திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கான `ஆவின்’ குளிரூட்டும் நிலையம், வேங்கிக்கால் பகுதியில் செயல்பட்டுவருகிறது. மாவட்டம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து காலை, மாலை என இரண்டு வேளைகளில் வாடகை வேன் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் கேன்கள் பல்வேறு வழித் தடங்களில் ஆவினுக்கு கொண்டுவரப்படுகின்றன.
அந்த வாகனங்கள் ஜி.பி.எஸ் கருவி மூலமாகவும் கண்காணிக்கப்படுகின்றன. இந்த நிலையில், குறிப்பிட்ட சில ஊர்களிலிருந்து கொண்டுவரப்படும் பாலின் தரம் சமீப காலமாக மிகவும் மோசமாக இருந்துள்ளது. இதையடுத்து, ஆவின் பொது மேலாளர் உலகநாதன் தலைமையிலான குழுவினர் பால் வேன்களை ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கினார்.
Also Read: `மதுரை செல்லும் டேங்கர் லாரி, தேனி வர தாமதம்!' -அதிர்ச்சிக் காரணம் சொல்லும் ஆவின் நிர்வாகம்
அப்போது, சில வேன்கள் மாற்றுத் தடத்தில் செல்வதும், குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து குளிரூட்டு நிலையத்துக்குத் தாமதமாக வருவதும் கண்டறியப்பட்டது. அந்த வாகனங்களில் கொண்டுவரப்படும் பாலின் தரத்தை சோதனைக்கு உட்படுத்தியபோது, பாலை முறைகேடாக வெளியில் விற்பனை செய்துவிட்டு காலி கேன்களில் தண்ணீரை நிரப்பிக் கொண்டுவருவதும் உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, திருவண்ணாமலை தாலுகா போலீஸில் ஆவின் பொதுமேலாளர் புகார் அளித்தார். அதன் பேரில், பாலில் தண்ணீர் கலந்து முறைகேடு செய்த வேன் ஓட்டுநர்கள் முரளி, சம்பந்தம், ராஜ்குமார், கார்த்திகேயன், செல்வம், மூர்த்தி, ரகுமாறன், கோபி ஆகிய 8 பேரை கைதுசெய்து அவர்களுடைய வேன்களையும் பறிமுதல் செய்தனர் போலீஸார். மேலும், இந்த முறைகேட்டில் உடந்தையாக இருந்ததாக ஆவினில் பணியாற்றிவரும் 3 அலுவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/aavin-milk-fraud-8-arrested-in-thiruvannamalai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக