Ad

திங்கள், 29 ஜூன், 2020

காசி பெயருக்கு மாறிய ஹார்லி டேவிட்சன்! -சிக்கும் RTO அலுவலக புரோக்கர்கள்?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி என்ற சுஜி சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இளம் பெண்களைக் காதலிப்பதாக நடித்து ஏமாற்றிய வழக்கு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பெண் மருத்துவர் ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றிய காசி அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அவரிடம் இருந்து லேப்டாப், விலை உயர்ந்த வாட்ச் உள்ளிட்டவைகளை பரிசாக பெற்றதுடன் அடிக்கடி பணம் பறித்தும் வந்துள்ளான். ஒருகட்டத்தில் பணம் கொடுக்காததால் பெண் டாக்டரின் புகைப்படங்களை நண்பர்களுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

சென்னை பெண் மருத்துவர் புகார் அளித்தததைத் தொடர்ந்து காசி என்ற சுஜி கைது செய்யப்பட்டார். அவரது மொபைல் போனை சோதனை செய்தபோது மேலும் பல பெண்களை அவர் ஏமாற்றியது தெரியவந்தது. காசி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவனிடம் ஏமாந்த சிறுமி உள்ளிட்ட மேலும் நான்கு பெண்கள் புகார் அளித்தனர். காசியுடன் சேர்ந்து பெண்களை ஏமாற்றிய அவனின் நண்பர்களான டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காசியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹார்லி டேவிட்சன் பைக்

இந்த நிலையில் நாகர்கோவிலில் பிரின்டிங் பிரஸ் நடத்திவரும் டிராவிட் என்பவர் காசியிடம் வட்டிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வாங்கியதாகவும் அந்தப் பணத்துக்கு அதிக வட்டி வாங்கிய காசி மேலும் அவரது ஹார்லி டேவிட்சன் பைக்கையும் பறித்துள்ளதாகவும் வடசேரி காவல் நிலையத்தில் டிராவிட் கொடுத்த புகாரின் அடிப்படையில் காசி மீது கந்துவட்டி வழக்கு தொடரப்பட்டது. காசியிடம் இருந்து ஹார்லி டேவிட்சன் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

காசி மீது ஒரு போக்ஸோ உள்ளிட்ட ஐந்து பாலியல் வழக்குகள் மற்றும் ஒரு கந்துவட்டி வழக்கும் பதியப்பட்டுள்ளது. மேலும், காசி மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்த நிலையில், காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. பாலியல் வழக்கு மட்டுமல்லாது காசியின் கந்து வட்டி வழக்கையும் சிபிசிஐடி போலீஸார்தான் விசாரண நடத்தி வருகின்றனர். டிராவிட் என்பவரின் ஹார்லி டேவிட்சன் பைக்கைப் பறித்த காசி அதை தன் பெயருக்கு மாற்றியது குறித்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், அந்த பைக்கின் ஆர்.சி புக்கை காசி தன் பெயருக்கு மாற்றியது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிராவிட் தன் பெயரில் இருந்த ஹார்லி டேவிட்சன் பைக்கின் ஒரிஜினல் ஆர்.சி புக்கை வேறு ஒருவரிடம் அடமானமாக வைத்திருக்கிறார். ஒரிஜினல் ஆர்.சி புக் இல்லாமலே அந்த பைக்கை காசி தன் பெயருக்கு மாற்றம் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தைச் சேர்ந்த சிலர் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காசி என்ற சுஜி

இந்த நிலையில், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் செல்வாக்கு மிகுந்த சில புரோக்கர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, புரோக்கர்கள் ஐந்துபேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். கந்து வட்டி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் விதமாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/cbcid-investigating-rto-brokers-regarding-kasis-luxury-bike

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக