பல கோடிகள் மதிப்புள்ள பேரல்
மாமல்லபுரத்தை அடுத்திருக்கும் எடையூர் கொக்கிமேடு கிராமக் கடற்கரையில் கடந்த 20-ம் தேதி இரும்புப் பேரல் ஒன்று கரை ஒதுங்கிக் கிடந்தது. அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடலோரக் காவல் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே அந்தப் பேரலைக் கைப்பற்றிய கடலோரக் காவல் பிரிவு போலீஸார் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பினர். ஆய்வின் முடிவில் அந்தப் பேரலில் இருந்தது `மெத்தம் பெடமைன்’ என்ற போதைப் பொருள் என்பதும், பல கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்தது என்றும் தெரியவந்தது.
அதையடுத்து கடந்த 21-ம் தேதி பரங்கிப்பேட்டையிலும் அதேபோல 4 பாக்கெட்டுகள் கரை ஒதுங்கியதாக வழக்குப் பதிவு செய்தார் பரங்கிப்பேட்டை காவல் நிலைய எஸ்.ஐ ஆனந்தன். மேலும் 2 கிலோ 750 கிராம் அளவுள்ள அந்த 4 பாக்கெட்டுகளில் 2 பிரிக்கப்பட்டிருந்தன என்றும் குறிப்பிட்டிருந்தார்.
காவல் நிலையத்தில் மாயமான கஞ்சா
ஆனால், `கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையை அடுத்திருக்கும் கடற்கரை கிராமமான சி.புதுப்பேட்டையில் `ரீபைண்ட் சைனீஸ் டீ’ (Refind Chineese tea) என்று எழுதப்பட்ட 8 பொட்டலங்கள் கரை ஒதுங்கிக் கிடந்தன என்றும் டீத்தூள் பாக்கெட்டுகள் போல இருந்தாலும் வாசனை வித்தியாசமாக இருந்ததால், அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டோம் என்றும் மீனவ கிராம மக்கள் உண்மையைப் போட்டு உடைத்ததால் விவகாரம் சூடு பிடித்தது.
3 மாதங்களுக்கு முன்பே பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட அந்தப் போதைப் பொருள் பாக்கெட்டுகள் குறித்த தகவலை மறைத்துவிட்டு, தற்போது கரை ஒதுங்கியது போல வழக்குப் பதிவு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர் அப்பகுதி மக்கள். மேலும் 8 பாக்கெட்டுகள் முழுதாக ஒப்படைக்கப்பட்ட நிலையில், வெறும் 4 பாக்கெட்டுகள் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டிருக்கிறது. மேலும், அதில் 2 பாக்கெட்டுகள் கிழிந்து இருப்பதன் மர்மம் என்ன என்றும் கேள்வி எழுப்பத் தொடங்கினர் மக்கள்.
கஞ்சா எனத் தெரியாமல் எரித்துவிட்டோம்
மாயமான 4 கஞ்சா பாக்கெட்டுக்களின் விலை மதிப்பு சுமார் ரூ.3 கோடி என்று கூறப்படும் நிலையில், எஸ்.ஐ ஆனந்தன், சிறப்புப் பிரிவு எஸ்.ஐ ராம்குமார், தலைமைக் காவலர் பாக்கியராஜ் ஆகியோரிடம் தனித் தனியே விசாரணை மேற்கொண்டார் பரங்கிப்பேட்டை டி.எஸ்.பி கார்த்திகேயன். அதனையடுத்து 3 பேரும் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
``மீனவ மக்கள் ஒப்படைத்த பாக்கெட்டுகள் கஞ்சா என்று தெரியாமல் ஸ்டேஷனில் பின்புறமுள்ள குப்பையில் வீசிவிட்டோம். குப்பையோடு குப்பையாக அதனையும் எரித்துவிட்டோம். மாமல்லபுரம் விவகாரம் வெளியானதும்தான் போய் தேடிப்பார்த்தோம். அப்போது 4 பாக்கெட்டுகள் மட்டும் எரிக்கப்படாமல் பிரிந்து கிடந்தன” என்று விளக்கம் கொடுக்கின்றனர் காவல்துறையினர்.
கஞ்சா கோஷ்டிகளிடம் விற்கப்பட்டதா?
அதேசமயம் நம்மிடம் பேசிய பரங்கிப்பேட்டை சமூக ஆர்வலர்கள் சிலர், ``அது கஞ்சா என்று தெரியாமல் போலீஸ் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாகக் கூறுவது சுத்த பொய். கஞ்சா எந்த வடிவத்தில் இருந்தாலும் அது போலீஸுக்கு நன்றாகத் தெரியும். சீன நாட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கஞ்சா கோடிக்கணக்கான மதிப்புடையது. மாயமானதாகக் கூறப்படும் அந்த 4 பாக்கெட்டுகளையும் போலீஸாரே கஞ்சா கோஷ்டிகளிடம் விற்றிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. நேர்மையாக விசாரித்தால் அந்த உண்மை வெளிவரும்” என்றனர்.
Also Read: `கஞ்சா விக்கிற இடத்துல நீ யாருடா?' -கடலூர் சிஐஎஸ்எப் வீரர்களுக்கு ரௌடியால் நேர்ந்த விபரீதம்
கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள் குறித்து உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்காதது, உடனடியாக வழக்குப் பதிவு செய்யாதது, உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் 3 போலீஸாரும் இன்று மாலைக்குள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/cuddalore-police-drags-into-controversy-after-seized-ganja-pockets-missing
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக