பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் பலருக்கும் வாரன் பஃபெட் நன்கு தெரியும். ஆனால், பீட்டர் லிஞ்ச்சை மிகச் சிலர் மட்டுமே தெரிந்துவைத்திருப்பார்கள். யார் இந்த பீட்டர் லிஞ்ச் என்று கேட்கிறீர்களா?
அமெரிக்காவில் ஃபிடிலிட்டி இன்ட்வெஸ்ட்மென்ட்ஸில் 1977 முதல் 1990 வரை பல நிலைகளில் பணியாற்றிய சமயத்தில் இவர் நிர்வகித்து வந்த `மெகேலன் ஃபண்ட் (Magellan Fund)’ சராசரியாக ஆண்டுக்கு 29.2% வருமானம் அளித்துவந்தது. இது சந்தைக் குறியீட்டு வருமானத்தைவிட இரண்டு மடங்காகும். இவர் நிர்வாகத்தின்கீழ் இருந்த சொத்தின் மதிப்பு சுமார் 18 மில்லியன் டாலரிலிருந்து 14 பில்லியன் டாலர் அளவுக்கு 13 வருடங்களில் அதிகரித்தது. இதனால் இவர் மிகவும் பிரபலமான, அரிதான ஒரு ஃபண்ட் மேலாளராக நிதி வட்டாரங்களில் போற்றப்பட்டார்.
பீட்டர் லிஞ்சின் புத்தகங்கள்
இந்த பீட்டர் லிஞ்ச் மூன்று புத்தகங்களை எழுதியிருக்கிறார். ஜான் ரோத்சைல்ட்-வுடன் (John Rothchild) எழுதிய `ஒன் அப் ஆன் வால் ஸ்ட்ரீட் (One Up on Wall Street (1989)', `பீட்டிங் தி ஸ்ட்ரீட் (Beating the Street (1993)', `லேர்ன் டு யேன் (Learn to Earn (1995)' என்பவையே அந்த மூன்று புத்தகங்கள். இதில் `ஒன் அப் ஆன் வால் ஸ்ட்ரீட்' புத்தகம் இன்றைய சூழ்நிலைக்கும் 100% பொருந்துவதால், இதுவரை 10 லட்சம் பிரதிகளுக்கும்மேல் விற்பனை ஆகியிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.
ஊகங்களுக்கு காது கொடுக்காதீர்கள்
``நீங்கள் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களையும், வட்டி விகிதம் குறித்த முடிவற்ற ஊகங்களையும் கண்டு கொள்ளாமல் இருந்தால், நீண்ட காலத்தில் (அதாவது, 5 - 15 ஆண்டுகள்) உங்கள் போர்ட்ஃபோலியோ உங்களுக்கு நல்ல வெகுமதியைக் கொடுக்கும். சாதாரணமான முதலீட்டாளர்கள்கூட கொஞ்ச நேரம் ஆய்விலும் நிலையான ஒழுங்கையும் பின்பற்றினால் முதலீட்டில் `குரு’ எனச் சொல்லப்படுபவர்களைவிட விஞ்சிவிடலாம்.
உங்களுக்குத் தெரிந்ததில் முதலீடு செய்யுங்கள்
`உங்களுக்குத் தெரிந்ததில் முதலீடு செய்யுங்கள்’ என்றால் என்ன அர்த்தம்? ``உதாரணமாக நீங்கள் ஒரு மருத்துவர் என வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பங்குகளில் முதலீடு செய்ய ஆசை இருக்கிறது. கொஞ்சம் ஆய்வு செய்த பின் ஒரு பெட்ரோலிய நிறுவனம் நன்றாகச் செயல்படுவதாக நினைத்து அதில் முதலீடு செய்கிறீர்கள். அதுபோல, இன்னொருவர் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவர் மருத்துவத் துறையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றைத் தெரிவு செய்து அதில் முதலீடு செய்கிறார். இருவரின் முதலீடும் எப்படி இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
பெரும்பாலும் அவர்களுடைய வருமானம் சராசரி சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கும். மருத்துவருக்கு அவருடைய துறையில் நன்கு அனுபவம் இருக்கும். அப்படி இருக்கும்போது எந்த நிறுவனம் நல்ல மருந்துகளைத் தயாரித்து சந்தையில் நன்கு செயல்பட்டு வருகிறது என்பது தெரிந்திருக்கும். எனவே, அவர் அந்தத் துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். அது போலவே பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் முதலீட்டாளருக்கும் அவர் சார்ந்த துறை பற்றி நன்கு தெரிந்திருக்கும்பட்சத்தில் அதில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் நன்கு பரிட்சயமான துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தால் அதிக வருமானம் ஈட்டமுடியும்’’ என்று சொல்லும் பீட்டர், ``பங்குச் சந்தையைப் பின்பற்றுவதற்குத் தேவையான அறிவு அனைவரிடமும் இருக்கிறது. ஐந்தாம் வகுப்பு கணிதம் தெரிந்திருக்கும் எவரும் பங்குச் சந்தை முதலீட்டில் ஈடுபட முடியும்’’ என்கிறார்.
முதலீடு குறித்து பீட்டர் சொல்லும் ஆலோசனைகள்...
பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு பீட்டர் லிஞ்ச் சொல்லும் யோசனை என்ன தெரியுமா?
1. ஆய்வு செய்யாமல் முதலீடு செய்வது என்பது சீட்டுகளைப் பார்க்காமலேயே சீட்டு விளையாடுவது போன்றதாகும்.
2. எதுவுமே தெரியாமல் ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வது சூதாடுவது போன்றது. அது நல்லதல்ல என்பதால், ஒருபோதும் செய்யாதீர்கள்.
3. இழப்பு ஏற்படும்பட்சத்தில் அது உங்களது வழக்கமான நடவடிக்கைகளைப் பாதிக்காத மாதிரி பார்த்துக்கொள்வது அவசியம்.
4. வெற்றிகரமான முதலீட்டாளர்களுக்குப் பொறுமை, தற்சார்பு, இயல்பறிவு, எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனம், சிரமத்தைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை, பற்றின்மை, விடாமுயற்சி, பணிவு, நெகிழ்வுத்தன்மை, தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வதற்கான விருப்பம் ஆகியவற்றோடு தவறு செய்தால் அதை ஒப்புக்கொள்ளும் பக்குவமும், பொதுவாக ஏற்படக்கூடிய பதற்றத்தைப் பொருட்படுத்தாத மனநிலையும் இருக்க வேண்டும்.
5. நிறுவனச் செயல்பாட்டை அவதானித்து முதலீடு செய்ய வேண்டுமே ஒழிய பங்குச் சந்தையின் செயல்பாட்டைப் பார்த்து இல்லை.
6. குறுகிய கால ஏற்ற இறக்கங்களின் மீது கவனம் செலுத்த வேண்டாம்.
7. பொருளாதாரத்தைச் கணிக்க முயல வேண்டாம். பெரிய பெரிய ஜாம்பவான்களே இதில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். எனவே, பொருளாதாரத்தைக் கணிப்பது என்பது உபயோகமற்றது.
8. அதிக லாபத்தைப் பெறக்கூடிய அதே நேரத்தில் அதிக நஷ்டத்தையும் பங்குச் சந்தையில் அடைய நேரிடலாம். இரண்டுக்கும் தயாராக இருப்பது அவசியம்.
9. நீங்கள் ஒரு பங்கை நிராகரிக்க வேண்டுமெனில், அது மிகவும் சிறப்பான துறையில் மிகச் சிறப்பாகச் செயல்படும் பங்காக இருக்கட்டும் (hottest stock in the hottest industry).
10. அலுப்பூட்டுவதாக அல்லது சராசரியாகச் செயல்படும் பங்குகள் நாளடைவில் நல்ல வருமானத்தைக் கொடுக்கும்.
பங்குகளை பீட்டர் ஆறு வகைகளாகப் பிரிக்கிறார். அவை,
1. மெதுவான வளர்ச்சியைக் கொண்ட பங்குகள் (சுமார் 2 - 4% வளர்ச்சி கொண்டவை).
2. உறுதியான பங்குகள் அதாவது, பெரிய நிறுவனப் பங்குகள் (சுமார் 10 - 12% வளர்ச்சி கொண்டவை).
3. வேகமான வளர்ச்சி கொண்டவை (சுமார் 20-25% அளவு வளர்ச்சி அடையும் நிறுவனங்கள்).
4. சுழற்சித்தன்மை கொண்டவை - உதாரணமாக, ஆட்டோமொபைல், டயர், உலோகத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள்.
5. மறுவாழ்வு பெற்ற நிறுவனப் பங்குகள் - பல காரணங்களால் சந்தையில் பலத்த அடி வாங்கிய பின் மீண்டுவரும் பீனிக்ஸ் நிறுவனங்கள்.
6. குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டவை - நிறுவனங்கள் சார்ந்த சொத்துக்களை மிகவும் குறைத்து மதிப்பீடு செய்வதால், பங்கு விலையில் அது பிரதிபலிப்பதில்லை. உதாரணமாக, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்து அல்லது எஸ்.பி.ஐ வங்கியின் சுமார் 24,000 கிளைகள்.
பங்கை எப்படித் தேர்வு செய்வது?
பங்குகளை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு P/E விகிதாச்சாரம் ஓரளவுக்கு உதவி செய்தாலும் அதை எவ்வளவு காலம் முதலீடு செய்ய வேண்டும், எப்போது பங்குகளை விற்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறியிருக்கிறார். மேலும், பங்குகளின் விலையில் ஏற்படும் மாற்றம் குறித்து பங்குச் சந்தையை நன்கு அறிந்தவர்களும் அறியாதவர்களும் வழக்கமாகச் சொல்லும் 12 வேடிக்கையான விஷயங்களையும் குறிப்பிட்டு அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லும் விஷயங்கள் இனி...
1. இந்த அளவுக்கு பங்கின் விலை குறைந்துவிட்டது, இனிமேல் குறைய வாய்ப்பில்லை.
2. இந்த அளவுக்கு பங்கின் விலை ஏறிவிட்டது இனிமேல் ஏற வாய்ப்பில்லை.
3. பங்கின் விலை இவ்வளவு குறைவாக இருக்கிறது. அதில் முதலீடு செய்தால் அப்படியென்ன இழப்பு ஏற்பட்டுவிடப் போகிறது? (ரூ.10-க்கு வாங்கிய பங்கு ரூ.7-க்கு வந்தாலும், ரூ.2,000-க்கு வாங்கிய பங்கு ரூ.1,400-க்கு வந்தாலும் இழப்பு விகிதம் ஒன்றுதான்).
4. குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு, குறிப்பிட்ட விலை வரும் வரை விற்பதில்லை எனத் தீர்மானமாக இருப்பது (ஆனால், ஒருபோதும் அது அந்த விலையை எட்டப் போவதில்லை என அவர்களுக்குத் தெரியாது!).
இவை ஒவ்வொன்றுக்கும் ஆசிரியர் சில நிறுவனங்களின் பங்குச் செயல்பாட்டை உதாரணமாகக் காட்டியிருப்பது சுவாரஸ்யம்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள எவரும் எளிமையாகவும் தர்க்கரீதியாகவும், நடைமுறைக்கேற்ற வகையிலும் எழுதப்பட்டிருக்கும் இந்த நூலை வாசிப்பதன் மூலம் அடிப்படையான சில விஷயங்களைத் தெரிந்துகொள்வதுடன் ஆசிரியர் தனது அனுபவத்தின் மூலம் பெற்ற படிப்பினைகளையும், அதைத் தவிர்ப்பதற்கு அவர் கூறியிருக்கும் ஆலோசனைகளையும் மனதில் கொண்டு செயல்பட உதவியாக இருக்கும்.
source https://www.vikatan.com/business/share-market/interesting-stock-market-lessons-from-investor-peter-lynch-one-up-on-wall-street
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக