போலீஸ் ஏட்டு
பொன்னேரி, கெங்குசாமி நாயுடு தெருவைச் சேர்ந்தவர் துரைமுருகன் (43). இவர், மீஞ்சூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி ஜெயமாலா. இந்தத் தம்பதியருக்கு ஹரிஸ்ரீராம் என்ற மகன் உள்ளார். இந்தநிலையில் கடந்த 22.5.2020-ல் ஜெயமாலா, திடீரென இறந்துவிட்டார். மனைவி மீதுள்ள பாசம் காரணமாக துரைமுருகன், மனமுடைந்து காணப்பட்டார். அதனால், மனமாற்றத்துக்காக பொன்னேரி மதீனாபள்ளி தெருவுக்கு மகனுடன் துரைமுருகன் குடிபெயர்ந்தார்.
Also Read: கொரோனா அச்சம்; மன உளைச்சல்! -தற்கொலை முடிவை நாடிய `இருட்டுக்கடை' அல்வா உரிமையாளர்
கடந்த 25.6.2020-ம் தேதி காலை 7 மணியளவில் துரைமுருகனுக்கு அவரின் அண்ணன் பாண்டியன் போன் செய்துள்ளார். ஆனால் துரைமுருகன் போனை எடுக்கவில்லை. அதனால் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது துரைமுருகன் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாண்டியன், கதறி அழுதார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். துரைமுருகன் தூக்கில் தொங்கிய தகவல் பொன்னேரி காவல் நிலையத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
தற்கொலை
துரைமுருகனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரைமுருகன் மரணம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
துரைமுருகனின் மனைவி ஜெயமாலா, குடும்பத் தகராறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மனைவியின் இந்த முடிவு துரைமுருகனை மனதளவில் பெரிதும் பாதித்தது. மனைவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் அமைதியாக இருந்தார். இதையடுத்து, மனைவி இறந்த 3-வது நாளில் துரைமுருகனும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read: `அவர் கிரிக்கெட் வீரர்னு தெரியல சார்!' - ராபின்சிங் காரைப் பறிமுதல் செய்த சென்னை போலீஸ்
இந்தச் சம்பவம் தொடர்பாக துரைமுருகனின் அண்ணன் பாண்டியன், பொன்னேரி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதில் `எனக்கு 4 தம்பிகள். கடைசி தம்பி துரைமுருகன். நான் பொன்னேரி தண்டபாணி நாடார் தெருவில் குடியிருந்துவருகிறேன். எனது தம்பி துரைமுருகனின் மனைவி 22-ம் தேதி இறந்ததும் தம்பியையும் அவரின் மகனையும் பொன்னேரி மதீனாபள்ளி தெருவில் உள்ள வீட்டில் தங்க வைத்தேன். சம்பவத்தன்று தம்பி மகன் ஹரிஸ்ரீராம், என் வீட்டில் தங்கினார். அதனால் தனியாக இருந்த துரைமுருகன், தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மனைவி இறந்த மனவருத்ததில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மனைவி இறந்த மனவருத்தத்தில் தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/social-affairs/crime/minjur-police-constable-commits-suicide-in-ponneri
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக