புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து!
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2021-2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஆகஸ்ட் 26-ம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அதன் மீதான உறுப்பினர்களின் பொது விவாதம் நடைப்பெற்று வருகிறது. அதற்கு பேரவையில் நேற்று (01.09.2021) பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரியில் நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. 2021-22-ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடு ரூ.9,924.41- கோடி என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதில் ரூ.1,200.44- கோடி மூலதனச் செலவினங்களுக்காகவும், ரூ.8,723.97- கோடி வருவாய் செலவினங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற வழங்கப்பட்டு வரும் 60:40 என்கிற விகிதாச்சாரத்தை மாற்றி 90:10 என்ற விகிதாச்சாரத்தில் வழங்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் கேட்கப்பட்டிருக்கிறது.
மேலும் கூடுதலாக ரூ.500 கோடி வழங்க வேண்டும் என்று மாண்புமிகு பாரத பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பாரத பிரதமரை நேரில் சந்திக்கும்போது மீண்டும் இதனை வலியுறுத்தி பெறுவோம். மத்திய அரசு கூடுதல் நிதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த ஆண்டு அதிக நிதி பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது தான் எங்கள் நோக்கம்.
மாநில அந்தஸ்து இல்லாதது எவ்வளவு சிரமம் என்று நீண்ட நாட்களாக முதலமைச்சராக இருந்த அனுபவத்தில் எனக்கு தெரியும். இதுதொடர்பாக பிரதமர் அவர்களிடம் ஏற்கனவே கேட்டுள்ளேன். மத்திய அரசு ஒரு முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தேவைப்பட்டால் இந்த கூட்டத்தொடரில் இதுதொடர்பாக மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவோம். நேரில் சென்றும் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்துவோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
Also Read: புதுச்சேரி: `ரூ.9,924 கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்தார் ரங்கசாமி!’ - சிறப்பம்சங்கள் என்னென்ன?
அரசுத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்!
பாசிக், பாப்ஸ்கோ போன்ற கூட்டுறவு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு எந்த அளவிற்கு உறுதுணையாக இருந்தன என்பது தற்போதுதான் தெரிகிறது. விவசாயிகள் இடுபொருட்கள், உபகரணங்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். 33 மதுபானக் கடைகள், 5 பெட்ரோல் பங்குகள் இருந்தும் கூட்டுறவு நிறுவனங்கள் எப்படி நலிவடைந்தது என தெரியவில்லை. பொதுத்துறை நிறுவனங்களுக்கு புத்துயிர் தந்து மீண்டும் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விற்கப்பட்ட வீட்டுமனைகள், பிரிக்கப்பட்ட வீட்டு மனைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தியாகிகளின் ஓய்வூதியம் தற்போது ரூ.9,000 வழங்கப்படுகிறது. இது ரூ.10,000 ஆக உயர்த்தப்படும். புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். அரசுத்துறைகளில் கடந்த 5 ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதன் காரணமாக 10,000 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. காலியாக உள்ள அரசு பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
பாட்கோ மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அதேபோல சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தும். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி முதல்கட்டமாக ஒரு கோடி ரூபாய் இந்த நிதியாண்டிலேயே வழங்கப்படும்.
அதன்பின்னர் மேலும் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அட்டவணை சமூக மக்கள் வீடு கட்டிக் கொள்ள தற்போது ரூ.5,00,000 வழங்கப்படுகிறது. அது ரூ.5,50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல் அட்டவணை இனத்தைச் சேர்ந்த முதியோர்களின் ஓய்வூதியத் தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதி ரூ.15,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
Also Read: புதுச்சேரி: `ரூ.10,100 கோடி; தமிழில் கவர்னர் உரை!’ – தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பட்ஜெட்
அட்டவணை சமூக மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பயிற்சி முகாம்!
அட்டவணை இனத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்காக ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் கடற்கரை சாலையிலுள்ள அம்பேத்கர் மணிமண்டபம் பின்புறம் உள்ள இடத்தில் அமைக்கப்படும். புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே அரசு கையகப்படுத்திய நிலங்களில் மத்திய அரசின் அனுமதி பெற்று தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுப்பணித்துறையில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களின் ஊதியம் ரூ.10,000 ஆக உயர்த்தி DAT மூலம் வழங்கப்படும்.
மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் ரூ.10,000 க்கு குறைவில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களது நிலையை உணர்ந்து பணியாற்றி லாபத்தை ஈட்டி, சம்பளத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவப் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை!
தேசிய ஊரக சுகாதார இயக்க (NRHM) ஊழியர்களைக் கொண்டு சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும். சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் மருத்துவர்கள், லேப்-டெக்னீஷியன் போன்ற ஒப்பந்தப் பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். மற்ற துறைகளில் இருப்பவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். மருத்துவப் பயிற்சி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.5,000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிதி வழங்குவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
Also Read: புதுச்சேரி: `ரூ.9,924 கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்தார் ரங்கசாமி!’ - சிறப்பம்சங்கள் என்னென்ன?
எனவே எவ்வளவு நிதி வழங்கப்படும் என்று பின்னர் முடிவு செய்யப்படும். கொரோனா தொற்றினால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுபட்ட பத்திரிகையாளர்களுக்கு நல்ல இடம் பார்த்து வீட்டு மனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத் தொகை ரூ.7,500 லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்படும். பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் தற்போது ரூ.220- கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தின் வருவாயைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுக்கும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/highlights-in-puducherry-chief-minister-speech-over-development-of-puducherry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக