கேரள மாநிலம் கொல்லம் மரட்டில் வசித்து வரும் நடிகை பூர்ணாவிடம் பத்து லட்சம் ரூபாயை மோசடி செய்ய முயன்ற வாடனாப்பள்ளியைச் சேர்ந்த ரபீக், கடவனூரைச் சேர்ந்த ரமேஷ், சரத், அஷ்ரப் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களைப் பார்த்த மாடலிங் நடிகை ஒருவர், இவர்கள் தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்கம் கடத்த நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களை இவர்கள் ஈடுபடுத்துவதாகவும் தெரிவித்தார். அவர்கள் மீது டி.வி நடிகை உள்ளிட்ட மூன்றுபேர் புகார் அளித்துள்ளனர். திருமணம் குறித்துப் பேசுவதாக உறவினர் ஒருவர் கூறியதன்பேரில் நடிகை பூர்ணா வீட்டுக்கு வந்துள்ளது அந்தக் கும்பல்.
பூர்ணாவின் பெற்றோரிடம் நட்பு ஏற்படுத்தியவர்கள் பின்னர் பூர்ணாவுக்கு போன் செய்து பத்து லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். பணம் கொடுக்க பூர்ணா மறுத்ததைத் தொடர்ந்து அந்தக் கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்தே பூர்ணாவின் தந்தை காஸிம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் நான்குபேரைக் கைது செய்த நிலையில் மேலும் மூன்று பேரைப் பிடிக்க வலை விரித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மலையாள சினிமா துறையில் தொடர்பில் இருப்பவர் எனத் தெரியவந்துள்ளது. நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களை காரில் எஸ்கார்டாகப் பயணிக்க வைத்து இவர்கள் தங்கம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. நடிகைகள் சினிமா ஷூட்டிங் செல்வது போன்று அவர்கள் காரில் தங்கம் கடத்திச் செல்லும் யுக்தியை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்தக் கும்பலின் வலையில் ஏற்கெனவே சில நடிகைகள் சிக்கியிருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
Also Read: எல்லாவிதமான சோதனைகளுக்கும் தயார்! பாவனா விவகாரத்தில் நடிகர் திலீப் குமார் ஆவேசம்
இந்தக் கும்பலிடம் சிக்கி மீண்டுவந்த ஆலப்புழாவைச் சேர்ந்த மாடலிங் நடிகை ஒருவர் தங்கம் கடத்தும் இவர்களின் யுக்தி குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆலப்புழா மாடலிங் நடிகையைப் பாலக்காட்டுக்கு அழைத்து தங்கம் கடத்த உதவும்படி இந்தக் கும்பல் கூறியுள்ளது. அதற்கு சம்மதிக்காததால் ஒரு அறையில் எட்டு நாள்கள் அவரைப் பூட்டி வைத்துள்ளனர்.
அப்போது அங்கு மேலும் ஏழு பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அவர் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். எனவே இந்தக் கும்பலிடம் சிக்கி ஏமாந்த நடிகைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நடிகை பூர்ணாவின் மொபைல் எண் இவர்களுக்கு எப்படி கிடைத்தது எனவும், தங்கம் கடத்தும் கும்பலுக்கும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து கொச்சி போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுகுறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் விஜய் சாகரே கூறுகையில்,``நடிகை பூர்ணாவை மிரட்டிய வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தக் குழுவில் ஏழு பேர் உள்ளதாக விசாரணையில் தெரியவருகிறது. நடிகைகள் அல்லது மாடலிங் துறையில் உள்ள பெண்களை இந்தக் கும்பல் தொடர்புகொள்ளும். பின்னர் அவர்களிடம் நல்லவிதமாக நட்பை ஏற்படுத்துவார்கள்.
பின்னர் அவர்களிடம் தங்கம் கடத்தும் தங்கள் திட்டம் குறித்துக் கூறுவார்கள். அதற்கு ஒத்துழைத்தால் குறிப்பிட்ட சதவிகிதம் பணம் கொடுப்பதாகப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இதுபோன்று தொடர்புகொள்ளும் சில பெண்களைப் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் புகார் வந்துள்ளது. நடிகை பூர்ணா வழக்கில் கைதானவர்கள் மீது மேலும் இரண்டு புகார்கள் வந்துள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
Also Read: `10 லட்சம் வராவிட்டால் கேரியர் நாசம்!' -நடிகை பூர்ணாவை மிரட்டிய கடத்தல் கும்பல்
அதுமட்டுமல்லாது இந்தத் தொழிலில் பார்ட்னராகச் சேருவதற்கு பணம் மற்றும் நகைகள் வேண்டும் என்று நடிகை உள்ளிட்ட சிலரிடம் கேட்பார்கள். யாராவது பணம் கொடுத்தால் அதைப் பெற்றுக்கொண்டு மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். இவர்கள் மீது வேறு யாரும் புகார் அளிக்காததால் அவர்களைப் பிடிக்க முடியாமல் இருந்தது. நடிகை பூர்ணா தைரியமாகப் புகார் அளித்ததால் இந்தக் கும்பல் சிக்கியுள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பெண்களைப் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களை போலீஸ் கஷ்டடியில் எடுத்து விசாரணை நடத்தும்போது அந்தப் பெண்கள் குறித்த விவரங்களைச் சேகரிப்போம்.
இந்த வழக்கில் பூர்ணாவின் மொபைல் எண் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் இதில் உடந்தையாக இருந்தனரா எனவும் விசாரணை நடத்துவோம்" என்றார்.
நடிகை பூர்ணாவுக்கு மலையாள நடிகர்கள் சங்கமான `அம்மா' முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
source https://www.vikatan.com/news/crime/shocking-background-of-smuggling-gang-in-actress-poornas-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக