Ad

சனி, 27 ஜூன், 2020

`அரசு விற்றபோது 20% விலை குறைவு!' -அதிகரிக்கும் பயிர்க் காப்பு மருந்து விலை

விவசாயம் செழித்தால் நாடு செழிக்கும். உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்குப் பல வகைகளிலும் உறுதுணையாக இருப்பது அரசின் கடமை. அப்போதுதான் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து, அனைத்துக் குடிமக்களும் பசியாற முடியும். ஆனால் தமிழக அரசோ, விவசாயத்திற்குத் தேவையான பூச்சி மற்றும் நோய்த் தடுப்பு மருந்துகள் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.

`மதுபானங்கள் விற்பனை செய்யும் தமிழக அரசால், பயிர்க் காப்பு மருந்துகளை விற்பனை செய்ய முடியாதா?' என ஆதங்கத்தோடு கேள்வி எழுப்புகிறார்கள், விவசாயிகள். இந்த ஆண்டில் இருந்தாவது, பயிர்க் காப்பு மருந்துகளை விற்பனை செய்யும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார்கள்.

விவசாயம்

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான், டெல்டா மாவட்டங்களின் குறுவைப் பாசனத்திற்காக, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. சரியான தருணத்தில் காவிரிநீர் திறக்கப்பட்டதால், இப்பகுதி விவசாயிகள் மிகுந்த உற்சாகத்தோடு சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதேசமயம், கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி, தனியார் உரக்கடைகளில் விற்பனை செய்யப்படும், களைக்கொல்லி மற்றும் பயிர்க் காப்பு மருந்துகளின் விலையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். எனவே தமிழக அரசு, இவற்றை மானிய விலையில் நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், ‘’முன்னாடியெல்லாம் தமிழக அரசின் வேளாண் விற்பனை கிடங்குகளிலும் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலும் பயிர்க் காப்பு மருந்துகள் விற்பனை செஞ்சிக்கிட்டு இருந்தாங்க.

Also Read: `கடைகளை அடைச்சுட்டோம் சார்... அந்த டாஸ்மாக்?' -நெகிழவைத்த தஞ்சை கலெக்டர்

தனியார் கடைகளைவிட, இங்க 20 சதவிகிதம் விலை குறைவாக இருக்கும். வேளாண்மை துறையைச் சேர்ந்த பயிர்க் காப்பு அலுவலர் இருப்பார். பயிர்களில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டிருக்குனு விவசாயிக்கிட்ட துல்லியமாகக் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டு, தேவையான மருந்தை மட்டும் பரிந்துரைப்பார். அதை மட்டும் வாங்குவோம். அது விவசாயிகளுக்குப் பல வகைகளிலும் உதவியா இருந்துச்சு. ஆனால், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் வேளாண் விற்பனைக் கிடங்குகளிலும் இதை விற்பனை செய்றதே இல்லை. பயிர் காப்பு அலுவலரும் கிடையாது. இதனால் விவசாயிகள், தனியார் கடைகளை மட்டுமே நம்பிருக்க வேண்டிய நிர்பந்தம். பூச்சி மற்றும் நோய்த் தடுப்பு மருந்துகளை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்றாங்க.

விவசாயி வீரசேனன்

பணத்துக்கு ஆசைப்பட்டு, தேவையில்லாத மருந்துகளையும் விவசாயிகளின் தலையில கட்றாங்க. இப்ப விவசாய வேலையாள்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கு. களையெடுக்க, கூலி கொடுத்தும் கட்டுப்படி ஆகலை. அதனால் அதிகமாகக் களைக்கொல்லி தேவைப்படுது. இதுவும் அநியாய விலைக்கு விற்பனை செய்யப்படுது. கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி, பயிர்க்காப்பு, களைக்கொல்லி இதெல்லாம் இன்னும் அதிக விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்பிருக்கு. தமிழக அரசு இதற்கு உடனடியாக தீர்வு காணணும்.

தனியார் கடைகளாக இருந்தாலும் சரி, அரசு துறைகளாக இருந்தாலும் சரி.. பயிர்க்காப்பு மற்றும் களைக்கொல்லிகளை விற்பனை செய்யக்கூடிய உரிமத்தை தமிழக வேளாண்மைத்துறைதான் கொடுத்தாகணும். தனியார் கடைகளுக்கு இதுக்கான உரிமம் கொடுக்கக்கூடிய இதே வேளாண்மைத்துறை, தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வேளாண் விற்பனைக் கிடங்குகளுக்கும், இதுக்கான உரிமத்தை மீண்டும் வழங்கணும். மதுபான விற்பனையில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, இதுலயும் ஆர்வம் காட்டணும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/farmers-slams-government-on-pesticides-price-hike

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக