இவரைத் திட்டதாவர்களே இல்லை எனும் அளவுக்கு தமிழ் சீரியல் உலகில் மிகப் பிரபலமாக இருந்தவர் மஞ்சரி. பாசிட்டிவ், நெகட்டிவ் என இவர் கலந்தடித்து நடித்த கதாபாத்திரங்கள் ஏராளம். தற்போது சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் அங்கேயும் தன் நடிப்பு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினேன்.
''இங்கேயும் ஒரு சீரியல்ல நடிச்சிட்டு இருக்கேன். நம்மூர் மாதிரி இங்க நிறைய எபிசோட் எடுக்க மாட்டாங்க. பெரும்பாலும் 40-லிருந்து 42 எபிசோட்தான் எடுப்பாங்க. வெளியில இப்போ வரை என்னை எங்க பார்த்தாலும் திட்டுவாங்க. அவங்ககிட்ட திட்டு வாங்குறப்போ இந்த அளவுக்கு நம்ம கேரக்டர் ரீச் ஆகியிருக்கேன்னு சந்தோஷமா இருக்கும். சமீபத்தில் இங்க நடந்த 'பிரதன விழா 2021 (Pradhana Vizha 2021)' விருது விழாவில் 'Most Popular Female Actress' , 'Best Supporting Actress'-னு ரெண்டு விருது எனக்கு கிடைச்சது.
அப்போ என்கூட சீரியல்ல நடிச்ச சஞ்சீவ், ஶ்ரீ, அப்சர், சிமர் எல்லோர்கூடயும் இப்பவும் பேசுவேன். நானும், அப்சரும் நல்ல க்ளோஸ். அப்சர் மனைவியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு குழந்தை பிறந்தது தெரிஞ்ச உடனேயே நேர்ல குழந்தையை பார்க்க போயிட்டேன். இப்போவரை எங்களுக்குள்ளே அந்த நட்பு தொடர்ந்துட்டு இருக்கு'' என்றவர் அவர் மகள் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
''என் பொண்ணு அப்படியே என்னை காப்பி அடிப்பா. நான் என்ன பண்றேனு கவனிச்சு அதை அவ அப்படியே ஃபாலோ பண்ணுவா. சின்ன வயசுல நானும் கோபக்காரிதான். ஆனா, இவ என்னை விட பல மடங்கு கோபக்காரியா இருக்கா. கராத்தே கத்துக்கிட்டு டபுள் பெல்ட் வாங்கியிருக்கா. அடுத்து பிளாக் பெல்ட் வாங்குறதுக்கான பயிற்சியை தொடங்கிட்டா. அவளைப் பத்தி நான் பயப்பட வேண்டியதே இல்ல. அவளே அவளை பார்த்துப்பா. சூப்பரா படம் வரைவா. கீ போர்ட், டிரம்ஸ் எல்லாம் வாசிப்பா. மியூசிக் கம்போஸ் பண்ணி பாட்டு பாடுவா. நைட் பத்து மணிக்கு மேல போன் யூஸ் பண்ணக் கூடாதுன்ற விஷயத்துல மட்டும்தான் நான் ஸ்ட்ரிக்ட்டா இருப்பேன்'' என்றவரிடம் மறைந்த டிவி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் குறித்து கேட்டேன்.
''அவர் எனக்கு அண்ணன் மாதிரி. சின்ன வயசில இருந்து அவர்கூட ஒர்க் பண்ணியிருக்கேன். 18 வயசில அவர் எனக்கு அறிமுகமானார். இப்போ எனக்கு 41 வயசாகுது. இத்தனை வருஷமா அவர் எனக்கு பழக்கம். ரொம்ப அன்பான மனுஷன். அவரை கோபக்காரனா நான் பார்த்ததேயில்ல. இது இப்படி செய்யணும்னு பொறுமையா பல விஷயங்கள் எனக்கு கத்துக் கொடுத்துருக்கார். அவர் இறந்துட்டாருன்னு தெரிஞ்சதும் என்னால தாங்கிக்கவே முடியலை. அவர் சாவுக்கு போயிட்டு அங்க என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலை. அவர் முகத்தை அப்படி என்னால பார்க்க முடியல. உடனே கிளம்பிட்டேன். அவர் பொண்ணுகிட்ட, மனைவிகிட்ட என்ன ஆறுதல் சொல்றதுனே எனக்குத் தெரியல. இன்னைக்கு வரைக்கும் நான் அவங்ககிட்ட பேசல'' என அழுதவர் சில நிமிடங்களுக்குப் பிறகு பேசத் தொடங்கினார்.
''முன்னாடி குண்டா இருப்பேன். பிறகு மெலிஞ்சிட்டேன். என்னை பார்க்கிறவங்க இவளுக்கு ஏதோ நோய் வந்துடுச்சு போலன்னு சொன்னாங்க. நோயாளி அதான் மெலிஞ்சிட்டான்னுலாம் பேசினாங்க. எனக்கு நடக்குறது ரொம்ப பிடிக்கும். நிறைய நடந்தேன். உடம்பு குறைக்கணும்னு நினைச்சேன்... கஷ்டப்பட்டு நடந்து நடந்தே குறைச்சேன். மத்தபடி யார் என்ன சொன்னா எனக்கென்னங்க!' என சிரிக்கிறார் மஞ்சரி.
source https://cinema.vikatan.com/television/actress-manjari-talks-about-ananda-kannan-and-her-health
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக