Ad

வெள்ளி, 26 ஜூன், 2020

புதுக்கோட்டை: மதுபோதையில் ரகளை! -உதவி ஆய்வாளரைத் தாக்கிய காவலர்

புதுக்கோட்டை அருகே முத்துப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் புதுக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. ஜாகிர் உசேனுடன் ஏற்பட்ட ஒரு பிரச்னையில் அவரின் மனைவி தன் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு தன் தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். மது போதையில் அங்கு சென்றவர் மனைவி மற்றும் மாமனாரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கணேஷ் நகர் போலீஸார் ஜாகீர் உசேனைத் தேடி வந்த நிலையில், சொந்த ஊருக்குச் சென்ற ஜாகிர் உசேன் மதுபோதையில் பெற்றோர் மற்றும் ஊர்க்காரர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதையறிந்த வல்லத்திராக்கோட்டை எஸ்.ஐ பாலசுப்பிரமணியன் ஜாகீர் உசேனைத் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மதுபோதையில் தள்ளாடிய ஜாகீர் உசேன், எஸ்.ஐ கன்னத்தில் ஓங்கி அறைந்ததோடு, எஸ்.ஐ கையில் வைத்திருந்த செல்போனைப் பறித்து சாலையில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகச் சொல்கிறார்கள். தப்பியோடிய ஜாகீர் உசேனை போலீஸார் துரத்திப் பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மது போதையில் எஸ்.ஐயினைத் தாக்கிய முதல் நிலைக் காவலர் ஜாகிர் உசேனைப் பணியிடை நீக்கம் செய்ய புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி அருண்சக்திகுமார் உத்தரவிட்டுள்ளார் எஸ்.பி உத்தரவின் பேரில் ஜாகிர் உசேன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 8ம் தேதி இந்தப் பிரச்னை நடைபெற்ற நிலையில் தற்போது அந்தக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



source https://www.vikatan.com/news/crime/policemen-was-suspended-for-attacking-sub-inspector

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக