Ad

ஞாயிறு, 28 ஜூன், 2020

கரூர்: கால்நடைகளுக்காகவே ஒரு குளம்! -20 வருடங்களுக்குப் பிறகு நிரம்பியதால் குதூகலம்

கோடைமழை வெளுத்துவாங்க, வறட்சியான பகுதியில் ஒரு குளம் கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால், '1,000 கால்டைகளுக்கு இனி குடிக்க தண்ணீர் பஞ்சம் தீர்ந்தது. இயற்கைக்கு நன்றி' என்று மகிழ் கிறார்கள், கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள்.

மழைநீரால் நிரம்பிய பாப்பாமடை குளம்

Also Read: `கரூர் காவிரியில் குளிக்க நினைப்பவர்களா நீங்கள்?' -அதிர்ச்சி கொடுக்கும் அபாயக் குழிகள்

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது, தெற்கு அய்யம்பாளையம். கரூர் மாவட்டத்தின் தென்கோடி எல்லையாக இருக்கும் இந்தக் கிராமம், மிகவும் வறட்சியான கிராமம். வானம் பார்த்த பூமி என்பதால், இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள மலைகளில் எப்போதாவது பெய்யும் மழைநீரைக்கொண்டு, மானாவாரி பயிர்களைப் பயிரிட்டுவருகிறார்கள், இங்குள்ள விவசாயிகள்.

பாப்பாமடை குளத்தில் நீர் அருந்தும் கால்நடைகள்

ஆனால், மழை இங்கு அதிகம் பெய்யாது என்பதால், மானாவாரிப் பயிர்களை எல்லா வருடமும் இவர்களால் பயிரிட முடியாத சூழல். இந்தச் சூழலில்தான், தங்கள் வாழ்க்கையை உருட்ட, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்துவருகிறார்கள்.

இந்தக் கிராமத்துக்கு மேற்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள தெக்கி மலை, மேற்கு மலைகளில் ஆடு, மாடுகளை மேய்த்து, அதை விற்பனை செய்து, அந்த வருமானத்தில் காலத்தைக் கடத்திவருகிறார்கள். அப்படி தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க, ஊர் முகப்பில் உள்ள பாப்பா மடை குளத்தைத்தான் பயன்படுத்திவந்தார்கள். இந்தக் கிராமத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்கவே, கடந்த 500 வருடங்களுக்கு முன்பு இந்த பாப்பா மடை குளம், ஊர் மக்களால் வெட்டப்பட்டிருக்கிறது.

மழைநீரால் நிரம்பிய பாப்பா மடை குளம்

ஆனால், இந்தப் பகுதியில் மழைப்பொழிவு குறைவாக இருந்ததால், கடந்த 20 வருடங்களாக இந்தக் குளம் சரிவர நிரம்பவில்லை. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தப் பகுதியில் மூன்றுமுறை கனமழை பெய்ய, பாப்பா மடை குளம், கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு முழுமையாக நிரம்பியிருக்கிறது.

இதுகுறித்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞரான பாலசுப்ரமணியிடம் பேசினோம்.

``3 ஏக்கர் பரப்பளவில், எங்க முன்னோர்களால் இந்த பாப்பா மடை குளம் வெட்டப்பட்டுள்ளது. அதோடு, மலைகளில் பெய்யும் மழைநீர், பாப்பா மடை குளத்தில் வந்து விழும்படி வாய்க்கால்களையும் வெட்டியிருக்காங்க. அதன்மூலமாக, பாப்பா மடை குளம் நிரம்பும். இங்கு நிரம்பும் மழைநீரை, எங்க ஊர் கால்நடைகள் அருந்தப் பயன்படுத்தியிருக்காங்க.

முன்பு வறண்டுகிடந்த பாப்பாமடை குளம்

எங்க ஊர் மட்டுமல்ல, அருகில் உள்ள கிழக்கு அய்யம்பாளையம், காட்டுநாயக்கனூர், தெக்கிகளம் உள்ளிட்ட 5 ஊர்களைச் சேர்ந்த கால்நடைகளும் இந்த பாப்பா மடை குளத்தில் உள்ள தண்ணீரைத்தான் அருந்தும். ஆனால், கடந்த 20 வருடங்களாக இங்கு சரிவர மழை பெய்யாததால், பாப்பா மடை குளம் முழுமையா நிரம்பலை.

ஆனா, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்றுமுறை கோடைமழை நல்லா பெய்தது. அதோடு, பாப்பா மடை குளம் மற்றும் அதற்கு தண்ணீர் கொண்டுவரும் வாய்க்கால்களை நன்றாகத் தூர் வாரியதால், 20 வருடங்கள் கழித்து பாப்பா மடை குளம் முழுமையாக நிரம்பியிருக்கு. முன்பு பாப்பாமடை குளம் வறண்டு கிடந்ததால், கால்நடைகளை வளர்க்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டாங்க. அதனால், வருமானத்துக்கு வழியில்லாம தவிச்சாங்க. கொரோனா வேறு வந்து அன்றாடப் பொழைப்பை பாதிச்சதால, அவர்களின் வருமானம் கேள்விக்குறியானுச்சு.

மழைநீரால் நிரம்பிய பாப்பாமடை குளம்

இந்த நிலையில்தான், இயற்கையே பாப்பா மடை குளத்தை மழை மூலம் நிரம்ப வச்சுட்டு. இதனால், 1,000 கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைச்சிருக்கு. விவசாயிகளின் பஞ்சம் தீர வழி பிறந்திருக்கு. அதோடு, 20 வயதுக்குள் உள்ள சிறுவர்களும் இளைஞர்களும் முதன்முறையாக பாப்பா மடை குளம் நிறைந்ததைப் பார்க்கும் வரத்தைப் பெற்றிருக்கிறார்கள்" என்றார், மகிழ்ச்சியாக!



source https://www.vikatan.com/news/environment/karur-village-pond-filled-after-20-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக