Ad

திங்கள், 29 ஜூன், 2020

கொரோனா வராமல் தடுக்குமா கழுதைப்பால்..? மருத்துவர்கள் விளக்கம்!

குழந்தைகளுக்குக் கழுதைப்பால் கொடுக்கும் வழக்கம் நம் சமூகத்தில் இன்றைக்கும் பல குடும்பங்களில் இருந்து வருகிறது. காரணம், `கழுதைப்பால் குடிச்சா நோய் எதுவும் அண்டாது’ என்பதில் வீட்டுப் பெரியவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை. தற்போதைய கொரோனா காலத்தில், `கழுதைப்பால் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்’ எனும் நம்பிக்கையில் பல கிராமங்களில் கழுதைப்பால் விற்பனை நடக்க ஆரம்பித்திருக்கிறது. மற்ற விலங்குகளின் பாலைப்போலத்தான் கழுதையின் பாலுமா... அல்லது மக்கள் நம்புவதுபோல அதற்கு ஏதேனும் விசேஷ குணங்கள் இருக்கின்றனவா.. பொது மருத்துவர் ராஜேஷ் மற்றும் சித்த மருத்துவர் செல்வ சண்முகம் இருவரிடமும் கேட்டோம்.

Coronavirus

"எல்லா விலங்குளைப் போலவும் கழுதையின் சீம்பாலிலும் பல பாக்டீரியாவை அழிக்கிற லாக்டோஃபெரின், லைசோசைம் ஆகிய என்சைம்கள் இருக்கின்றன. இதே குணாதிசயம் தாய்ப்பாலிலும் உண்டு. பசும்பால் அலர்ஜி இருக்கிற குழந்தைகளுக்கு (6 மாதத்துக்கு மேல்) கழுதைப்பால் கொடுக்கலாம். வைட்டமின் சி பசும்பாலைவிட நான்கு மடங்கு கழுதைப்பாலில் அதிகம். ஆனால், நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சையில் இன்னும் அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எல்லா விலங்கின் பாலைப்போலவும் கழுதையின் பாலிலும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உண்மைதான். அது கொரோனா வருவதைத் தடுக்கக்கூடிய அளவுக்கு வீரியத்துடன் இருக்கிறது என்பதற்கான எந்த ஆய்வு ஆதாரங்களும் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று பிறவிலேயே இருப்பது. மற்றொன்று ஒரு குறிப்பிட்ட நோய் வந்து போவதன் மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட நோய்க்கான தடுப்பூசியால் கிடைப்பது. இதில், இந்த லாக்டோஃபெரினும் லைசோசைமும் முதல் வகையைச் சேர்ந்தது.

பொது மருத்துவர் ராஜேஷ்

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், கிருமிகளை அழிக்கிற லாக்டோஃபெரினும் லைசோசைமும் கழுதையின் பாலில் மட்டுமல்ல, நம் மூக்கிலிருந்து வரக்கூடிய நீரிலும், கண்களிலிருந்து வரக்கூடிய நீரிலும், எச்சிலிலும்கூட இருக்கின்றன. இவையிரண்டும் பிறவியிலேயே மனித உடலில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்திகள். இதற்காகக் கழுதைப்பாலை தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை’’ என்கிறார் டாக்டர் ராஜேஷ்.

சித்த மருத்துவர் செல்வ சண்முகம் பேசுகையில், "தொற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுகிற குணங்கள் கழுதைப்பாலில் இருக்கின்றன என்றுதான் சித்த மருத்துவப் புத்தகங்கள் சொல்கின்றன. தவிர, கபம் தொடர்பான நோய்கள், கட்டிகள், சரும நோய்கள், மூளை பாதிப்பினால் வரக்கூடிய சித்தபிரமை போன்றவை கழுதைப்பாலை அருந்த நீங்கும் என்றும் சித்த மருத்துவப் புத்தகங்களில் இருக்கிற பாடல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

சித்த மருத்துவர் செல்வ சண்முகம்

தாய்ப்பாலுக்கு வாய்ப்பில்லாத குழந்தைகளுக்குக் கழுதைப்பால் கொடுக்கும் வழக்கம் நம் சமூகத்தில் இருந்திருக்கிறது. கழுதைப்பாலில் தாய்ப்பாலுக்கு நிகரான புரதச்சத்து, நுண் தாதுஉப்புகள், வைட்டமின்கள், சுண்ணாம்புச்சத்து, காரத்தன்மை, ஏன்... நோய் எதிர்ப்பு சக்தி வரை இருப்பதென்னவோ நிஜம்தான். இதையெல்லாம் படித்துவிட்டு, நாம் கழுதைப்பாலைத் தேடி ஒட ஆரம்பித்தால், ஏமாற்று வேலைகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அதனால், இதே அளவு சத்துகள் சைவ உணவுகளில் எவற்றிலெல்லாம் இருக்கின்றன என்று சொல்கிறேன்.

நாம் கழுதைப்பாலைத் தேடி ஒட ஆரம்பித்தால், ஏமாற்று வேலைகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
நெல்லிக்காய்

Also Read: கொரோனா: 93 வயதில் நம்பிக்கையால் மீண்ட முன்னாள் குடியரசுத் தலைவரின் மனைவி

முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, பனை வெல்லம், கறுப்பு எள், வெந்தயம், நெல்லிக்காய், கறுப்பு உளுந்து, பாசிப்பயறு, காய்கறிகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம். அல்லது பாலாகத்தான் குடிக்க வேண்டுமென்று விருப்பப்பட்டீர்கள் என்றால், தேங்காய்ப்பால், கேழ்வரகுப்பால், பாதாம் பால் குடிக்கலாம். ஊரடங்கு நேரத்தில் இவற்றுக்கெல்லாம் எங்கே போவது என்று யோசிப்பவர்கள் தினமும் காலையில் நீராகாரம் குடிக்கலாம். இதுவும் உடலின் நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டும்’’ என்கிறார்.



source https://www.vikatan.com/health/food/can-donkey-milk-prevent-us-from-coronavirus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக