திராவிடம், தமிழ், சமூக நீதி, மதசார்பின்மை, என திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் தங்கள் களத்திற்கான அடித்தளத்தை கட்டமைக்க ஆரம்பித்துள்ளது. தி.மு,க கட்சியின் அடிநாதமாக விளங்கிய சமூகநீதியை இப்போது ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதன் பின்னால் அகில இந்திய அரசியல் யுக்தியும் உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
சமீபத்தில் மருத்துவ இடஒதிக்கீட்டில் ஓ.பி.ஸி.பிரிவினருக்கான 27 சதவீத இடஒதிக்கீட்டை முறைப்படி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்தது. இந்த விவகாரத்தினை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதில் தி.மு.கவுக்கு முக்கிய பங்கு உண்டு. இதன்பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின், “சமூகநீதிப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல்” குறித்த தேசிய கருத்தரங்கினை ஆன்லைன் வழியாக நடத்தினார். அகில இந்திய அளவில் மண்டல் கமிஷனால் பரிந்துரை செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு குறித்தும், மத்திய அரசு பின்பற்றிவரும் இடஒதிக்கீடு கொள்கைகள் குறித்தும் இந்த கருத்தரங்கில் பேசப்பட்டது.
இந்த கருத்தரங்கில் திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ராஷ்டிரிய ஜனதா தள், திரிணாமுல் காங்கிரஸ், ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக தி.மு.க பிற்படுத்தப்பட்டோர் இடஒதிக்கீடு விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக ஸ்டாலினுக்கு நன்றி சொன்னார்கள். அதோடு, ந்திய அளவில் சமூக நீதியை முன்னெடுப்பது குறித்தான சிலகருத்துக்களையும் அவர்கள் முன்வைத்தனர். இதன்பிறகே அனைத்திந்திய சமூகநீதிக்கான கூட்டமைப்பு திட்டம் உருவானது.
தி.மு.க வின் மூத்த நிர்வாகிகளிடம் இதுகுறித்து விசாரித்தபோது “இந்தியாவில் பா.ஜ.க-வின் வளர்ச்சி அதிவேகமாக உள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் மதரீதியாக அவர்கள் மேற்கொள்ளும் பிரசாரத்திற்கு பலனும் கிடைத்துவருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், எதிர்காலத்தில் தென்மாநிலங்களிலும் இந்த தாக்கத்தை ஏற்படுத்த பா.ஜ.க முன்வரும்.
அதே போல் நீட் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசுகளின் அதிகாரத்தை ஒடுக்கும் வகையில் மத்திய அரசின் சட்டங்கள் வந்துக்கொண்டுள்ளது. விரைவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற திட்டத்தையும் முன்னெடுக்க பாஜக தயாராக இருக்கிறது. கிட்டதட்ட இது சர்வாதிகரமான ஒரு நிலையை நோக்கி கொண்டு செல்கிறது. இதற்கு எதிராக வலுவான ஒரு அணியை கட்டமைக்க ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், அதற்கு சரியான ஒரு வாய்ப்பாக பிற்படுத்தப்ட்டோருக்கான இடஒதிக்கீடு விவகாரம் இருந்தது.
இந்தியாவில் ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் தலைதுாக்கி நின்றபோது, ஜனதா கட்சி என்கிற பெயரில் ஒரு கட்சியைப் பல மாநிலத்தின் சமூகநீதியை முன்னெடுத்த தலைவர்கள் சேர்ந்து உருவாக்கினார்கள். அந்த அணி அன்றைக்கு அசுர பலத்துடன் ஆட்சியிலிருந்த இந்திரா காந்தியின் ஆட்சிக்கே நெருக்கடி ஏற்படுத்தியது. அப்போது நடந்த தேர்தலில் இந்திராவின் கட்சி தோல்வியைச் சந்தித்தது. அன்றைக்கு ஜனதாதளத்தில் இருந்த பல தலைவர்கள், அந்த கட்சியிலிருந்து விலகி இன்று வட மாநிலங்களில் தனிகட்சியை நடத்தி வருகறார்கள். அவர்களில் பலரையும் தன் பக்கம் கொண்டுவர ஸ்டாலின் நினைக்கிறார். இப்போது, பா.ஜ.கவின் மத அரசியலை முறையடிக்க சமூக நீதி என்கிற கருத்தை கையில் எடுப்பதால், பிற்படுத்தப்பட்ட மக்களின் பார்வை சமூக முன்னேற்றத்தை நோக்கி மாறும். இந்திய அளவில் இதுபோன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே அது எதிர்காலத்தில் பா.ஜ.கவின் வீழ்ச்சிக்கு நல்லது என்கிற கருத்தில் ஸ்டாலின் இருக்கிறார். அதோடு கருணாநிதியை அகிலஇந்திய தலைவர்கள் துாக்கி கொண்டாட காரணமே மாநில சுயாட்சிக்கு அவர் கொடுத்த குரலும், ராஜமண்ணார் குழுவின் அறிக்கை, சமூக நீதிக்கான மண்டல் கமிஷனை ஆதரித்து கருணாநிதியின் அரசியல் நகர்வுகளுமே. ஸ்டாலினும் தன்னை தமிழகத்தின் முதல்வர் என்கிற அடையாளத்தோடு சுருக்கிக்கொள்ளாமல், அகில் இந்திய அளவில் சமூகநீதியை முன்னெடுக்கும் ஒரு தலைவராக தன்னை தகவமைக்க நினைக்கிறார்.
காலத்தின் தேவையும் இப்போது அதுவாக இருப்பதால், அகில இந்திய அளவில் இந்த கூட்டமைப்பு உருவாக்கத்திற்கான வேலைகள் வேகம் எடுத்துள்ளது. சொல்லப்போனால், இந்த கூட்டமைப்பே வரும் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் ஒன்றாக இணையும் நிலைக்கூட வரலாம்” என்கிறார்கள்.
மேலும், ``கருணாநிதியின் பாணியில் சமூகநீதியை முன்வைத்து ஒரு அரசியல் களத்தை ஸ்டாலின் கட்டமைக்க நினைக்கிறார். பிரதமர் பதவிக்கு ஸ்டாலின் திட்டமிடுகிறார் என்கிற கருத்தை தி.மு.கவினர் மறுக்கிறார்கள். பிரதமரை உருவாக்கும் ஒரு கிங்மேக்கராகப் அப்பாவை போல தானும் அகில இந்திய அளவில் அடையாளமாக வேண்டும் என்பதே ஸ்டாலின் எண்ணத்தில் உள்ளது” என்கிறார்கள் தெளிவாக.
source https://www.vikatan.com/government-and-politics/politics/stalins-national-politics-with-the-term-social-justice
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக