Ad

திங்கள், 29 ஜூன், 2020

வேலூர்: `மழைக்கு இடிந்த வீட்டுச்சுவர்!’ -தூக்கத்தில் மாணவிக்கு நேர்ந்த சோகம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்துள்ள பொகளூர் கிடங்கு ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரின் மனைவி லட்சுமி. இவர்களின் மகள் உஷா, கணவரைப் பிரிந்து பெங்களூருவில் உள்ள கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்துவருவதாகக் கூறப்படுகிறது. உஷாவின் 14 வயதுடைய மகள் பவித்ரா தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் குடிசை வீட்டில் வசித்துவந்தார். இங்கிருந்தபடியே, பல்லலக்குப்பத்தில் உள்ள பள்ளியில் படித்துவந்த பவித்ரா நடப்பு கல்வியாண்டில் 9-ம் வகுப்பு செல்லவிருந்தார்.

இடிந்து விழுந்த வீட்டுச்சுவர்

இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக பேரணாம்பட்டுப் பகுதியில் இரவு நேரங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால், மாணவி தங்கியிருந்த குடிசை வீட்டின் மண் சுவர் ஈரப்பதமடைந்து தளர்ந்து காணப்பட்டுள்ளது. இதனுடைய விபரீதத்தை முன்கூட்டியே உணராத தேவராஜ் தன் மனைவி மற்றும் பேத்தி பவித்ராவுடன் நேற்று இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்த மூன்று பேர் மீதும் விழுந்தது. இந்தச் சம்பவத்தில், மாணவி பவித்ரா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் பாட்டியும் படுகாயமடைந்தார். தாத்தா சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த மாணவி பவித்ரா

தகவலறிந்ததும், மேல்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மாணவியின் தாத்தா பாட்டியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் மூழ்கடித்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/accident/house-damaged-by-rain-vellore-schoolgirl-dies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக