மயிலாடுதுறையில் பூமிக்கடியில் பதுக்கி வைத்திருந்த 385 லிட்டர் கள்ளச்சாராயத்தை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக டாஸ்மாக் மதுபானங்களின் விலையும், புதுவை ஒயின்ஷாப் மதுபானங்களின் விலையும் சற்றேறக்குறைய ஒன்றாக இருப்பதால், கள்ளச் சாராய விற்பனை கொடிக்கட்டிப் பறக்கிறது. பல இடங்களில் போலீஸாருக்கு பெரிய அளவில் மாமூல் கொடுத்துவிட்டு இத்தொழில் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. இதை ஒழிக்க நாகை எஸ்.பி செல்வநாகரத்தினம் தனிப்படை அமைத்துள்ளார். இந்த டீம் அவ்வப்போது கள்ளச்சாராயத்தைக் கைப்பற்றி, அதைக் கடத்தி விற்பனை செய்வோரையும் கைது செய்கிறார்கள்.
Also Read: `649 லிட்டர் கள்ளச்சாராயம்; வழக்கில் சிக்கிய 138 பேர்!' - அதிர்ச்சி கொடுத்த நீலகிரி நிலவரம்
இந்நிலையில், நாகை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினத்துக்கு மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் பூமிக்கடியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் வந்துள்ளது.
உடனே தனிப்படைக் காவல்துறை உதவி ஆய்வாளர் பாபுராஜா தலைமையிலான போலீஸாருக்கு, அதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடனே தனிப்படை போலீஸார் மயிலாடுதுறை பட்டமங்கல ஆராய புதுத்தெருவுக்குச் சென்று , 'குதிரைவண்டி' குமார் என்ற கள்ளச்சாராய வியாபாரி தோட்டத்தில் சோதனை செய்தனர். பூமிக்கடியில் பதுக்கி வைத்திருந்த 385 லிட்டர் ஸ்பிரிட்டை பறிமுதல் செய்தனர். இந்த ஸ்பிரிட்டில் தண்ணீர் கலந்து விற்பனை செய்தால் அதன் மதிப்பு 7 லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுபற்றி தனிப்படை போலீஸாரிடம் பேசியபோது,
``எஸ்.பி உத்தரவின்பேரில் குதிரைவண்டி குமார் தோட்டத்தில் பூமிக்கடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கேன்களில் இருந்த 385 லிட்டர் ஸ்பிரிட்டைக் கைப்பற்றினோம். அதோடு, குதிரைவண்டி குமார் மற்றும் விக்ரம் ஆகிய இருவரைக் கைது செய்து மயிலாடுதுறை மதுவிலக்குப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டோம். இனி அவர்கள்தாம் விசாரணை மேற்கொள்வார்கள்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/2-persons-arrested-for-over-illicit-liquor-in-nagapattinam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக