Ad

திங்கள், 29 ஜூன், 2020

கொரோனா: `அப்பா, என்னால் சுவாசிக்க முடியவில்லை!’ -கலங்க வைத்த வீடியோ

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன. வைரஸால் பாதிப்படைந்து அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் பட்சத்தில், சில தனியார் மருத்துவமனைகள் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அனுமதி கிடைத்தாலும் அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுவதால் நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் சரியாக கவனிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

கொரோனா வார்டுகளுக்குள் உறவினர்களை அனுமதிக்க முடியாத சூழலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறையும் பல மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் பெரும் பிரச்னையாக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்த நிலையில், கொரோனா வைரஸால் பாதிப்படைந்த இளைஞர் ஒருவர் தான் இறப்பதற்கு கடைசி நிமிடத்துக்கு முன்பு தன் தந்தைக்கு அனுப்பியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மருத்துவமனைகள்

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் உயிரிழப்பதற்கு கடைசி நிமிடங்களுக்கு முன்பு தன் தந்தைக்கு செல்ஃபி வீடியோ வழியாக செய்தி ஒன்றை பேசி அனுப்பியுள்ளார். படுக்கையில் படுத்தபடி அந்த இளைஞர் வீடியோவில் பேசுகையில், ``வென்டிலெட்டரை அகற்றிவிட்டார்கள்... நுரையீரல் மட்டுமே வேலை செய்கிறது. ஆனால், என்னால் மூச்சுவிட முடியவில்லை... நான் கெஞ்சிய பின்பும் கடந்த மூன்று மணி நேரமாக எனக்கு ஆக்ஸிஜன் வழங்கவில்லை. இனியும் என்னால் சுவாசிக்க முடியவில்லை அப்பா! என்னுடைய இதயம் நின்றுவிட்டதுபோல தோன்றுகிறது. நான் விடைபெறுகிறேன் அப்பா, எல்லோரிடமிருந்தும் விடைபெறுகிறேன்” என்று அவர் கூறுகிறார்.

மனதை உருக்குலைய வைக்கும் இந்த வீடியோவை மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து நோயாளிகள் படும் கஷ்டத்தையும் மருத்துவமனைகளில் நிலவும் அலட்சியத்தையும் குறிப்பிட்டு விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். அந்த இளைஞர் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: `5 மருத்துவமனைகள்... உயிருக்குப் போராட்டம்; அனுமதி மறுப்பு’ -அலட்சியத்தால் இறந்த பெண்

இளைஞரின் அப்பா இந்தச் சம்பவம் தொடர்பாக பேசுகையில், ``கொரோனா வைரஸ் பயத்தால் குறைந்தது 10 தனியார் மருத்துவமனைகள் அவனுக்கு சிகிச்சையளிக்க மறுத்தது. கடைசியில் ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். என் மகன் உதவி கேட்டான். ஆனால், யாரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை. அவனுடைய இறுதிச் சடங்குகளை முடித்து வீடு திரும்பிய பின்னரே இந்த வீடியோவை நான் பார்த்தேன். அவன் `நான் விடைபெறுகிறேன், அப்பா!’ என்று அந்த வீடியோவில் கூறினான்” என்று கூறி மனது உடைந்து அழுதுள்ளார்.

``என் மகனுக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. என்னுடைய மகனுக்கு ஏன் ஆக்ஸிஜன் மறுக்கப்பட்டது? வேறு யாருக்காவது அவசரமாக தேவைப்பட்டால், என் மகனிடமிருந்து எடுத்துச் சென்று விடுவார்களா? என்னுடைய மகன் வீடியோவில் பேசுவதைக் கேட்கும்போது என்னுடைய இதயம் உடைகிறது” என்று கதறியுள்ளார்.

கொரோனா

இறுதிச் சடங்குகளை முடித்த அடுத்தநாள் மருத்துவமனை நிர்வாகம் இளைஞருக்கு வைரஸ் தொற்று இருந்ததை தொலைபேசியின் வழியாக அழைத்து உறுதி செய்துள்ளது. இளைஞரின் தந்தை தொடர்ந்து பேசும்போது, ``எங்களுக்கு சோதனை முடிவுகள் மிகவும் தாமதமாகவே கிடைத்தன. அதற்கு முன்பாகவே அவனது உடலை மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் வழங்கியது. ஆனால், எங்களுக்கு இன்னும் எந்த பரிசோதனையும் நடத்தவில்லை. எனக்கு இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளனர். இறந்த என்னுடைய மகனுக்கு 12 வயதில் மகளும் 9 வயதில் மகனும் உள்ளனர். தங்களின் தந்தை இறந்துவிட்டார் என இன்னும் அவர்களுக்குத் தெரியாது. நான் இப்போது என்ன செய்வேன்” என்று மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.

இளைஞரின் இழப்பைத் தாங்க முடியாமல் அவரது பெற்றோர், மனைவி, சகோதரர் உள்ளிட்ட அனைவரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் இவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் தற்போது அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Also Read: கொரோனா: மாரடைப்பு, மூச்சுத் திணறல்! - விழுப்புரத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு



source https://www.vikatan.com/news/india/corona-patient-send-a-video-message-to-his-father-before-his-death

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக