Ad

வியாழன், 25 ஜூன், 2020

`இறந்து கிடந்த கவிதை ஒன்று...!'- வாசகியின் காதல் கதை #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

"நான் முதலில் பேச வேண்டுமா

இல்லை நீயே முதலில் பேசி விடுவாயா

என்ற குழப்பத்திலேயே

பல நாள்கள் பேசாமலே உன்னைக் கடந்துவிட்டேன்

அடுத்த முறை

நீ பேசாவிடினும் பரவாயில்லை

நான் பேசுவதில் தவறேதுமில்லை

என்பதையாவது சொல்லிவிட்டு போ"

வீட்டைச் சுத்தம் செய்யும் பொழுது கிடைத்த கணக்கு நோட்டின் கடைசிப் பக்கத்தில் இதைப் படித்ததும் எனக்குள் இறந்து கிடந்த ஏதோ ஒன்று மீண்டும் உயிர் பெற்று எட்டிப் பார்த்தது

நான்கு ஆண்டுகளுக்கு முன் சென்று கல்லூரிக் கால நினைவுக்குள் புகுந்தது மனது.

Representational Image

அவன் மேல் அன்று இருந்த ஒரு தலை காதலை அவனிடம் கூற முடியாமல் காகிதத்திடம் காட்டிய கோபத்தின் வெளிப்பாடே இந்தக் கவிதை.

ஒரு தலை காதல் என்பது சுக துக்கம் கலந்த விவரிக்க முடியாத ஒரு உணர்வு. ஆரம்பத்தில் இனிப்பாய் இனித்தது. கல்லூரியில் அவன் போகும் இடத்திற்கெல்லாம் பின் தொடர்ந்து சென்றதுண்டு.

கேன்டீன் என்றால் அங்கு ஓடுவேன். பேருந்து நிறுத்தத்தில் அவனைப் பார்த்ததாய் தோழிகள் கூறுவார்கள். சட்டென அங்கு சென்று நிற்பேன். அவனைப் பார்க்க வேண்டும் அவன் பார்வை பட வேண்டும் அவ்வளவே அவ்வப்போது என்னை மீறி வெளிப்படும் சில கவிதைகள்.. இதில் என்ன விந்தை என்றால் அவன் மேல் உள்ள உணர்வை வெளிப்படுத்த எழுதிய கவிதைகள் அவனைச் சேர்ந்ததில்லை.

நான் ஒரு தலையாக நேசம் வளர்த்தது தோழிகளுக்குப் பிடிக்காமல் பல முறை கண்டித்துள்ளனர். ஒரு பெண் முதலில் காதல் கொள்ளும் பொழுது ஏற்படும் அவமானங்களைச் சந்தித்தேன். ஆனால் அதெற்கெல்லாம் நான் துவண்டுவிடவில்லை. என் காதலைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டேன்.

இந்த அகிலத்தில் உள்ள சக்திகளெல்லாம் சேர்ந்து எங்களைச் சேர்த்து வைக்கும் என்று மனக் கோட்டைக் கட்டினேன். காத்திருப்பிலும் சுகம் உண்டு என மயங்கிக் கிடந்தேன். நாள்கள் செல்ல ஆரம்பித்தன. காத்திருப்பு ஒரு கால கட்டத்திற்கு மேல் கசப்பாகும். ஆம், கசப்பானது.

Representational Image

நான் அவனை நேசிக்கும் அளவுக்கு, அவனால் என்னை நேசிக்க முடியாது என்ற உணர்வு ஏற்பட்டது. யார் சொல்லியும் கேட்காமல் காதல் வளர்த்த மனது திரும்பக் கிடைக்காத காதல் என்று தெரிந்ததும் காதலைத் துறக்கவும் முடிவு செய்தது

இயற்கையின் மேல் ரௌத்திரம் எழுந்தது. நிகழாது எனில் ஏன் விருப்பம் நேர வேண்டும். அவனுக்கு ஏன் இன்னொருத்தியைப் பிடிக்க வேண்டும்.

என் காதல் ஏன் திரும்பக் கிடைக்காமல் போனது என்று கண்ணுக்குத் தெரியாத சக்திகளைத் திட்டித் தீர்க்கத் தோன்றும்

ஆனால், அதற்குக் காலம் வெகு விரைவில் பதில் கூறியது. அதை விட அதிகம் நேசம் நிறைந்த வேறொரு வாழ்க்கை கிடைத்தது. இந்த வாழ்க்கையை எண்ணி எண்ணி மகிழ்கிறேன். இதுவே எனக்கு சரியானதாய்ப் பலமுறை உணர்ந்து உள்ளேன்.

எனக்கு மட்டும் அல்ல. பெரும்பாலான தோல்வி கண்டோர் வாழ்க்கையை இயற்கை மலர வைத்துக்கொண்டுள்ளது.

ஆனால், நிறைவேறாமல் போகும் எண்ணங்களை, நமக்கென இல்லாத உணர்வுகளை, நடக்காத ஆசைகளை ஏன் மனிதர்களுக்குள் விதைக்கிறது என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் எனக்கு பதில் கிட்டவில்லை! இனி அதற்கு நான் பதில் தேடப் போவதும் இல்லை.

மனம் கனத்து லேசானது. அந்த கனம் கைக்கு இறங்கியது. என் கையில் உயிரற்று கிடந்த பக்கத்தைக் கிழித்து எறிந்தேன். இறந்து கிடந்த கவிதையை நீக்கிய திருப்தியில் வீட்டைச் சுத்தம் செய்யும் வேலையை மீண்டும் தொடர்ந்தேன்.

-செ. ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/reader-shares-college-love-story

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக