புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட 50% இடஒதுக்கீட்டில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீட்டை எடுப்பது என்பது வரலாற்று துரோகம். மருத்துவப்படிப்பில் அதனை தரும் முடிவு அநீதி. அதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசு நிதியை தரவில்லை. மாநில அரசின் நிதியை வைத்து செய்கிறோம். அரசு மீது சிலர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். குறை சொல்வதை அரசியல்கட்சிகள் சில வாடிக்கையாக வைத்துள்ளன.
பா.ஜ.க பொய்யான தகவலை மக்களுக்கு தருகிறது. புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்கும் ஆயத்த வேலைகளை பா.ஜ.க செய்து வருவதாக நான் ஆதாரத்தோடு தெரிவித்தேன். பா.ஜ.க பொறுப்பாளர் ரவி அதனை மறுத்திருக்கிறார். உண்மையில் படிப்படியாக மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு கையில் எடுக்கிறது. நிதி அதிகாரத்தை கையில் எடுத்திருக்கின்றனர். அதேபோல நில அதிகாரத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டுமென்றால், எதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்று இருக்க வேண்டும். நிதி கமிஷனில் சேர்க்க கோரியதற்கும் எந்த பதிலும் இல்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவதற்கும் மத்திய அரசு தடையாக உள்ளது. மாநில அரசின் சேவையை முடக்க பார்க்கிறார்கள். புதுச்சேரி அரசின் அதிகாரத்தை குறைத்து தமிழகத்துடன் இணைக்க பார்க்கிறார்கள். அதனை நான் ஆதாரத்துடன் கூறியதற்கு பா.ஜ.கவிடம் பதில் இல்லை.
பா.ஜ.கவில் பல அரசியல் கட்சி தலைவர்கள் இணைய போவதாக சொல்கிறார்கள். புதுச்சேரி பா.ஜ.கவின் பலம், பலவீனம் என்னவென்பது மக்களுக்குத் தெரியும். அதேபோல தமிழகத்தில் அந்தக் கட்சியின் நிலை என்ன என்றும் தெரியும். புதுச்சேரி மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் கட்சி பா.ஜ.க. புதுச்சேரிக்கான பல திட்டங்களை தடுத்துள்ளனர். அவர்களை நம்பி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். புதுச்சேரி மாநிலத்தில் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று கூறுவதை அ.தி.மு.க நிறுத்திக்கொள்ள வேண்டும். இக்கட்டான சூழலிலும் மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறோம்.
Also Read: OBC இட ஒதுக்கீடு: `தி.மு.க துரோகம் இழைத்துவிட்டது!' பா.ம.க-வின் குற்றச்சாட்டு சரிதானா?
புதுச்சேரி அமைதி பூங்காவாக இருப்பதே இலக்கு. ஒரு சில சம்பவங்கள் நிகழ்ந்ததைக் கொண்டு தவறான பிரசாரம் நடக்கிறது. ஒரு சிலர் புதுச்சேரியில் பா.ஜ.க ஆட்சியை கொண்டுவருவோம், பா.ஜ.க தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறுகிறார்கள். உண்மையில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்று தேட வேண்டிய நிலைதான் புதுச்சேரியில் இருக்கிறது” என்றார்.
source https://www.vikatan.com/news/politics/historic-betrayal-chief-minister-narayanasamy-on-reservation-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக