சீனாக்காரனின் இந்த யோசனையைப் பற்றித் தங்கள் தலைவர் நேரு தகுந்த முடிவு செய்வார் என்பதில் பூரண நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.

எனவே, அவர்களுடைய போர் முரசு முழங்கிக்கொண்டே இருக்கும். யுத்த முயற்சிகள் சிறிதும் தளராமல் நடந்துகொண்டே இருக்கும்.

`நாங்கள் எல்லோரும் நாட்டின் கரங்கள். நேருதான் எங்கள் நெஞ்சம். அவர் சொல்லே எங்கள் செயல்' என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய தருணமிது.

****

- தொடரும்


source https://www.vikatan.com/government-and-politics/politics/ananda-vikatan-editorial-and-cartoons-on-indo-china-war-at-1962-part-4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக