Ad

திங்கள், 14 செப்டம்பர், 2020

India-China Face-Off: `எல்லையைக் காக்கும் வீரர்களுக்கு பக்கபலமாக நிற்போம்!’ - பிரதமர் மோடி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று (செப்டம்பர் 14) தொடங்கி அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா பெருந்தொற்று சூழலில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறாமல், நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது.

தி.மு.க எம்.பி-க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி

முன்னதாக, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தி.மு.க எம்.பி-க்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தை மக்களவையில் வலியுறுத்திப் பேசிய தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வு மாணவர்களின் உயிரைக் காவு வாங்குவதாகக் குறிப்பிட்டார்.

Also Read: நீட் தேர்வு: நடிகர் சூர்யா அறிக்கை.. `நீதிமன்ற அவமதிப்பு’ என தலைமை நீதிபதிக்கு கடிதம்

மழைக்காலக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி, எல்லைப் பிரச்னை, கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ``கடினமான சூழலில் ராணுவ வீரர்கள் நமது எல்லைகளைக் காத்துவரும் சூழலில், அவர்களுக்கு ஆதரவாக இந்த நாட்டு மக்கள் அனைவரும் இருக்கிறார்கள் என்ற செய்தியை நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கொண்டுசேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். நமது ராணுவ வீரர்களுக்குப் பக்கபலமாக நாம் எப்போதும் நிற்போம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்பாக இருந்துகொள்ளுங்கள். இது என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள்’’ என்றார்.

பிரதமர் மோடி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த ஒத்துழைப்புக் கொடுத்த எம்.பி-க்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, ``அசாதாரண சூழலில் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், அதில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டு, இந்த கொரோனா காலத்திலும் நமது எம்.பி-க்கள் ஜனநாயகக் கடமையாற்றிட உறுதியேற்றுள்ளனர்’’ என்றார். கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விவாதங்கள் அதிகம் நடைபெறுவது முக்கியமானது என்றும் கூறினார்.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரை மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, ``எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்தத் தடுப்பூசி உலகின் எந்தமூலையில் இருந்தாலும் கண்டுபிடிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நமது விஞ்ஞானிகள் அந்த முயற்சியில் வெல்லும்பட்சத்தில், மக்கள் அனைவரையும் இதிலிருந்து மீட்பதில் நாம் வெற்றியடைவோம்’’ என்றார்.

கல்வான் - விவகாரம்

Also Read: Pangong Tso: `பாங்கோங் சோ ஏரி இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?' - சீன ஊடுருவல் முறியடிக்கப்பட்ட பின்னணி!

கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சீன எல்லையில் கடந்த மே மாதத் தொடக்கம் முதலே பதற்றம் நீடித்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் பாங்கோங் சோ ஏரி பகுதியில் சீன ராணுவம் அத்துமீறல் முறியடிப்பு போன்ற விவகாரங்கள் இருநாடுகள் இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளன. இந்தசூழலில் இருநாடுகளின் பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்து எல்லையில் அமைதி திரும்புவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.



source https://www.vikatan.com/news/india/mps-unitedly-send-message-that-country-stands-with-soldiers-hopes-pm-modi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக