Ad

வெள்ளி, 26 ஜூன், 2020

கடல்பாசி சோடா டு மொஜிட்டோ! -மதுரையைக் கலக்கும் முதுநிலைப் பட்டதாரிப் பெண்

கோலி சோடா, சர்பத், கலரு என்று புழக்கத்தில் இருந்த உள்ளூர் குளிர்பானங்களை மறந்து வேதிப் பொருள்களால் ஆன வெளிநாட்டு குளிர்ப்பானங்களை நம் மக்கள் விரும்பி அருந்திவரும் இக்காலத்தில் கோலி சோடாவையும், சர்பத், ஐஸ்கிரீம்களை விதவிதமான சுவையில் தயாரித்து பிரபலமாகி வருகிறார் பட்டதாரிப் பெண்ணான சூர்யா.

சூர்யாவின் குளிர்பானக் கடை

புதிய சிந்தனையும் மண்ணுக்கேற்ற தன்மையும் விடாமுயற்சியும் இருந்தால் செய்யும் தொழிலில் வெற்றிபெறலாம் என்பதற்கு மதுரை செல்லூரில் வசிக்கும் சூர்யா முன்னுதாரணமாக இருக்கிறார்.

லேடி டோக் கல்லூரி சாலையோரத்தில் அவர் நடத்தி வரும் குளிர்பானக் கடையில் கிடைக்கும் வெரைட்டியான சோடா, சர்பத், ஐஸ்கிரீமைத் தேடி இளைய தலைமுறையினர் படையெடுக்கின்றனர்.

புதினா, இஞ்சி, எலுமிச்சை கலந்த கோலி சோடா, புல்ஜார் சோடா, பால் சர்பத், பூஸ்ட் குலுக்கி மொஜிட்டோ, லெஸ்ஸி, பலூடா ஐஸ்கிரீம் என விதவிதமாகத் தயாரித்து வரும் சூர்யாவிடம் பேசினோம்.

''முதுநிலை பட்டப்படிப்பை இரண்டு வருடத்துக்கு முன் முடித்தவுடன் திருமணம் ஆகிவிட்டது. கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பதைவிட சுயதொழில் செய்ய வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது. குடும்பத்தினருடன் ஆலோசித்த பிறகு, உறவினர் நடத்தி வந்த இந்த சோடாக் கடையை எடுத்து நடத்த முடிவு செய்தேன்.

சூர்யா

வழக்கமான குளிர்பானக் கடையாக நடத்தாமல், வாடிக்கையாளர்கள் தினமும் தேடிவரும் வகையில் புதுமையாகச் செய்ய வேண்டும் என்று யோசித்தேன். சோடா மூலம் தயாரிக்கக்கூடிய புதிய வகை குளிர்பானங்களை யூடியூப் மூலம் தயாரிக்கக் கற்றுக் கொண்டேன். அது சரியானதா, உடல் நலத்துக்கு உகந்ததா என்பதை உணவுத்துறையில் பட்டம் பெற்ற எனது தோழிகளிடம் ஆலோசனை கேட்டேன்.

Also Read: 10 பைசாவுக்கு சோடா விற்றவர், 12 நொடியில் கோல் அடித்தார்! - ஐ.எம்.விஜயன் பிறந்தநாள் பகிர்வு

இங்கு கடையைத் தொடங்கியதும் கல்லூரி மாணவிகள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் என் கடையின் வாடிக்கையாளர்களாக மாறிவிட்டார்கள். அவர்கள் விரும்பும் வகையிலும் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாக்கும் எலுமிச்சை, புதினா, இஞ்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி, கோலி சோடா, கடல்பாசி சோடா, ஆரஞ்சு சோடா, புல்ஜார் சோடா, பால் சர்பத், பூஸ்ட் குலுக்கி மொஜிட்டோ, பலூடா ஐஸ்கிரீம், லஸ்ஸி எனப் பலவற்றை தயாரித்து விற்பனை செய்கிறேன்.

சூர்யா

காலை முதல் மாலை வரை வியாபாரம் செய்கிறேன். இதில் எனக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. ஆரோக்கியமான குளிர்பானங்களைத் தயாரித்து விற்பனை செய்கிறோம் என்ற திருப்தியும் கிடைக்கிறது. அலுவலக வேலையை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்காமல் புதிய தொழில்களில் திட்டமிட்டு பெண்கள் இறங்கினால் வெற்றி அடையலாம்'' என்றார்.

தற்போது கொரோனா காலம் என்பதால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம் அணிவது பற்றியும் தனிமனித சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் இந்தப் பட்டதாரிப் பெண்.

மதுரையைக் கலக்கும் சூர்யாவின் சோடாக் கடை! மதுரை செல்லூரைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண், சூர்யா. திருமணமான இவர் தனது சொந்த...

Posted by Vikatan EMagazine on Friday, June 26, 2020


source https://www.vikatan.com/news/tamilnadu/success-story-about-madurai-graduate-womans-cool-drinks-shop

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக