Ad

வியாழன், 9 செப்டம்பர், 2021

ஆப்கானிஸ்தான்: `மின்சாரம், சவுக்குகளால் தாக்கும் தாலிபன்கள்' -பெண்கள் போராட்டத்தில் என்ன நடக்கிறது?!

ஆப்கானிஸ்தான் மண்ணில், தற்சமயம் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாகத் தலைநகர் காபூலின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. கடந்த வாரத்தில் மிச்சமிருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றச் சென்ற தாலிபன்களுக்குத் தேசிய எதிர்ப்பு முன்னணியினர் பதிலடி கொடுத்தனர். பெரும் சவாலாக இருந்த பஞ்ச்ஷிரை கைப்பற்ற தாலிபன்களுக்கு பாகிஸ்தான் உதவிசெய்வதாகத் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து காபூலின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. பொதுமக்கள் பலரும், ``பாகிஸ்தானே வெளியேறு... ஆப்கனைவிட்டு வெளியேறு'' என்ற முழக்கத்துடன் களத்தில் இறங்கிப் போராடினர். இந்தப் போராட்டங்களில், அதிக அளவிலான பெண்கள் பங்கேற்றனர். பாகிஸ்தான் தலையீடு, தாலிபன் ஆட்சி ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டங்களை ஒடுக்க தாலிபன்கள் வான்நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஹெராத் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மூவரை தாலிபன்கள் சுட்டுக் கொன்றதாகவும் செய்திகள் வெளியாகின. இருந்தும், ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மக்கள் கூட்டம் கலையவில்லை என்றே சொல்லப்படுகிறது.

Also Read: வீடு வீடாகப் பெண்களைத் தேடும் தாலிபன்கள்... ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?!

இந்தப் போராட்டத்தின்போது, பெண் ஒருவர் தாலிபன்களுக்கு எதிராகக் கோஷமிட, அவரைத் துப்பாக்கி முனையில் `இங்கிருந்து சென்றுவிடுங்கள்' என மிரட்டியிருக்கிறார் தாலிபன் படை வீரர் ஒருவர். ஆனால், அந்தப் பெண் எதற்கும் அஞ்சாமல் துப்பாக்கியை எதிர்த்து நின்றார். இந்தப் புகைப்படம் உலக அளவில் வைரலானது.

பெண்கள் உரிமைப் போராட்டம்!

தாலிபன்களுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிரான போராட்டங்கள் ஒருபுறம் நடக்க, `எங்களுக்கான உரிமையைக் கொடுங்கள்' என ஆப்கன் பெண்கள் மறுபுறம் போராட்டம் செய்துவருகின்றனர். கடந்த வாரத்திலிருந்தே காபூல், பதக்‌ஷான் மாகாணங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ``20 ஆண்டுகளாக நாங்கள் பெற்ற ஜனநாயக உரிமைகளை எங்களுக்கு வழங்க வேண்டும். ஆப்கன் அரசில் பெண்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்'' என்ற கோரிக்கைகளை முன்வைத்து பெண்கள் பலரும் போராட்டக் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

போராட்டங்களை அடுத்து, ``பெண்களுக்கு தாலிபன் அரசில் இடமளிக்கப்படும். ஆனால், அமைச்சர் பதவி வழங்கப்படாது'' என தாலிபன்கள் அறிவித்திருந்தனர். இந்தநிலையில், செப்டம்பர் 5-ம் தேதியன்று அதிபர் மாளிகையை முற்றுகையிட முடிவுசெய்த பெண்கள் போராட்டக் களத்திலிருந்து முன்னேறிச் சென்றனர். அப்போது, கண்ணீர்ப் புகைக் குண்டுகள், பெப்பர் ஸ்ப்ரே உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பெண்களை முன்னேறவிடாமல் தாலிபன் படை தடுத்ததாகச் செய்திகள் வெளியாகின.

ஆப்கன் பெண்கள்

Also Read: கினியா நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்பும், கிடுகிடுவென உயரும் அலுமினியத்தின் விலையும்..! - என்ன காரணம்?

தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தற்காலிக அரசை அமைக்க முடிவுசெய்த தாலிபன்கள், இடைக்கால அமைச்சரவை பட்டியலை வெளியிட்டனர். இந்தப் பட்டியலில் ஒரு பெண் அமைச்சரின் பெயர்கூட இடம்பெறவில்லை. அதோடு, பெண்கள் விவகார அமைச்சகத்தையும் ஒழித்துக் கட்டியிருந்தனர்.

இதனால், கடந்த இருதினங்களாக பெண்கள் போராட்டம் மேலும் தீவிரமடைந்திருக்கின்றன. புதன்கிழமை அன்று பதாகைகள் ஏந்தி காபூல் சாலைகளில் பேரணியாகச் சென்ற பெண்களை, தாலிபன்கள் சவுக்குகள் கொண்டு அடித்ததாகவும், மின்சாரத் தடிகள் கொண்டு தாக்கியதாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன.

தாக்கப்படும் செய்தியாளர்கள்!

பெண்கள் போராட்டத்தைச் செய்தியாக்கச் சென்ற பத்திரிகையாளர்கள், கேமரா மேன்களை தாலிபன்கள் பிடித்துச் சென்று சித்ரவதை செய்ததாகத் தெரிகிறது. ஆப்கானிஸ்தான் நாளிதழான எட்டில்லாட்ரோஸ் (Etilaatroz), ``எங்களது ஐந்து செய்தியாளர்களை தாலிபன்கள் பிடித்துச் சென்று தாக்கியிருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்'' என்று குறிப்பிட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் யூரோ நியூஸ் ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், ``எங்கள் நிறுவன கேமரா மேனை மூன்று மணிநேரம் காவலில் வைத்திருந்தது தாலிபன் படை. அவரை பல முறை கன்னத்தில் அறைந்து, அவரது அலைபேசியையும், பர்ஸையும் பறித்துவிட்டனர்'' என்றிருக்கிறார்.

செய்தியாளர்களைத் தவிர்த்துப் போராடி வரும் பலரையும் சவுக்கு, துப்பாக்கி ஆகியவற்றைக் கொண்டு தாலிபன்கள் கடுமையாகத் தாக்கியதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன. இதுகுறித்து ஆப்கனிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம், ``ஆப்கானிஸ்தானின் உரிமைகள் அனைத்தையும் வன்முறையின்றி பாதுகாக்க வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு இருக்கிறது என்பதை நினைவில்கொண்டு செயல்பட வேண்டும்'' எனத் தாலிபன்களை எச்சரித்திருக்கிறது.

போராட்டங்களை ஒடுக்க தாலிபன்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டும், போராட்டக்காரர்கள் பலரைத் தாக்கியும், போராடுவதை தற்போதுவரை பெண்கள் நிறுத்தவில்லை. ``25 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் அனுபவித்த கொடுமைகளை மீண்டும் அனுபவிக்க நாங்கள் தயாராக இல்ல. பெண்கள் படிக்க வேண்டும், பணிபுரிய வேண்டும். அதற்காக எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தாங்கிக் கொண்டு போராடுவோம்'' என்பதே போராட்டக் களத்திலிருக்கும் பெண்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது!

Also Read: `தாலிபன், ஜெய்ஷ்-இ-முகமது சந்திப்பு'; மசூத் அஸாரின் வாழ்த்து கட்டுரை - இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?!



source https://www.vikatan.com/government-and-politics/international/what-is-happening-in-afghan-women-protest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக