Ad

வெள்ளி, 26 ஜூன், 2020

``விஷ்ணுவின் தயக்கம்... சிவகார்த்திகேயனின் நம்பிக்கை... ஆயுஷ்மான் ஆசை!'' - ரவிக்குமார்

'' 'இன்று நேற்று நாளை' ரிலீஸான இந்த அஞ்சு வருஷத்துல பர்சனலா நிறைய மாற்றங்கள் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கு. குறிப்பா எனக்கு திருமணம் முடிஞ்சி ரெண்டு வயசுல குழந்தை இருக்கு. படம் ரிலீஸானதுக்குப் பிறகுதான் கல்யாணம் பண்ணணும்னு நினைக்கல. ஆனா, கல்யாணம் பண்றதுக்கு ஒரு உத்யோகம் இருக்கணும் இல்லையா..?'' என்று சிரித்தபடியே பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.

Also Read: ``விஜய்யோட `மிஷன் இம்பாசிபிள்'... ஜீவாவோட `அன்கண்டிஷனல் லவ்'...!?'' - ஸ்ரீநாத்

''முதல் படமே ஒரு டைம் டிராவல், டைம் மெஷின்னு நம்ம மக்களுக்குக் கொஞ்சம் புரியாத கதை... எப்படி தைரியமா எடுத்தீங்க?''

''ஃபேன்டஸி ஜானர்ல சைக்காலஜி மற்றும் ஹாரர் படம் கொடுக்குறதுக்குப் பெரிய பட்ஜெட் தேவைப்படும். அதனாலதான் டைம் டிராவல் சப்ஜெக்ட்டை ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டேன். எனக்கும் டைம் டிராவல் ரொம்பப் பிடிக்கும். இது ஒரு வெஸ்டர்ன் கான்செப்ட்டாச்சே, நம்ம மக்கள் ஏத்துப்பாங்களான்னும் முதல்ல யோசனை இருந்தது. ஆனா, எங்ககிட்ட இருந்த பட்ஜெட்டுக்குள்ள இந்தக் கதையை எப்படி கொடுக்கலாம்னு நிறைய யோசிச்சோம்.

டைம் டிராவல் மட்டும்தான் மனசுல இருந்ததே தவிர டைம் மெஷின் பற்றி யோசிக்கல. நம்ம மக்கள் டைம் டிராவல் கதையை முதல்முறையா பார்க்குறதுனால இந்த கான்செப்ட்டை நம்ப மாட்டாங்கனு டைம் மெஷினை உள்ளே கொண்டு வந்தேன். டிராவல் பண்ற ஃபீல்காகத்தான் மெஷின். அடுத்து இந்த மெஷினை யார் செஞ்சான்னு ஆடியன்ஸ் கேள்வி கேட்பாங்கனு தோணுச்சு. அதனால 2065-வது வருஷத்துல கதைய ஆரம்பிச்சு மெஷினைக் கண்டுபிடிச்ச சயின்டிஸ்ட்டை உருவாக்கினோம். படம் முழுக்கவே ஆடியன்ஸ் நம்புறதுக்கு எந்த மாதிரியான விஷயங்கள் பண்ணணும்னு எங்களுக்குள்ள கேள்வி கேட்டுக்கேட்டே திரைக்கதையை ரெடி பண்ணோம்.

இந்த ஸ்க்ரிப்ட்டைக் குறைஞ்சது ஐம்பது பேராவது படிச்சு பார்த்திருப்பாங்க. எல்லா குறைகளும் நிவர்த்தி செஞ்சித்தான் திரைக்கதையை ஃபைனல் பண்ணோம். அதனால படம் ஆரம்பிக்கும்போது பெருசா எந்தப் பயமும் இல்லாம தைரியமா இறங்கினோம்.''

ரவிக்குமார்

''முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?''

'' 'சூது கவ்வும்' படத்துல இணை இயக்குநரா வேலை பார்த்தேன். அப்போதான் தயாரிப்பாளர் சி.வி.குமார் சார் எனக்கு அறிமுகம். அவரே, 'ஏதாவது கதை வெச்சிருக்கியா'னு கேட்டார். முழுக் கதையா என்கிட்ட எதுவும் இல்லைனு டைம் டிராவல் பற்றி மட்டும் சொன்னேன். 'நல்லாயிருக்கு டெவலப் பண்ணுங்க'னுனார். அப்புறம், சி.வி.குமார் சார்கிட்ட முழுக் கதையையும் சொன்னேன். அவருக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது. என்மேல அவருக்கு நிறைய நம்பிக்கையும் இருந்தது. ஒருத்தங்களைப் பற்றி இன்னொருத்தர் வெச்சிருக்குற மதிப்பீடுகளை எப்போதும் தனக்கானதா சி.வி.குமார் சார் எடுத்துக்க மாட்டார். நம்மலே சரியில்லைன்னு சொன்னாகூட எடுத்துக்க மாட்டார். அவரோட சப்போர்ட் எனக்குக் கிடைச்சதுனால பொறுப்பும் அதிகமாகிருச்சு. அடிக்கடி 'ஸ்க்ரிப்ட் வேலைகள் முடிஞ்சிருச்சா'னு கேட்டுக்கிட்டே இருப்பார். அதேமாதிரி ஸ்க்ரிப்ட் படிச்சிட்டு நிறைய கரெக்‌ஷன்ஸ் சொன்னார். கதை பட்ஜெட்டுக்குள்ள இருக்குற மாதிரியும் பார்த்துக்குவார். இதுதான் கதைனு எல்லாமே முடிவான பிறகுதான் ஹீரோ யார்னு தேட ஆரம்பிச்சோம்.''

''ஆமாம்... படத்துல ஸ்டார்காஸ்ட் ரொம்ப சரியாயிருக்கும். எப்படி நடிகர்களை ஃபிக்ஸ் பண்ணீங்க?''

விஷ்ணு விஷால்

''முதல்ல கதையை ரெண்டு, மூணு ஹீரோக்கள்கிட்ட சொன்னேன். குறிப்பா, தெலுங்கு நடிகர் நானிகிட்ட சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. 'பண்றேன்'னு சொல்லிட்டார். தமிழ் மற்றும் தெலுங்குனு ரெண்டு மொழியில இந்தப் படத்தை எடுக்குறதா பிளான் பண்ணோம். ஆனா, நானி இந்த ப்ராஜெக்ட்டுக்குள்ள வர்றதுக்கு அவருக்குக் கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. அதனால, சி.வி.குமார் சார் வேறொரு நடிகரைத் தேடலாம்னு சொன்னார். விஷ்ணு விஷால்கிட்ட கதை சொல்லப் போனேன். அவருக்கு, இந்தப் படம் பண்றதுல பெரிய தயக்கமிருந்தது. ஏன்னா, ஸ்க்ரிப்ட்ல இருக்குறது அப்படியே தெளிவா திரையில வந்துடுமான்னு சந்தேகத்தோடவே இருந்தார். மூணு முறை இந்தக் கதையைக் கேட்டார். அப்புறம் சரினு சொல்லிட்டு ஷூட்டிங் வந்தார். ஸ்பாட்டுக்கு வந்த மூணாவது நாள் திரும்பவும் அவருக்குப் பெரிய குழப்பம். அதனால, திரும்பவும் கதையை அவர் மனைவிகூட சேர்ந்து கேட்டார். அவர் மனைவி ரஜினி, 'ரொம்ப நல்லாயிருக்கு. ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க'னு அவர்கிட்ட சொன்னாங்க. அப்புறம் திரும்ப நடிக்க ஆரம்பிச்சார். ஸ்பாட்ல 'அடுத்து என்ன சீன் எடுக்கப் போறீங்க'னு கேட்டுக்கிட்டே இருப்பார். படத்தோட ஷூட்டிங் முடியுறப்போ, 'ஃபர்ஸ்ட் ஹாஃப் வரைக்கும் ஓகே. செகண்ட் ஹாஃப்லதான் என்ன நடக்கும்னு தெரியல. படம் பார்த்தாத்தான் தெரியும்'னு சொல்லிட்டே இருப்பார். கடைசியா பிரசாத் லேப்ல படத்தைப் பார்த்துட்டு ரொம்பவே சந்தோஷப்பட்டார். 'தெளிவா வந்திருக்கு'னு பாராட்டினார்.

நம்ம நண்பனுக்குச் சட்டை வாங்கும்போது, அது அவனுக்குப் பிடிக்குமா, செட் ஆகுமான்னுலாம் யோசிக்காம ஒண்ணு எடுப்போம். அது அவனுக்கும் பிடிச்சிருக்கும். அதுமாதிரியான நண்பர்தான் எனக்கு கருணாகரன். புலிவெட்டி ஆறுமுகம் கேரக்டரை கருணாவுக்காக மட்டும்தான் எழுதினேன். எழுதுறப்போ கருணாதான் மனசுல இருந்தார். 'கருணாவுக்கு மட்டும் எப்படி நல்லா ஸ்க்ரிப்ட் கொடுக்குறீங்க'னு சிலர் கேட்பாங்க. ஏன்னா, 'அயலான்' படத்துலயும் அவருக்கு நல்ல கேரக்டர் இருக்கு. ரொம்ப நல்ல மனிதர் கருணா. எப்பவும் ஊக்கப்படுத்திக்கிட்டே இருப்பார். நம்ம எழுதுனதை சரியா டெலிவர் பண்ணுவார். மாற்றமே இருக்காது. நமக்கான மனிதர் ரவிக்குமார்னு மனசுல எப்போவும் வெச்சிருப்பார்.

படத்தோட ஹீரோயினா மியா ஜார்ஜ் முதல்ல இல்ல. வேறொரு ஹீரோயின் இருந்தாங்க. மியா ஜார்ஜ் இருந்தா நல்லாயிருக்கும்னு இயக்குநர் நலன் சார்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தேன். நலன் சார் இதை சி.வி.குமார் சார்கிட்ட சொல்லியிருக்கார். அடுத்தநாள் பார்த்தா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மியா ஜார்ஜ் காஸ்ட்யூமோட வந்து நிக்குறாங்க. இந்தப் படம் நல்லா வந்ததுக்கு நலன் மற்றும் சி.வி.குமார் சார்தான் முக்கியக் காரணம்.

ஆர்யா படத்துல நடிச்சதுக்கு விஷ்ணு விஷாலுக்குத்தான் நன்றி சொல்லணும். ஏன்னா, சயின்டிஸ்ட் கேரக்டருக்குப் பெரிய நடிகர் யாராவது இருந்தா நல்லாயிருக்கும்னு அவர்தான் ஆர்யாகிட்ட பேசினார். 'ஆர்யாவை நேர்ல பார்த்து கதை சொல்லுங்க'ன்னார். கதையைச் சொன்னதும் நேரா ஸ்பாட்டுக்கு வந்து நடிச்சுக் கொடுத்துட்டார் ஆர்யா. ஸ்பாட்ல எதுவுமே பேச மாட்டார். அமைதியா இருப்பார். கொஞ்ச நாளுக்கு 'ஆர்யாவை வெச்சுதான் ஷூட்டிங் நடந்ததா'னு எனக்கே டவுட்டா இருக்கும்.''

''இசை ஹிப் ஹாப் ஆதி... அவர் எப்படி இந்தப் படத்துக்குள் வந்தார்?''

ஹிப்ஹாப் தமிழா ஆதி

''சி.வி.குமார் சார் சொல்லித்தான் என்னைப் பார்க்க வந்தார் ஆதி. ஃபேன்டஸி கதைனு சொன்னவுடனே, 'ராஜா ராணி' கதைனு ஆர்வமா இருந்தார். ரோட்டு முக்குல இருந்த கடைக்குக் கூட்டிட்டுப் போய் முழுக் கதையையும் சொன்னேன். 'இன்று நேற்று நாளை'தான் அவரோட முதல் படமா இருந்திருக்க வேண்டியது. இடையில 'ஆம்பள' படத்தோட ஷூட்டிங் முடிஞ்சு பாட்டுகள் மட்டும் பாக்கியிருந்ததுனால அங்கே போனார். 'ஆம்பள' முதல்ல ரிலீஸாகிருச்சு.

ஹிப்ஹாப் ஆதி முதல்ல கம்போஸ் பண்ணியிருந்த பாட்டு எனக்குப் பெருசா திருப்தியா இல்ல. அதனால, ' நீங்க படத்தை ஒருமுறை பார்த்துட்டா ஐடியா கிடைக்கும்'னு அவர்கிட்ட சொன்னேன். எடிட்டிங்ல இருந்த படத்தைப் பார்த்துட்டு ரொம்ப குஷியாகிட்டார். நைட் மூணு மணியிருக்கும். வடபழனி பஸ் டிப்போ பின்னாடி நடந்துபோய் ஒரு டீ கடையில் நின்னோம். பயங்கரமா பேசினார். அவர் சொன்னது எனக்கே கொஞ்சம் மிகையா தெரிஞ்சது. 'என்னோட மியூசிக்கூட இந்தப் படத்துக்குத் தேவையில்லைங்க. உங்க படம் ஜெயிச்சிரும்'னார். படத்துல இருந்து எஸ்கேப் ஆகத்தான் இப்படி சொல்றாரேனுகூட யோசிச்சேன். ஆனா, ரொம்ப மெனக்கெட்டு மும்பை வரைக்கும் போய் சங்கர் மகாதேவனைப் பாட வெச்சார். நல்ல மியூசிக் கொடுத்து படத்தையும் ஒருபடி தூக்கி விட்டார். ஆதி செம பாசிட்டிவிட்டி கொடுப்பார். நம்மை கொஞ்சம்கூட குழப்பமா, தயக்கமா இருக்க விட மாட்டார். ஆதியும் சரி அவரோட நண்பர் ஜீவாவும் சரி நல்ல காம்போ.''

'' 'இன்று நேற்று நாளை' படத்தை முதல்ல தெலுங்குலயும் பண்ற ஐடியா இருந்ததுன்னு சொன்னீங்களே... எதுவும் முயற்சி எடுத்தீங்களா?''

''தமிழ்ல படம் ஹிட்டானதுமே தெலுங்குல ரீமேக் பண்ணலாம்னு இருந்தோம். ஆனா, சில காரணங்களால் முடியல. இந்தியில இந்தப் படத்தை ஆயுஷ்மான் குரானா மாதிரியான ஹீரோவை வெச்சு டைரக்‌ஷன் பண்ண ஆசையிருக்கு. இப்போயிருக்குற சூழல்ல இந்திக்கு ஏத்த மாதிரியே இன்னும் கலர்ஃபுல்லா படத்தை எடுத்துட முடியும்ன்ற நம்பிக்கை எனக்கிருக்கு.''

'இன்று நேற்று நாளை'

''சிவகார்த்திகேயனுடன் 'அயலான்'... படம் என்ன ஸ்டேஜ்ல இருக்கு?''

'' 'இன்று நேற்று நாளை' படத்தைப் பார்த்துட்டு, என் மேல பெரிய நம்பிக்கை வெச்சு சிவகார்த்திகேயன் அவருக்குக் கதை சொல்லக் கூப்பிட்டார். 2015 ஜூன் மாசம்தான் 'இன்று நேற்று நாளை' ரிலீஸாச்சு. ஆனா, ஆகஸ்ட் மாசமே 'அயலான்' படத்துக்கான அட்வான்ஸைக் கையில கொடுத்துட்டார். 2016 ஜனவரில முழு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டேன். முதல்ல சொன்ன கதைப்படி ஹீரோ பெரிய நிறுவனத்துல வேலை பார்ப்பார். ஆனா, ஒரு கட்டத்துல அந்த நிறுவனத்துக்கே எதிரா ஹீரோ செயல்படுற மாதிரி சூழல் மாறிடும். இதை சயின்ஸ்ஃபிக்‌ஷன் கதையா சிவாகிட்ட சொல்லியிருந்தேன். ஆனா, அப்போதான் 'வேலைக்காரன்' படத்தின் கதையையும் அவர் கேட்டிருந்தார். ரெண்டுமே ஒரே கதை மாதிரியான ஃபீல் கொடுத்திருக்கு. அதனால, என்னோட கதையை மாத்தலாம்னு முடிவு பண்ணி அந்த வருஷக் கடைசிலயே வேற கதையை ரெடி பண்ணிட்டேன். 2017-ல 'வேலைக்காரன்' ரிலீஸாச்சு. இதுக்கு அப்புறம் எங்களோட படத்துக்குள்ள போகலாம்னு இருந்தோம். அப்போ அவருக்கு 'சீமராஜா' ப்ராஜெக்ட் போயிட்டு இருந்ததுனால எங்க படத்தோட வேலையை ஆரம்பிக்க முடியல. இந்தப் படத்துக்கு அடுத்து எங்க ஷூட்டிங் தொடங்க இருந்தப்போ பெப்சி தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் நடந்துட்டு இருந்தது. இதுல 45 நாள்கள் வரைக்கும் போய் அப்புறம்தான் எங்க படம் ஆரம்பமாச்சு. சிவகார்த்திகேயன் என்மேல வெச்சிருக்க நம்பிக்கையாலதான் வேற எந்த ப்ராஜெக்டுக்கும் போகமா இருக்கேன். இதுதான் இந்த அஞ்சு வருஷத்துல நடந்தது.''



source https://cinema.vikatan.com/tamil-cinema/director-ravikumar-shares-memories-about-his-indru-netru-naalai-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக