Ad

ஞாயிறு, 28 ஜூன், 2020

கொரோனா: தேடிப்பிடித்து பரிசோதனை செய்கிறோம்; பயப்பட வேண்டாம்!’ -விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வுசெய்தார். தொடர்ந்து, வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் கொரோனா நோயாளிகளிடம் பேசி நலம் விசாரித்தார். மேலும், மருத்துவர்கள் பணி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாடுகள் குறித்து விசாரித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலகில் வல்லரசு நாடுகளே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் தள்ளாடும்போது, தமிழக அரசு எல்லா சவால்களையும் எதிர்கொண்டு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திவருகிறது. தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். அதேநேரம் பொதுமக்கள் கவனமுடன், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் வீரியமிக்க, விலை அதிகம் உள்ள மருந்துகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுவருகிறது. பொதுமக்களைத் தேடிப்பிடித்து பரிசோதனை செய்து, சிகிச்சையளித்துவருகிறோம்.

விஜயபாஸ்கர்

தமிழக அரசின் நடவடிக்கைகளை மத்திய அரசும் உலக சுகாதார நிறுவனமும் பாராட்டிவருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசும் மருத்துவர்களும் செவிலியர்களும் தயார் நிலையில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில், ஏற்கெனவே 1,218 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது, கல்லூரிகள் உட்பட பல்வேறு இடங்களில் 5,008 படுக்கை வசதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த, அரசும் மருத்துவர்களும் செவிலியர்களும் தயார் நிலையில் உள்ளனர். வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மன வலிமையோடு இருக்க வேண்டும். பொதுமக்கள், நோயாளிகளின் எண்ணிக்கையைக் கண்டு பயப்பட வேண்டாம்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/vijayabaskar-press-meet-in-puthukottai-regarding-corona-virus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக