தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் பெண் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களை வெளியே வர முடியாத அளவுக்கு இரண்டு இடங்களில் சாலைக்கு நடுவே பெரிய பள்ளம் எடுத்து தடுத்த சம்பவம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே உள்ள காசவளநாடு புதூர் என்ற கிராமத்தில் உள்ள கீழத்தெருவில் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்தத் தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கும் இரண்டு மாதத்துக்கு முன்பு தஞ்சாவூரில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மீண்டும் சென்னை சென்ற அவர்கள் கொரோனா பரவியதையடுத்து 10 நாள்களுக்கு முன் புதூருக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில் ஊருக்கு வந்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கடந்த 22-ம் தேதி அந்தப் பெண் வசித்த கீழத்தெருவில் மக்கள் வெளியே சென்று வரக்கூடிய இரண்டு சாலைகளையும் ஊராட்சி மன்றத் தலைவர் நாகலிங்கம் மற்றும் மாற்று சாதியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் சாந்தியின் கணவரான சரவணன் ஆகியோர் சுமார் 8 அடி நீளம் 5 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளம் எடுத்து மக்கள் வெளியே வராத அளவுக்குத் தடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதனால் அப்பகுதியினர் இரண்டு நாள்களாகத் தெருவுக்குள்ளேயே முடங்கியதுடன் குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமலும் தவித்துள்ளனர். இந்நிலையில் 3-வது வார்டின் ஊராட்சி உறுப்பினராக உள்ள செல்வி என்பவரின் கணவர் செல்வராஜ் என்பவர் இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு, மனித உரிமை ஆணையம், தஞ்சாவூர் எஸ்.பி அலுவலகம், தாலுகா காவல் நிலையம் ஆகியவற்றுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதன் பின்னர் சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியின் வி.ஏ.ஓ முன்னிலையில் தோண்டப்பட்ட குழி மூடப்பட்டது.
Also Read: கொரோனா: முழு ஊரடங்கு அறிவிப்புகள் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தியதா... கட்டவிழ்த்துவிட்டதா?
செல்வராஜ் புகார் மனுவில், ``எங்கள் தெருவில் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஊராட்சி மன்றத் தலைவர் நாகலிங்கமும், ஒன்றியக் கவுன்சிலரின் கணவரான சரவணன் என்பவரும் ஜேசிபி இயந்திரம் மூலம் நாங்க வெளியே சென்று வரக்கூடிய பாதையில் குழி எடுத்தனர். நாங்கள், `ஏன் குழி எடுக்குறீங்க?’ எனக் கேட்டதுக்கு, `உங்களுக்கு பாதை ஒரு கேடா?’ எனக் கேட்டனர். அத்துடன் ஆட்டோ ஒன்றில் ஒலிபெருக்கி கட்டிக்கொண்டு எங்கள் தெருவின் சாதிப் பெயரைச் சொல்லி இங்கு கொரோனா இருப்பதாகவும் யாரும் அந்த வழியாகச் செல்ல வேண்டாம் எனச் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அறிவிப்பு செய்ய வைத்தனர்.
சரவணனிடம், `ஏன் இப்படி எங்களை அசிங்கப்படுத்துறீங்க?’ எனக் கேட்டதுக்கு தகாத வார்த்தைகளால் திட்டி செருப்பைக் கழட்டி எங்கள் மீது வீசினார். இதற்கு துணையாக நாகலிங்கமும் இருந்தார். மக்கள் பிரதிநிதிகளான இவர்கள் சாதிய வன்மத்தோடு செயல்பட்டது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. பள்ளம் தோண்டியபோது தரையில் புதைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்துவிட்டது. இதனால் இரண்டு நாள்களாகக் குடிக்க தண்ணீர் மற்றும் வெளியே செல்ல முடியாததால் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமலும் தவித்தோம். அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து கிராம மக்களிடம் விசாரித்தோம். ``எங்கள் ஊரில் சாதி பிரச்னை என்பதே கிடையாது. எல்லோரும் ஒற்றுமையுடன் இருந்து வருகிறோம். குறிப்பிட்ட பெண்ணுக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, யாரும் தேவையில்லாமல் வெளியே வராதீங்க தனிமைப்படுத்திக் கொண்டு இருங்க எனச் சொன்னோம். இதற்காகத் தடுப்பு ஒன்றையும் அமைத்தோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாமல் எல்லோரும் எப்பவும்போல் எல்லா இடத்துக்கும் சென்று வந்தனர். இதனால் மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர்.
இதையடுத்து கொரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தால் உணர்ச்சிவசப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் நாகலிங்கம் மற்றும் சரவணன் குழி எடுக்க உத்தரவிட்டனர். பின்னர், இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் அடுத்த நாளே குழி மூடப்பட்டது. ஆனால், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்குமிடையே ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகக் காழ்ப்புணர்ச்சி இருந்து வருகிறது. இந்த நேரத்தில் இதை வைத்து ஆதிக்க சாதியினரின் அழுத்தத்தால் இவை நடந்ததாக சாதி ரீதியிலான பிரச்னையாக இதைக் கொண்டு செல்வதுடன் இருவர் மீதும் புகார் கொடுத்துள்ளனர். தற்போது இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது’’ என்றனர்.
Also Read: `கொரோனா காலத்தில் கொண்டாட்டம் தேவையா?' -கோவை ஸ்மார்ட் சிட்டி சர்ச்சை
ஊராட்சி மன்றத் தலைவர் நாகலிங்கத்திடம் பேசினோம், ``கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியில் யாரும் வெளியே வராமல் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கச் சொன்னோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. இதனால் குழி எடுத்து தடுக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் பிசிஆர் வழக்கு கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. நானும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவன்தான். புரிதல் இல்லாமல் இருந்ததால் ஏற்பட்ட பிரச்னை தற்போது தீர்க்கப்பட்டுவிட்டது. இனி இதுபோல் எதுவும் நடக்காது’’ என்றார்.
source https://www.vikatan.com/social-affairs/controversy/man-files-caste-discrimination-complaint-against-tanjore-village-president
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக