Ad

திங்கள், 29 ஜூன், 2020

`இயற்கையான காடுகளை அழித்துவிட்டு செயற்கையான காட்டை உருவாக்குவது ஏமாற்றுவேலை!’ - ஜெய்ராம் ரமேஷ்

இப்போதைய அரசாங்கத்தின் சூழலியல் குறித்த மெத்தனப்போக்கை விமர்சித்த அவர், சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு, சாகர்மாலா திட்டம், நியூட்ரினோ என்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேசினார்.

பாரிஸ் உடன்படிக்கையில் இந்தியா பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. காலநிலை மாற்றம் குறித்த பொறுப்புமிக்க, ஆரோக்கியமான வாதங்கள் 2009-ம் ஆண்டிலிருந்துதான் தொடங்கியது. ஆளும் அரசுகள், தொடர்ந்து சூழலியல் பாதுகாப்பு குறித்து அக்கறையின்றிச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக நாம் தொடர்ந்து பல எதிர்வினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இதுபோன்ற மெத்தனப்போக்குகளுக்குப் பலியாகும் எளிய மக்கள் குறித்த அக்கறை ஆளுகின்ற அரசுகளுக்கு இருப்பதுபோலவே தெரியவில்லை.

இப்போதுள்ள அரசின் அத்தகைய மெத்தனம் குறித்து விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ், ``இந்தியா 2009-ம் ஆண்டு வரையிலுமே காலநிலை மாற்றப் பிரச்னையின் ஓர் அங்கமாகவும், அதற்கான தீர்வின் ஓர் அங்கமாகவும்கூட நாம் இருப்போம் என்று நினைத்துப் பார்த்ததில்லை. அதிலிருந்து சர்வதேச அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி, காலநிலை மாற்றப் பிரச்னையில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியது. 2015-ம் ஆண்டிற்குப் பிறகும் பாரிஸ் சர்வதேச உடன்படிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை இந்திய அரசு வழங்கியது. 2030-ம் ஆண்டுக்குள்ளாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் கிடைக்கின்ற மின்சாரம், நம்முடைய மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 40 சதவிகிதம் பங்கு வகிக்க வேண்டும் என்று நமக்கு நாமே இலக்கு நிர்ணயித்துக்கொண்டோம். இது பெரிய இலக்கே கிடையாது. நாம் இப்போதே 30 சதவிகிதத்தை எட்டிவிட்டோம். இதில், சூரிய மின்சக்தி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பொறுத்தவரை பாரிஸ் உடன்படிக்கையில் முன்வைத்த இலக்கை நாம் அடைந்துவிடுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால், காடுகள் மற்றும் அவற்றின் தரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பார்த்தால், நாம் பெரும் இழப்புகளைச் சந்திக்கவேண்டிவரும். நம்முடைய பிரதமரும் சரி, அவருடைய அரசாங்கமும் சரி, சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறையோடு செயல்படுவதைப் போலவே காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், உள்நாட்டில் அனைத்து விதிமுறைகளும் சட்டங்களும், வாக்குறுதிகளும் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது வெளியிட்டுள்ள சூழலியல் தாக்க மதிப்பீட்டிற்கான புதிய சட்ட வரைவு அதற்கோர் உதாரணம் மட்டுமே. 2006-ம் ஆண்டுக்கான சூழலியல் தாக்க மதிப்பீடு விதிமுறைகளே மிகவும் பலவீனமாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில், அதைவிட பலவீனமான, தொழில் வளர்ச்சிக்கு மட்டுமே சாதகமான வகையில் இது உருவாக்கப்படுகிறது.

ஜெய்ராம் ரமேஷ்

சுரங்கங்களை ஊக்கப்படுத்துவது, மிகவும் அடர்த்தியான காடுகளைக்கொண்ட சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் சுரங்கம் அமைப்பது, நிலக்கரி பயன்படுத்தும் தொழிற்சாலைகளைக் கொண்டுவருவது போன்றவை கரிம வெளியீட்டை அதிகப்படுத்தும். இது, பாரிஸ் உடன்படிக்கையில் கரிம வெளியீட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து நாம் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எவ்விதத்திலும் பங்கு வகிக்கப்போவதில்லை. நம்முடைய அரசும் பிரதமரும் சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் குறித்து மிகப் பொறுப்புடன் பேசுகின்றனர். சூழலியல் அக்கறையுடைய குடிமகனாக இருக்கவேண்டிய அவசியம் குறித்துப் பேசுகின்றனர். துரதிரஷ்டவசமாக, உள்நாட்டு சட்ட விதிமுறைகளில்தான் அனைத்துப் பிரச்னைகளுமே அடங்கியிருக்கின்றன. சூழலியல் அக்கறையைவிட, தொழில் தொடங்குவதை எளிமையாக்குவது முக்கியத்துவம் பெறுகிறது.

கொரோனா கொள்ளை நோய்ப் பேரிடர் என்பது ஒரு பொதுச் சுகாதாரப் பேரிடராகக் கருதப்படுகிறது. அந்த பொதுச் சுகாதாரப் பேரிடர், பொருளாதாரப் பேரிடரைக் கொண்டுவந்து விட்டதாகக் கூறுகின்றனர். அடிப்படையில், இதுவொரு சூழலியல் பேரிடரும்கூட. அதை நாம் உணர வேண்டும்" என்று பேசினார்.

மேற்கொண்டு பேசியவர், சாகர்மாலா திட்டம் குறித்தும் தன்னுடைய கருத்துகளை மக்களுடன் பகிர்ந்துகொண்டார். அதுகுறித்துப் பேசியபோது, ``மத்திய அரசு, கடலோரப் பகுதிகளையும் இந்தியக் கடல் பகுதிகளின் பல்லுயிரிய வளங்களையும் பாதுகாப்பது குறித்து சிந்திக்க வேண்டும். நிலவாழ் உயிரினங்களின் பல்லுயிர்ச்சூழல் குறித்து மக்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு புரிந்துள்ளனர். ஆனால், கடல்வாழ் உயிரினங்கள் குறித்தோ அவற்றின் முக்கியத்துவம் குறித்தோ போதிய அளவுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை. கடலின் பல்லுயிரிச்சூழல் அழிவது, பெரும்பான்மை மக்களுடைய வாழ்வியலில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். சாகர்மாலா திட்டத்தைப் பொறுத்தவரை, அரசாங்கம் அதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா சொல்லயபடி செயல்படுகிறதா? இது குறித்து நம்முடன் உரையாற்றுகிறார் ஜெயராம் ரமேஷ் அவர்கள். பூவுலகு இணைய கருத்தரங்கில்...

Posted by Poovulagin Nanbargal on Sunday, June 28, 2020

கூட்டத்தின்போது தேனி நியூட்ரினோ திட்டம் குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்தபோது, ``என் பார்வைக்கு முதலில் நியூட்ரினோ திட்டம் வந்தபோது நான் நிராகரித்தேன். இந்தத் திட்டம் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தபோதும் அது அமைவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் வரவுள்ள சிரமங்களை உணர்ந்து மாற்று இடத்திற்காகத் தேடத் தொடங்கினோம். பின்னர்தான், அனைத்து சூழலியல் வகைப்பாடுகளையும் பூர்த்தி செய்கின்ற இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்தோம்" என்றார்.

மேற்கொண்டு பேசியவர், ``நான் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது, நியூட்ரினோ திட்டத்துக்கு இந்த இடத்தைத் தேர்வு செய்தோம். இருப்பினும், அப்பகுதி மக்களும் வைகோவும் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தேனியில் இது அமைவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், முழு ஆய்வுக்குப் பின்னர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு இதனால் எவ்விதச் சூழலியல் பிரச்னையும் விளையாது" என்று கூறினார். அதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், தன்னுடைய எதிர்ப்பதைப் பதிவு செய்ததோடு, இந்தத் திட்டத்துக்கான தமிழகத்தின் எதிர்ப்பு நீடிக்கும் என்பதையும் பதிவு செய்தார். எதிர்ப்பு தெரிவிப்பதில் எவ்விதத் தவறும் இல்லையென்று கூறிய ஜெய்ராம் ரமேஷ், அதுவே மக்களாட்சிக்கான அடிப்படை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கடல் பல்லுயிர்ச்சூழல்

மேலும், சந்திப்பின்போது காடுகள் மீட்டுருவாக்கத்திற்கான CAMPA திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ஒரு இயற்கையான காட்டை அழித்துவிட்டு, அதற்கு மாறாக செயற்கையான காட்டை அதற்கு ஈடாக உருவாக்குவது என்பது ஒரு போலியான கருத்துருவாக்கம்தான் என்று கூறினார். செயற்கையாக உருவாக்கப்படும் காடு, எந்தவிதத்திலும் இயல் காடுகளுக்கு நிகராது என்பதையும் அவர் பதிவு செய்தார்.

Also Read: தமிழக அரசுதான் நிறுத்தி வைத்திருக்கிறதா? - நியூட்ரினோ திட்டத்தின் இன்றைய நிலை

நியூட்ரினோ மட்டுமல்லை. இப்போதைய ஆளும் அரசு எப்படி தொழில் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சூழலியல் அக்கறையின்றித் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்ததோ அதேபோலத்தான் காங்கிரஸ் ஆட்சியின்போதும் 80 சதவிகிதத்துக்கும் மேலாக முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. அதோடு, 1994-ம் ஆண்டின் சூழலியல் தாக்க மதிப்பீட்டுச் சட்டம் 2006-ம் ஆண்டு திருத்தத்தின் மூலம் முதலில் பலவீனமாக்கியதே, ஜெய்ராம் ரமேஷ் சுற்றுச்சூழல் அமைச்சகராக இருந்த காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூட்ரினோ திட்டம் வரவுள்ள பகுதி

Also Read: `இயற்கைக்கு எதிராகச் செயல்படுவது ஆபத்தானது!' மோடி சொன்னதும் மத்திய அரசின் முரண்களும்

காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி, ஆளும் பா.ஜ.க ஆட்சியாக இருந்தாலும் சரி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைவிட தொழில் வளர்ச்சிக்கும் லாபநோக்கத்தோடு செயல்படுகின்ற நிறுவனங்களுக்கும் சாதகமாகவே இதுவரை செயல்பட்டுள்ளன என்பதே நிதர்சனம். இந்நிலை மாற வேண்டுமெனில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அத்தியாவசியமானது என்பதை அரசாங்கம் உணர வேண்டும். தற்போது நாம் சந்திக்கும் பேரிடர்களைக் கருத்தில் கொண்டு, எதிர்கால அரசுகள் அதையுணர்ந்து செயல்படும் என்று நம்புவோம்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/ex-environment-minister-jairam-ramesh-explains-why-theni-chosen-for-neutrino-project

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக