ஆப்கானிஸ்தானில் முறையாக ஆட்சி அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் தாலிபன்கள். பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட வெகுசில நாடுகளைத் தவிர வேறெந்த நாடுகளும் தாலிபன்கள் ஆட்சியமைக்க ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் உறுதியாக தாலிபன்கள் ஆட்சி அமையும் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் வஹீதுல்லா ஹஷிமி (Waheedullah Hashimi). தாலிபன் தலைவர்களுள் ஒருவரான இவர் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ``ஆப்கனில் ஜனநாயக ரீதியான ஆட்சிக்கு இடமில்லை. எங்களிடம் ஷரியத் சட்டம் இருக்கிறது. அதன்படிதான் ஆட்சி நடக்கும்'' என்றிருக்கிறார்.
Also Read: ஆப்கன்: `150 இந்தியர்களைக் கடத்தி வைத்திருக்கிறார்களா?' - தாலிபன்களின் பதில் என்ன?!
பொதுவான இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் சொல்வது என்ன? என்பது குறித்து இஸ்லாமிய மார்க்க அறிஞரும், சென்னை மந்தைவெளி பள்ளிவாசல் தலைமை இமாமுமான இல்யாஸ் ரியாஜியிடம் பேசினோம். "ஷரியத் என்றால் 'நேரான பாதை' என்று பொருள். இது சட்ட வழக்கத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் வரையறுக்கப்பட்ட சட்டங்களுக்கு சொல்லப்படும்.
இச்சட்டங்கள் சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் அமலில் உள்ளன. இதன் விளக்கத்தைப் பார்த்தோமானால், முதலில் தஅசீர் என்ற சிறு வகையான குற்றங்களுக்கான தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒருவன் திருடுவதற்கு முயற்சி செய்தான் ஆனால் அதற்குள் பிடிபட்டுவிட்டான் பிடிபடாவிட்டால் திருட்டை நடத்தியிருப்பான் என்று நிரூபிக்கப்பட்டால் அது தஅசீர் என்ற தண்டனைப் பிரிவுக்குள் வரும். திருடவில்லை என்றாலும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டான். அவனை விட்டு விட்டால் மீண்டும் அதேபோன்ற தவறை செய்வான். அதனால், அவனை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்துவதுதான் தஅசீர் வகை தண்டனைச் சட்டம். திருட்டு போலவே பொய் சாட்சி சொல்வதும் இதில் அடங்கும். அதாவது, ஒரு பொய்யால் யாரும் பாதிக்கபடவில்லை என்றால் தண்டனையெல்லாம் இல்லை. ஒருவர் பொய் சொல்வதால் மற்றவருக்கு பொருளாதார, சமூக ரீதியாக பாதிப்பு ஏற்பட்டால் அதற்குத் தண்டனை உண்டு. இதற்கும் சமூகத்திலிருந்து அப்புறப்படுத்துவதுதான் தண்டனை. முந்தைய காலங்களில் இக்குற்றங்களில் ஈடுபடுவோர் நாடு கடத்தப்படுவார்கள். தற்போது, ஷரியத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டால், குற்றவாளியை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தும் விதமாக சிறையில் சில காலம் தள்ளப்படுவர். அதேநேரம், அக்குற்றத்தில் ஈடுபட்டவருக்கு ஒழுக்க வகுப்புகளும், கவுன்சிலிங்கும் கொடுக்கப்படும். அதன்மூலம் அவன் திருந்திவிட்டதாக நீதிபதி உறுதிப்படுத்தினால் வெளியில் விடப்பட்டு, சமூகத்தில் கலந்து வாழ அனுமதிக்கப்படுவான்.
அடுத்ததாக கிஸாஸ் தண்டனை. கிஸாஸ் என்றால் பழிக்குப்பழி என்று அர்த்தம் கொள்கிறார்கள். ஆனால், அதை அப்படிச் சொல்லக்கூடாது. ஒருவர் அநீதிக்கு உள்ளாக்கப்பட்டால் அதேயளவு அநீதியை குற்றம் செய்தவருக்கும் கொடுப்பதுதான் கிஸாஸ். உதாரணத்துக்கு ஒருவரது மூக்கை இன்னொருவர் அடித்து உடைத்துவிட்டால், அடி வாங்கியவர் ஷரியத் நீதிமன்றத்தை நாடினால், அதேபோல அடித்தவரின் மூக்கும் சட்டரீதியாக உடைக்கப்படும். எந்தளவு பாதிப்போ அதேயளவுதான் தண்டனையும். அடி வாங்கியவர் மன்னிக்கவும் செய்யலாம். மன்னித்தால் நீதிமன்றம் அதை ஏற்று குற்றவாளிக்கு தண்டனை ஏதும் தராமல் விடுவிக்கும்.
இறுதியாக, ஹுதூத் என்பது கிரிமினல் குற்றங்களுக்கான தண்டனைகள். எல்லா திருட்டுகளையும் இதில் சேர்க்கக்கூடாது. சாதாரண திருட்டில் ஈடுபட்டால் கிரிமினல் சட்டம் பாயாது. எல்லை தாண்டிய பெரிய , அல்லது தொடர் திருட்டுகளில் ஈடுபடுவோருக்கு, அவர்களுடைய கைகளை மணிக்கட்டு வரை வெட்டி விடுவதுதான் இதற்கு ஷரீயத் தரும் தண்டனை.
Also Read: `உரிய காலத்தில் கடனை செலுத்தத் தவறினால்...' - சீனா வைத்த`செக்'; திணறும் இலங்கை! - என்ன பிரச்னை?
மது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்பதால், மது குடிப்பதும் இதில் தண்டனைக்குரிய குற்றம். மது குடித்தவருக்கு 80 கசையடி (சாட்டையால் அடிப்பது) தண்டனையாக வழங்கப்படும். ஆபாசமான போர்னோகிராபி படங்களைப் பார்ப்பதும் ஹுதூத் பிரிவில் அடங்கும். ஆபாசப் படங்களைப் பார்த்து, அதன் மூலம் ஈர்க்கப்பட்டு சமூகத்தில் தவறான மானக்கேடான காரியங்களில் ஈடுபட்டால் சிறைத் தண்டனை உண்டு.
விபச்சாரம் செய்வதும் இதில் அடங்கும். திருமணத்துக்கு முன் விபச்சாரத்தில் ஈடுபட்டால், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 100 கசையடி தண்டனைக் கொடுக்கப்படும். அதுவே, திருமணம் முடிந்தும் விபச்சாரத்தில் ஈடுபட்டால், மரண தண்டனை வழங்கப்படும். இவன் இவளோடு தனிமையில் இருந்தான் என ஆதாரமின்றி, பொய்யாக போலியான பாலியல் அவதூறுகளைக் கூறி, அது நிரூபிக்கப்படவில்லை என்றால், அவதூறு கூறியவனுக்கு 80 கசையடி தண்டனை வழங்கப்படும்.
இவை மூன்றும்தான் ஷரியத் சட்டங்களில் கூறப்பட்டுள்ள தண்டனை விவரங்கள். இதுவும் ஒரே இறைவனை ஏற்றுக்கொண்டு இஸ்லாமியராக வாழ்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். இஸ்லாமிய நாடுகளில் வாழும் பிற மதத்தினருக்கு இதுபோன்ற ஷரியத் சட்டங்கள் பொருந்தாது. அவர்களுக்கு அவர்களின் மதங்களில் எப்படி குறிப்பிடப்பட்டுள்ளதோ அதுபோன்ற தண்டனைதான் வழங்கப்படும். ஆப்கானிஸ்தானில் இந்துக்களும் சீக்கியர்களும் ஒரு சதவிகிதம் பேர் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அவர்களுடைய மதங்களில் சொல்லப்பட்டுள்ள தண்டனைகள் மட்டுமே பொருந்தும்
குற்றங்களற்ற அல்லது குற்றங்கள் குறைந்த சமுதாயத்தை உருவாகுவதே ஷரியத் சட்டத்தின் நோக்கம்.” என்றார்.
ஆப்கன் பெண்கள் அச்சப்படுவது ஏன்?
கடந்த தாலிபன்கள் ஆட்சியில், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. 8 வயதுக்கு மேலுள்ள பெண்கள் அனைவரும் கட்டாயம் புர்கா அணிந்திருக்க வேண்டும். அவசியமிருந்தால் மட்டுமே வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்லும்போது ஆண் துணையோடுதான் செல்ல வேண்டும். அந்த ஆண், அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும்.
பொதுவெளியில் பெண்கள் சத்தமாகப் பேசக்கூடாது. அருகிலிருக்கும் வெளிநபர்களான ஆண்களின் காதுகளில் கேட்காத அளவுக்குத்தான் பேச வேண்டும். பெண்கள் நடந்து வரும் சத்தம் எந்தவொரு ஆணுக்கும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, பெண்கள் ஹீல்ஸ், ஷூ அணியத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
Also Read: ஆப்கானிஸ்தான் வீதிகளில் பெண் பத்திரிகையாளர்கள்... தாலிபன்கள் தரும் முக்கியத்துவமா, வெறும் நாடகமா?
பெண்களின் புகைப்படங்களைச் செய்தித்தாள்கள், புத்தங்கள், கடை விளம்பரங்கள் உள்ளிட்ட எதிலுமே பயன்படுத்தக்கூடாது. வீட்டிலிருக்கும் பால்கனி பக்கம் பெண்கள் வரவே கூடாது. பெண்கள் படிக்கச் செல்வதும், வேலைக்குச் செல்வதும் தடை செய்யப்பட்டிருந்தது. இதற்கு முந்தைய தாலிபன்களின் ஆட்சியில், இந்த விதிமுறைகளை மீறிய பெண்களுக்கு பொது இடங்களில் கல்லடி, சவுக்கடி, மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
1996-ம் ஆண்டு காபூலைச் சேர்ந்த பெண் ஒருவர் விரலில் நெய்ல் பாலிஷ் போட்டிருந்த காரணத்தால், அவரது விரல்களை தாலிபன்கள் துண்டித்ததாக அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் தகவல் சொல்கிறது.
தாலிபன்கள் கடந்த வாரம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், `பெண்கள் படிக்கச் செல்லலாம், சுகாதாரத் துறைகளில் பெண்கள் பணிபுரியலாம்' என்றெல்லாம் சொல்லியிருந்தனர். ஆனால், அதற்கான தெளிவான வழிமுறைகளை இன்னும் அவர்கள் அறிவிக்கவில்லை என்பதால், ஆப்கனில் பெண்களின் சுதந்திரம் இப்போதுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது!
source https://www.vikatan.com/government-and-politics/international/story-about-sharia-law-in-afghanistan-by-taliban
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக