Ad

செவ்வாய், 24 ஜனவரி, 2023

இவ்வளவு பெரிய தேரையா? 2.7 கிலோ எடை கொண்ட ராட்சத தேரை... கண்டெடுத்த வனவிலங்கு ஆர்வலர்கள்!

2.7 கிலோ அளவிலான ராட்சத கரும்பு தேரையை (cane Toad) வடக்கு ஆஸ்திரேலிய மழைக்காடு ஒன்றில் வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 

கரும்பு தேரை

ஆஸ்திரேலியா குவீன்ஸ்லேண்டு கான்வே தேசிய பூங்காவில், ரேஞ்சர் கைலி கிரே பாதைகளை ஆய்வு செய்ய சென்று கொண்டிருக்கையில், பாம்பு ஒன்று வேகமாக ஊர்ந்து செல்வதைக் கண்டிருக்கிறார். அந்தப் பகுதியை உற்றுப் பார்க்கும்போது அங்கே ராட்சத கரும்பு தேரை ஒன்று இருந்துள்ளது.

உடனடியாக கீழிறங்கி தேரையைத் தூக்கி உள்ளார். உருவத்தில் பெரிதாகவும் அதிக எடையோடும் அந்தத் தேரை இருந்துள்ளது. அதற்கு `டோட்சில்லா' (Toadzilla) என்று பெயரிட்டு, காட்டில் இருந்து வெளியேற்ற கன்டெய்னரில் அடைத்தனர். 

அந்த தேரையை எடை போட்டுப் பார்த்ததில், 2.7 கிலோ இருந்துள்ளது. அதாவது சாதாரண தேரையை விட 6 மடங்கு அதிகம். தேரையின் எடை முன்பு கேள்விப்படாததை விட அதிகமாக இருந்ததால், இது புதிய உலக சாதனையாக இருக்கும் என்று கருதி உள்ளனர். 1991-ம் ஆண்டு ஸ்வீடனில் வளர்க்கப்பட்ட செல்ல பிராணியான `பிரின்சென்' என்ற தேரை கின்னஸ் சாதனை படைத்தது.

கரும்பு தேரை

இந்த தேரையின் வியத்தகு அளவு குறித்து கைலி கூறுகையில், ``சிறிய பாலூட்டிகள், பூச்சிகள், ஊர்வன போன்றவற்றை அதிகமாகத் தின்று இந்த தேரை அதிகப்படியான வளர்ச்சியை அடைந்திருக்கும். இவ்வளவு பெரிய தேரை, தன்னுடைய வாயில் அடங்கும் எதையும் தின்று விடும்'' என்று தெரிவித்துள்ளார்.  

கரும்புகளில் இருந்து பூச்சிகளை அழிக்க இந்த தேரைகள் பயன்படுத்தப்பட்டதால், கரும்புத் தேரைகள் என வரலாற்று ரீதியாகப் பெயர் பெற்றது. இவை பொதுவாக 5.9 அங்குலம் வரை வளரும். ஆஸ்திரேலியாவை ஆக்கிரமித்த இனங்களில் ஒன்றாக இவை கருதப்படுகிறது. மற்ற பூர்வீக வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாகக் கரும்புத் தேரைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றன. 

அளவில் பெரிதான ராட்சத கரும்பு தேரை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



source https://www.vikatan.com/living-things/international/giant-size-cane-toad-found-in-australia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக