Ad

செவ்வாய், 30 ஜூன், 2020

டிக் டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - அடுத்து என்ன நடக்கும்?

இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த ராணுவ மோதல் என்பது நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்தியச் சீனா உறவு என்பது இந்த மோதலுக்குப் பின் ஊசலாடித்தான் வருகிறது. எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கடும் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், சீன தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என #BoycottChineseProducts ஹேஷ்டேக்கில் இந்தியர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் வணிக ரீதியாகச் சீனாவுக்குப் பதிலடி கொடுக்கமுடியும் என்பதே அவர்களின் நிலைப்பாடு.

Boycott Chinese Products

இது குறித்து, `இந்தியர்கள், சீன தயாரிப்புகளைத் தவிர்க்க முடியுமா? - உண்மை நிலை என்ன?' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். அதில் ஸ்மார்ட்போன் மற்றும் பிற எலெக்ட்ரானிக் சந்தைகளில் சீனாவை உடனடியாக தவிர்ப்பது என்பது மிகவும் கடினமானது. ஆனால், ஒரு விஷயத்தை நம்மால் முழுவதுமாக புறக்கணிக்க முடியும் என்றால் அது இன்டர்நெட் ஆப்ஸ்தான் எனக் குறிப்பிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையைக் கீழ்க்காணும் லிங்க்கில் படிக்கலாம்.

Also Read: இந்தியர்கள், சீன தயாரிப்புகளைத் தவிர்க்க முடியுமா? - உண்மை நிலை என்ன?

இப்போது மத்திய அரசு, 59 சீன ஆப்களை தடைசெய்வதாக அறிவித்திருக்கிறது. ``தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69A பிரிவின்படி கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்கீழ் அவசரக் கால அடிப்படையில், தொடர்ந்து இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இந்த 59 ஆப்கள் தடைசெய்யப்படுகின்றன" என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 130 கோடி இந்தியர்களின் தகவல் பாதுகாப்பை உறுதிசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஆப்கள் தொடர்ந்து பயனர் தகவல்களை இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் சர்வர்களுக்கு அனுப்பிவருகின்றன என்றும் தெரிவிக்கிறது இந்த அறிக்கை.

கடந்த வாரம்தான் சீனாவோடு தொடர்புடைய 52 செயலிகளை ஒன்று தடைசெய்ய வேண்டும் அல்லது மக்களுக்கு அதைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய உளவு அமைப்புகள் பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அப்போது இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்பட்டது. அந்தப் பரிந்துரையின்படியே இந்தத் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

தடைசெய்யப்பட்ட ஆப்களின் பட்டியல்

தடைசெய்யப்பட்ட ஆப்களின் பட்டியல்

பிரவுசர், ஃபைல் ஷேரிங், சமூக வலைதளம் என அனைத்து விதமான ஆப்களுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆப்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை இவை அனைத்துமே சீன நிறுவனங்களின் தயாரிப்பு என்பது மட்டும்தான். ஆனால், அரசு தரப்பில் இவற்றைச் சீன ஆப்கள் என்றோ, சீனாவுடனான தற்போதைய உறவு குறித்தோ எங்குமே வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

ஆனாலும், சீனாவுக்கு நேரடியாக இந்தியா அனுப்பிய மெசேஜ்தான் இது என்கின்றனர். மீடியானாமா (Medianama) நிறுவனரும், டிஜிட்டல் உரிமை செயல்பாட்டாளருமான நிகில் பாவ்ஹா இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தார். "எனக்கு தெரிந்து இந்த 69-வது பிரிவின் கீழ் ஆப்கள் தடைசெய்யப்படுவது குறித்து இப்படியான ஓர் அறிக்கை வெளியிடப்படுவது இதுவே முதல்முறை. 69-வது பிரிவின் கீழ் எந்த ஓர் அறிவிப்பும் இல்லாமல் ரகசியமாகவே ஆப்களையும் இணையதளங்களையும் அரசால் தடைசெய்ய முடியும். அதனால் இதை ஒரு அரசியல் நகர்வாகவே பார்க்க முடிகிறது. இதன்மூலம் சீனாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது இந்தியா" என்றார் நிகில்.

இவர் சொல்வது போல தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69-ம் பிரிவின் கீழ் குறிப்பிட்ட இடைவெளியில் தளங்கள் நீக்கப்படுவது வழக்கம்தான். ஆனால், அதற்கு இப்படியான அறிவிப்புகள் வெளிவருவதில்லை. இந்த ஆப்களின் செயல்பாடு திடீரெனவெல்லாம் மாறவில்லை. பல மாதங்களாகவே ஒரே மாதிரியாகத்தான் செயல்பட்டு வருகின்றன. அதனால் இவ்வளவு நாள்கள் இல்லாமல் இப்போது தடைசெய்வது என்பது தெளிவாக இது சீனாவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைதான் என்பது உறுதியாகிறது.

இணையம் சார்ந்த உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் இன்டர்நெட் ஃபிரீடம் பவுன்டேஷன் (IFF) `இதில் இன்னும் கூட தெளிவு வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறது. அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் அபர் குப்தாவை தொடர்புகொண்டு பேசினோம், "இந்தத் தடை குறித்து இதுவரை வெறும் ஓர் ஊடக அறிக்கை மட்டுமே அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. தேசியப் பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தடை போடப்படுவதாக அரசு தெரிவித்திருக்கிறது. இதில் சில சிக்கல்கள் உண்டு. இதற்கு முன்பு எந்த ஒரு தடையும் நேரடியாக இத்தனை கோடி பயனர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், இந்தத் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69-வது பிரிவின் கீழ் ஒவ்வொரு இணையதளம்/ஆப் ஏன் நீக்கப்படுகிறது என்பதற்கான காரணம் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால், இப்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் அனைத்தையும் பட்டியலிட்டுத் தடைசெய்வதாகக் கூறியிருக்கிறார்கள்.

அபர் குப்தா

இந்திய அரசின் தகவல் பாதுகாப்பு குறித்த இந்த அக்கறை நியாயமானதுதான். ஆனால், இப்போது இது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றால் தடைசெய்யும் அதிகாரத்தைக் கொடுக்கும் இந்தச் சட்டம் வருங்காலத்தில் மோசமான முறையில் பயன்படுத்தப்படலாம். சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பதாக நமது ஜனநாயகக் கொள்கைகளை விட்டுத்தந்துவிடக் கூடாது" என்று தெரிவித்தார் அவர்.

இதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பது உண்மைதான். இன்னும் இந்தியாவில் `Data Protection bill' சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதனால் டேட்டா சார்ந்த விஷயங்களில் இன்னும் தெளிவான ஒழுங்குமுறை இல்லைதான். இப்போது தடைசெய்யப்பட்டிருக்கும் ஆப்கள் அனைத்தும் ஒவ்வொரு விதமாகச் செயல்படுபவை. ஒரே ஒற்றுமை சீன ஆப்கள் என்பதுதான். ஆனால், இது இல்லாமல் இன்னும் பல சீன ஆப்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது இவற்றை மட்டும் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்துத் தடைசெய்தார்கள் என்பதில் எந்தத் தெளிவுமே இல்லை.

டிக் டாக், ஷேர்இட் போன்ற சில சேவைகள் மட்டுமே நம்மால் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகள். அதிக `Monthly Active Users' கொண்ட சீன ஆப்கள் இவைதான். சராசரியாக ஒரு மாதத்தில் சுமார் 20 கோடி இந்தியர்கள் ஷேர்இட் ஆப்பை பயன்படுத்துகின்றனர். அடுத்ததாக UC பிரவுசர் இருக்கிறது. இதைச் சராசரியாக சுமார் 13 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். டிக் டாக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை என்பது 12 கோடியாக இருக்கிறது. மொத்தம் இருக்கும் 45 கோடி இந்தியப் பயனர்களின் 30 கோடி இந்தியப் பயனர்கள் ஒரு சீன ஆப்பையாவது பயன்படுத்துகின்றனர். மீண்டும் வருமா இந்த ஆப்கள்?

டிக் டாக்கின் இந்திய தலைவர் நிகில் காந்தி.

"டிக் டாக் உட்பட 59 ஆப்களுக்கு தற்காலிக தடைவிதித்துள்ளது இந்திய அரசு. இந்த உத்தரவுக்கு டிக் டாக் அடிபணிகிறது. பிரச்னைகளை கலந்துபேச அரசு தரப்பில் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பு சட்டங்களையும் சரிவரப் பின்பற்றி வருகிறோம். இதுவரை இந்தியப் பயனர்கள் தகவல்களைச் சீனா உட்பட எந்த அரசிடமும் நாங்கள் பகிரவில்லை. அப்படி செய்ய நிர்பந்திக்கப்பட்டாலும் அதை நாங்கள் செய்யமாட்டோம். பயனர்களின் பிரைவசியை பாதுகாப்பதற்கே எங்களது அதிகபட்ச முன்னுரிமை" என்று தெரிவித்திருக்கிறார் டிக் டாக்கின் இந்திய தலைவர் நிகில் காந்தி.

இந்தத் தடையானது எப்படி அமல்படுத்தப்படப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், முதல்கட்டமாக ஆப்பிள் ஆப் ஸ்டார் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இவை அரசின் ஆணைக்கு இணங்கி நீக்கப்படும். அடுத்து இந்த ஆப்களுக்கு இணையம் வழங்க வேண்டாம் என்ற உத்தரவு ஏர்டெல், ஜியோ போன்ற இணைய சேவை நிறுவனங்களுக்கு (ISP) பிறப்பிக்கப்படும். ஆனால் UC பிரவுசர் போன்ற பிரவுசிங் ஆப்களை எப்படி முழுவதுமாக கட்டுப்படுத்துவார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், வெகுஜன மக்களுக்கு இனி இந்த ஆப்கள் எளிதாகக் கிடைக்காது என்பது மட்டும் உறுதி.

மீண்டும் வருமா இந்த ஆப்கள்?

ஏற்கெனவே இந்தியாவில் ஒரு முறை தடையைச் சந்தித்து மீண்டும் வந்த வரலாறு டிக் டாக்கிற்கு உண்டு. அப்படியிருக்கையில் தற்போதும் அப்படித் திரும்பிவருமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. வருவதற்கான வாய்ப்புகள் உண்டுதான். டிக் டாக் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இதைத் தற்காலிக தடை என்றுதான் குறிப்பிட்டிருக்கிறது. இந்த தடைக்கு அரசு சொல்லும் முக்கியக் காரணம் இந்தியா அல்லாத இடங்களிலுள்ள சர்வர்களில் இந்தியப் பயனர்களின் தகவல்கள் சேமிக்கப்படுகிறது என்பதுதான். இதையும் இந்திய அரசு சுட்டிக்காட்டும் மற்ற சிக்கல்களையும் இந்த ஆப்களால் சரிசெய்ய முடியும்பட்சத்தில் அவற்றால் மீண்டும் இங்கு செயல்பட முடியும். ஆனால், இவற்றின் மீது அரசின் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் ஏற்கெனவே சீனாவிலிருந்து படிப்படியாக வெளியில் வரும் திட்டத்தில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/technology/tech-news/the-ban-of-59-chinese-apps-explained

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக