கரையும் சொத்து பற்றித் தெரியுமா?
`என்ன... நான் வாங்கிய சொத்து கரைந்துவிடுமா?!' என்று அதிர்ச்சியாகிறீர்களா? அது நாம் வாங்கும் சொத்தின் தன்மையைப் பொறுத்தது.
சொத்தில்,
- கரையும் சொத்து,
- அதிகரிக்கும் சொத்து
என இரண்டு வகை உண்டு.
புதிதாக ஃபிளாட் வாங்கி குடிபோகவிருக்கும் ராஜனையும் வனிதாவையும் எடுத்துக்கொள்வோம். இருவரும் கை நிறைய சம்பாதிக்கிறார்கள். `புதிய வீட்டுக்குப் பழைய பொருள்களை எடுத்துப் போவானேன்? புதிதே வாங்கிவிடலாமே?' என யோசிக்கிறார்கள். பெரிதாக ஒன்றுமில்லை;
இரண்டு ஏ.சி,
இரண்டு வாட்டர் ஹீட்டர்,
ஒரு ஃப்ரிட்ஜ்,
ஒரு வாஷிங் மெஷின்,
ஒரு கேஸ் ஸ்டவ்,
நாலு ஃபேன்,
ஒரு ஃபேன்ஸி லைட்.
- மேக்ஸிமம் ஒன்றரை லட்சம் தேவைப்படும்.
Also Read: சேமிப்புக்காக சீட்டு போட்டிருக்கிறீர்களா? அந்த முதலீடு உண்மையில் லாபகரமானதுதானா? - 13
கடைக்காரர் ஏ.சி ஹீட்டர், வாஷிங் மெஷின் மற்றும் ஃப்ரிட்ஜ் - இவற்றை 0% வட்டியில் இன்ஸ்டால்மென்ட்டில் தருவதாகக் கூறுகிறார்.
``மற்ற பொருள்களுக்கு ஒரு பர்சனல் லோன் எடுத்துக் கொண்டால், ஜாம் ஜாம் என்று குடி போகலாமே?"
ராஜன், வனிதாவுக்கு மட்டுமல்ல; நமக்கும் இதுதான் இன்றைய சிந்தனைப் போக்காக இருக்கிறது.
இந்தப் பொருள்களின் மதிப்பு வாங்கிய மறு நிமிடமே குறைய ஆரம்பித்துவிடுகிறது. அப்படியானால் நாம் வாங்கிய சொத்துக்கள் கரைகின்றன அல்லவா?
நஷ்டம் இதோடு முடியவில்லை. சற்று யோசித்துப் பாருங்கள் - கடைக்காரர் நமது மாமனா, மச்சானா 0%-ல் கடன் தருவதற்கு? இன்ஸ்டால்மென்ட்டுக்கு வட்டி என்ற பெயரில் வாங்காமல், அப்ஃப்ரன்ட் ஃபீஸ், அட்மினிஸ்ட் ரேஷன் காஸ்ட் என்று ஏதேதோ பெயர்களில் அந்தப் பணம் நம்மிடம் வசூலிக்கப்படுகிறது. கேஷ் கொடுத்து வாங்கியிருந்தால் வந்திருக்கக்கூடிய டிஸ்கவுன்ட்டும் கிடைப்பதில்லை.
இவற்றுடன் மாதம்தோறும் பர்சனல் லோனுக்கு நாம் கட்டப்போகும் 18% வட்டியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சொத்து கரைவது மட்டுமன்றி, வருங்கால சேமிப்பும் குறையும் வழியல்லவா இது?
மேலும், ஒரு மாதம் இ.எம்.ஐ கட்டத் தவறினாலும் க்ரெடிட் ஸ்கோர் பாதிப்படைந்து, வருங்காலத்தில் பெரிய கடன்கள் வாங்க முடியாமல் போகும். இதை மாற்ற ஒரே வழி - பணம் சேர்த்துப் பொருள்கள் வாங்கும் பழக்கத்தை மேற்கொள்வது. இதனால் கேஷ் டிஸ்கவுன்ட்டுகள் மட்டுமன்றி, குளிர்கால/ வெயில்கால ஆஃபர்களையும் பெறமுடியும்.
அதே போல் கார் அல்லது பைக் ஒன்று தேவைப்படலாம். வாங்குவதில் தவறில்லை. ஆனால், பார்ப்பவர்களை அசரடிக்கும் ஒரே குறிக்கோளுடன் லட்சக்கணக்கில் கடன் வாங்கி, இவற்றை வாங்கும்போது இவை கரையும் சொத்துகள் என்பதை மறந்து விடுகிறோம்.
Also Read: ஓய்வுபெறுபவர்களின் நம்பர் 1 சாய்ஸ் இந்த அஞ்சலக திட்டம்தான்; ஏன் தெரியுமா?- பணம் பண்ணலாம் வாங்க-12
சமீப காலங்களில் பலர் மார்ஜின் மணி என்ற பெயரில் கிடைக்கும் கடனை உபயோகப்படுத்தி பங்குச் சந்தையில் பணம் பண்ண முயல்கிறார்கள். இதிலும் வட்டி கட்ட வேண்டியிருப்பதால் நம் முதலீடு கரையும் வாய்ப்பு அதிகம்.
காம்பௌண்ட் எஃபெக்ட்
இதற்கு நேர் மாறாக நம் முதலீடுகளைப் பெருக்குவது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், `உலகின் எட்டாவது அதிசயம்' என்று குறிப்பிட்ட `காம்பௌண்ட் எஃபெக்ட்'. முதலீட்டாளர்களின் குரு வாரென் பஃபெட்டும் தன் செல்வத்துக்குக் காரணம் `காம்பௌண்ட் எஃபெக்ட்' என்று குறிப்பிட்டுள்ளார்.
காம்பௌண்ட் எஃபெக்ட் என்றால் என்ன? பணம் பணத்தை உருவாக்குவதும், பணத்தால் உருவாக்கப்பட்ட அந்தப் பணம் மேலும் பணத்தை உருவாக்குவதும்தான்.
குடகு மலையில் ஒரு சிறிய துவாரத்தில் இருந்து பொங்கி ஓடையாக ஓடி, வழியில் சில பல சிற்றாறுகளைச் சேர்த்துக் கொண்டு, ஒகேனக்கலில் தடுக்க முடியாத பல அருவிகளாக வழியும் காவிரி ஆறுக்கும், காம்பௌண்ட் எஃபெக்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சாதாரண மக்களையும் பெரும் பணக்காரராக்க வல்லது இந்த காம்பௌண்ட் எஃபெக்ட்.
நல்ல வேளையாகப் பணத்துக்கு கறுப்பு/சிவப்பு, ஆண்/பெண், இளைஞர்/முதியவர் என்ற பாகுபாடில்லை. ஆகவே காம்பௌண்ட் எஃபெக்ட்டை எல்லோராலும் பெற முடியும். நாம் செய்ய வேண்டியது, மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பது.
Also Read: வங்கிகளை விட லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்; அஞ்சலகங்களின் அருமையை தெரிஞ்சுப்போமா? - 11
உதாரணமாக ரூ.2,000-ஐ மாதா மாதம் 8% வருமானம் தரும் முதலீட்டில் 30 வருடங்கள் போட்டு வந்தால், நமக்குக் கிடைக்கும் தொகை சுமாராக ரூ.29.30 லட்சம்.
(8% வட்டி எங்கு கிடைக்கிறது என்கிறீர்களா? தொடரைத் தொடர்ந்து படித்து வாருங்கள் - பர்சனல் ஃபைனான்ஸ் வழி கூறும்.)
நம் வருமானம் கூடக் கூட சேமிப்பையும் கூட்டுவது இன்னும் நல்லது.
பணம் சேர்த்த பின்பே பொருள்கள் வாங்குவதும், மாதம்தோறும் சேமிக்கும் பழக்கத்தை விடாதிருப்பதும் போரடிக்கும்தான்; நம் பொறுமையைச் சோதிக்கும் விஷயம்தான். ஆனால், இது போன்ற பழக்கங்கள்தான் நாம் தூங்கும் போதும் நமக்காக சம்பாதித்து, நம் முகத்தில் மாறாத புன்னகையை ஏற்படுத்த வல்லவை. முயன்றுதான் பாருங்களேன்.
- அடுத்து திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.
source https://www.vikatan.com/business/finance/what-is-compound-effect-and-how-it-will-help-us-in-investments
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக