கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்தச் சூழலிலும் நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைகள், சட்டங்கள் அமல்படுத்துவது தொடர்பான போராட்டங்கள், பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் எனப் பல பிரச்னைகள் நிலவி வருகின்றன. இதனால், பல நாடுகள் இடையேயும் பதற்றங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக, இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லையில் பதற்றங்கள் அதிகமாக இருப்பதோடு எல்லையில் நிலவும் சூழல் தொடர்பான தகவல்கள் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. லடாக் பிரச்னை உட்பட சீனா மற்று பிற நாடுகளுக்கு இடையே உள்ள பல பிரச்னைகளிலும் அமெரிக்கா தலையிட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது அமெரிக்கா தனது படைகளை உலகளவில் நிறுத்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இதுதொடர்பாகப் பேசுகையில், ``சீன ராணுவத்தை எதிர்ப்பதற்கு சரியான முறையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கிறோமா என்பதை உறுதிபடுத்தி வருகிறோம். காலத்தின் சவாலாக இதைக் கருதுகிறோம். எனவே, ராணுவத்தை எதிர்கொள்ள தேவையான ஆதாரங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தப் போகிறோம். அதிபர் ட்ரம்ப்பின் வழிகாட்டுதலின்படி படைகள் உட்பட அனைத்தையும் மறு ஆய்வு செய்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக ஜெர்மனியில் இருக்கும் படைகளின் என்ணிக்கையை சுமார் 52,000 முதல் 25,000 வரை குறைத்து வருகிறோம். சில நாடுகளில் அமெரிக்க படைபலம் குறைவாகவே இருக்கும். சீனாவின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கும் நாடுகளான இந்தியா, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென் சீனக்கடல் பகுதிகளில் சவால்கள் ஏற்படும்போது சமாளிக்கத் தேவையான படைகளைப் பலப்படுத்த ஆலோசனைகளை மேற்கொள்கிறோம்” என்றார்.
Also Read: India-China Face-Off:`மே மாதம் முதலே பதற்றம்... காரணம் சீனா!' -இந்திய வெளியுறவுத்துறை
சில நாடுகளில் அமெரிக்கா தனது படைபலத்தைக் குறைக்க இருப்பதால் அந்த நாடுகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அப்படியான சூழலில் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ள நாடுகள் இதற்கு முன்னர் செய்யாத வகையில் சொந்த நாடுகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மைக் குறிப்பிட்டார். எனவே, இதுதொடர்பாக உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளுடன் முழுமையான ஆலோசனைகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். ஜெர்மனியில் இருந்து படைகளைக் குறைப்பதாக ட்ரம்ப் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதனால், ஐரோப்பாவில் ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் அதிகமாகும் என விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மைக் பாம்பியோ நிராகரித்தார்.
தொடர்ந்து பேசிய மைக் பாம்பியோ, ``உலகம் முழுவதும் உள்ள எங்களது படைகளைக் குறைப்பது தொடர்பான ஆய்வுகளை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறோம். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே ஆப்பிரிக்க, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்ப நாடுகளில் உள்ள படைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் இவை. வேறு வகையில் இந்தப் படைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமா அல்லது இந்த படைகளின் வேறுபட்ட அமைப்புகள் நம்மிடம் இருக்க வேண்டுமா? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். ஆனால், ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளை எதிர்கொள்ளத் தேவையான திறன் என்பது படைகளை ஒரு இடத்தில் வைத்திருப்பதன் மூலம் தீர்மானிக்கப்படுவதில்லை. எனவே, நாங்கள் மறு பரிசீலனை செய்தோம். மோதலின் தன்மை என்ன, அச்சுறுத்தலின் தன்மை என்ன ஆகியவை குறித்து மறுபரிசீலனை செய்து அதற்கேற்றவாறு எங்களிடம் உள்ள ஆதாரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை நடத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
ஜெர்மனியில் படைகள் குறைப்பு பற்றி தொடர்ந்து பேசிய மைக், ``ஜெர்மனியில் படைகளைக் குறைப்பது பற்றிய நடவடிக்கைகள் தொடர்பாகப் பாதுகாப்புச் செயலாளர் எஸ்பர் லண்டன், பிரஸ்ஸல்ஸ் உள்ளிட்ட இடங்களில் விவாதிக்க உள்ளார். நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். எங்களுடைய நட்பு நாடுகளும் இதைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். ஜனநாயகத்தின் அடிப்படை நலன் கருதியே இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நிச்சயமாக அமெரிக்காவின் அடிப்படையான ஆர்வமும் ஜனநாயகம் பற்றியதுதான்” என்றும் குறிப்பிட்டார். சீனா பல்வேறு பகுதிகளிலும் தங்களுடைய ராணுவ வலிமையை அதிகப்படுத்தி வரும் சூழலில் அமெரிக்கா இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: `அமெரிக்கா.. இந்தியா.. தைவான்.. ஹாங்காங்!’ - போருக்குத் தயாராகச் சொல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்
source https://www.vikatan.com/government-and-politics/international/us-to-review-counter-china-deployment-says-mike-pompeo
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக