Ad

ஞாயிறு, 28 ஜூன், 2020

`ஒரே நாடு, ஒரே கல்வி' ; உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க நிர்வாகியின் பொதுநல மனு... வலுக்கும் எதிர்ப்பு!

``மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), இந்திய பள்ளிச் சான்றிதழ் கல்வி வாரியம் (ஐ.சி.எஸ்.இ) ஆகியவற்றை இணைத்து ஒரே நாடு ஒரே கல்வி வாரியத்தை உருவாக்க வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21ஏ-கீழ் நாட்டில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக, கட்டாயமாக ஒரே மாதிரி கல்வியை அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். ஆனால், அதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே, நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு பொதுவான கல்வித் திட்டம் கொண்டுவர வேண்டும்.

உச்ச நீதிமன்றம்

அரசு, தனியாா் மற்றும் உள்ளூா் நிா்வாகம் என யாா் நடத்தும் தொடக்கப் பள்ளிகளாக இருந்தாலும் சரி அங்கு மாணவா்களுக்கு ஒரே பாடத் திட்டம்தான் இருக்க வேண்டும். மாநிலத்துக்கு ஏற்ப மொழிப் பாடங்கள், பாடங்கள் நடத்தப்படும் மொழி மாறலாம். ஆனால், பாடத் திட்டம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். இப்போது ஒவ்வொரு கல்வி வாரியமும், மாநிலங்களும் வெவ்வேறு மாதிரியான பாடத் திட்டத்தை வைத்துள்ளன. சி.பி.எஸ்.இ கல்வித் திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத் தோ்வுகள் நடத்தப்படும்போது, அந்தப் பாடத் திட்டத்தில் படிக்காத பிற மாணவா்கள் பிரச்னையை எதிா்கொள்ள நேரிடுகிறது'' என்று அவரின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கல்வியாளர்கள், ``கல்வி என்பது பண்பாட்டின் கூறு... இந்தியா, பலவகையான பண்பாடுகளைக் கொண்ட, பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. அதனால் கல்வி பலவகையாகத்தான் இருக்கும். ஒரே மாதிரியாக இருக்க சாத்தியம் இல்லை'' என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவுக்கு எதிராக கடுமையாக எதிர் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

நாடு முழுவதும் ஒரே கல்வித் திட்டத்தைக் கொண்டு வரக்கோரும் இந்த மனு குறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசும்போது,

``முதலில் நாடு முழுவதும் சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்கட்டும். 19-ம் நூற்றாண்டிலேயே ஜோதிராவ் பூலே, அதை வலியுறுத்தினார். 1911-ம் ஆண்டில் கோபால கிருஷ்ண கோகலே அனைவருக்கும் கல்வி கொடுக்கச் சொன்னார். விடுதலை இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் எல்லோரும் சமம் என்றது. 1966-ல் கோத்தாரி கல்விக் குழு பரிந்துரைப்படி பொதுப்பள்ளி முறைமையை உருவாக்கி அனைவருக்கும் அருகிலுள்ள பள்ளியில் தாய்மொழி வழியில் கல்வி கொடுக்க முன்வரட்டும். பொதுப்பள்ளி முறைமை என்பது ஒரு பள்ளியில் என்னென்ன அடிப்படை வசதிகள் இருக்க வேண்டுமோ அது அனைத்துப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும் என்பதே.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

இந்திய அரசமைப்புச் சட்டம், அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பை வழங்கச் சொல்கிறது. அவரவர் பண்பாட்டை, மொழியை, அவரவர் மொழியில் கற்கக் கூடிய வாய்ப்பை கொடுக்கச் சொல்கிறது. முதலில் அனைவருக்கும் கல்வியை அரசின் செலவில் கொடுக்கட்டும். பிறகு பொதுவான பாடத்திட்டம் குறித்துப் பேசலாம்'' என்றவரிடம்,

மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை என்பதால்தான் பொதுவான பாடத்திட்டத்தை வலியுறுத்தி இருப்பதாக மனுதாரர் கூறியிருப்பது குறித்துக் கேட்க,

``நடவடிக்கைகள் எடுக்காததற்கு என்ன காரணம், 1949, நவம்பர் 26-ம் தேதி அரசமைப்புச் சட்டம் கையொப்பமானபோது, இந்தியப் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி, கல்வியை அடிப்படை உரிமையாகக் கொண்டு வர மறுக்கப்பட்டது. அதேவேளை, அரசின் பொருளாதார நிலை உயரும்போது இலவசமாக கல்வியைக் கொடுக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இன்று பிரபோஸ் ஏவுகணைக்கு, மங்கள்யான் திட்டத்துக்கு, 20,000 கோடியில் நாடாளுமன்றம் கட்டுவதற்கு பணம் இருக்கிறது. இலவசக் கல்வி கொடுப்பதற்கு நிதி இல்லையா, இந்தியாவின் பொருளாதாரம் இன்னமும் உயரவில்லையா?

2005-ம் ஆண்டிலிருந்து இன்று வரை கல்விக்காக வரி வசூலிக்கப்படுகிறது. அது எந்தக் காரணத்துக்காக வசூலிக்கப்படுகிறதோ அதற்காகத்தான் செலவழிக்க வேண்டும். கல்விக்காக தனியாக ஒரு வரியே வசூலித்துக்கொண்டு இலவசக் கல்வி கொடுக்க முடியாது என்றால் அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது இல்லையா?

கல்வி என்பது பண்பாட்டின் கூறு; ஒவ்வொரு மாவட்டத்துக்குக் கூட அது மாறுபடலாம். ஆனால், நாடு முடுவதும் ஒரே பாடத்திட்டம் என்பது சாத்தியமில்லை, நியாயமுமில்லை. அது மக்களாட்சி மாண்புக்கு உட்பட்டது கிடையாது'' என்கிறார்.

ஜெயபிரகாஷ் நாராயணன்

கல்வியாளர்களின் கருத்து இப்படியிருக்க, ``ஏற்கெனவே ஒரே நாடு என்கிற பெயரில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வந்த மத்திய அரசு, தற்போது அதை பள்ளிக் கல்வியிலும் கொண்டு வர நினைக்கிறது. கண்டிப்பாக இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது'' என போர்க்கொடி உயர்த்துகிறார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக நல ஆர்வலருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

``இவர்கள் முன்வைக்கும் `ஒரே நாடு ஒரே கல்வி'த்திட்டம் என்பது அடிப்படையிலேயே தவறானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச, கட்டாயக்கல்வியை, மேல்நிலைக் கல்வி வரை வழங்குவதை அடிப்படை உரிமையாக்கியதுதான் சட்டப்பிரிவு 21ஏ. அந்தப்பிரிவு அனைவருக்கும் சமத்துவமான கல்வி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறதே தவிர, எந்த இடத்திலும் `ஒரே நாடு ஒரே கல்வி'த்திட்டம் என்று கூறவில்லை. அனைவருக்கும் சமத்துவமான கல்வியை முழுவதுமாக நிறைவேற்ற மறுக்கும் பாரதிய ஜனதா அரசு அதை ஒரே கல்வித்திட்டமாக மாற்ற முயல்கிறது. இதற்கு இவர்கள் முன்வைக்கும் ஒரே காரணம் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் பங்கு பெற அனைவரும் ஒரே கல்வித்திட்டத்தில் பயில வேண்டும் என்பதுதான்.

உண்மையில் அறிவுக்குப் புறம்பான, ஆக்கிரமிப்பை நோக்கமாகக் கொண்ட இந்த அகில இந்தியத் தேர்வுகளை நீக்கிவிட்டு மாநில அடிப்படையிலான தேர்வே சரியானது. அதனால்தால் நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு கடுமையாகப் போராடியது. இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால் கல்வி வேதமயமாக்கப்படும், புராண மயமாக்கப்படும், நமது பிள்ளைகளின் சீருடை கூட காவி மயமாக்கப்படும். எனவே, ஒரே நாடு ஒரே கல்விமுறை என்கின்ற அபாயத்தை எதிர்த்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கல்வியாளர்களும் உடனடியாக தங்களுடைய மறுப்புகளை எதிர்ப்புகளை எழுப்ப வேண்டும்'' என்றவரிடம், இப்போதுதான் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது, அதற்குள் இவ்வளவு எதிர்வினை ஆற்ற வேண்டுமா எனக் கேட்க,

Ashwini Upadhyay tweet

``வழக்கு தொடுத்த உபாத்யாயா என்பவர்தான், யோகா, வந்தேமாதரம் பாடல், இந்திமொழி ஆகியவற்றை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர். அதேபோல் இஸ்லாமிய தனிச்சட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர். இது போன்ற ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை வழக்குகளின் வழியாக நிறைவேற்றுவதற்காக உச்ச, உயர் நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகளைத் தொடுப்பவர். இந்தப் பின்னணியில் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ளலாம். ஆர்.எஸ்.எஸ் தன் திட்டங்கள் பலவற்றை பாராளுமன்றங்களின், சட்டமன்றங்களின் வழியாக நிறைவேற்றாமல் நீதிமன்ற வழக்குகளின் வழியாக நிறைவேற்ற முயல்வதின் வெளிப்பாடுதான் இந்த வழக்கு. ஏற்கெனவே இடஒதுக்கீடு, பாபர் மசூதி, ஆதார் அடையாள அட்டை ஆகியவையும் இவ்வாறு வழக்குகளின் வழியேதான் நம்மிடம் திணிக்கப்பட்டது. எனவே, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் பிரதிவாதியாக தமிழக அரசு, அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் தங்களை இணைத்துக் கொண்டு வழக்காடி வெல்ல வேண்டும்'' என்கிற கோரிக்கையை முன்வைக்கிறார், ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

Also Read: `உரிமை பறிபோகும்; கல்வி சிதைந்துபோகும்!'- புதிய கல்விக் கொள்கை பற்றி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி

இது குறித்து, தமிழக முன்னாள் கல்வி அமைச்சரும், அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளருமான, வைகைச் செல்வனிடம் பேசினோம்,

``சி.பி.எஸ்.இ, மெட்ரிகுலேஷன், ஸ்டேட் போர்டு என தனித்தனியாக இருக்கும் பாடத்திட்டங்களை அனைவருக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டமாக மாற்ற வேண்டும் என்பது பல காலமாக வல்லுநர்கள் சொல்லி வருவதுதான். ஏற்றத்தாழ்வற்ற ஒரு கல்விக்கொள்கை இருக்க வேண்டும் என்பதற்கான முன்னெடுப்புதான் இது. பா.ஜ.க-வின் கொள்கைகளைப் புகுத்துவதற்காக என்பது உண்மையல்லை'' என்கிறார் அவர்.

வைகைச்செல்வன்- வானதி சீனிவாசன்

பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர், வானதி சீனிவாசனிடம் பேசினோம், ``அனைத்துக் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்டுவருவது நல்ல விஷயம்தான். அஸ்வினி குமாா் உபாத்யாயா கோரும் விஷயங்கள் ஏற்கெனவே புதிய கல்விக் கொள்கையில் அரசாங்கம் சிந்தித்து வரும் விஷயங்கள்தாம். புதிய கல்விக் கொள்கைக்கு வலு சேர்க்கிற வகையில், அதன் அடிப்படையோடு ஒத்து வருகிற எந்தவொரு மாற்றத்தையும் பா.ஜ.க நிச்சயமாக ஆதரிக்கும்.

பொதுநல வழக்குகளின் நோக்கத்தை ஆராய்ந்த பிறகே எந்தவொரு வழக்கையும் நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும். இந்த மனுவிலும் அரசியல் நோக்கம் இருந்தால் நீதிமன்றம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை, பலமுறை இது போன்று பல மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை'' என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/education/education-activists-talks-about-cons-of-one-nation-one-education-board

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக