வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியத்திலிருக்கும் கொத்தப்பல்லி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பழங்குடி (எஸ்.டி) சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதவிக்கு ராஜா என்பவரின் மனைவி ரோஜா (வயது 44) வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். இவரைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. பரிசீலனையிலும் அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டிருக்கிறது. இதனால், போட்டியின்றி வெற்றிபெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் ரோஜா. கொத்தப்பல்லி ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்துவந்த ரோஜா, அதே ஊராட்சிக்குத் தலைவராகியிருப்பதுதான் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோஜாவின் கணவர் ராஜாவிடம் பேசினோம். ``நான் பால் வியாபாரம் செய்கிறேன். என் மனைவி 100 நாள் பணியாளராக வேலை செய்துவந்தார். எங்களுக்கு 17 வயதில் சிவசக்தி என்ற மகனும், 14 வயதில் சிவப்பிரியா என்ற மகளும் இருக்கிறார்கள்.
எங்களது குடும்பம் ஏழ்மையில்தான் இருக்கிறது. எங்களைப் போன்றுதான் ஊராட்சியிலுள்ள மற்ற குடும்பங்களும் வறுமையில் இருக்கின்றன. இந்த ஊராட்சியில் குடிநீர் வசதி, சாலை, தெருவிளக்கு என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடையாது. நாங்கள் சென்று ஏதாவது கேட்டால், அலட்சியமாக பதில் சொல்வார்கள். இனியும் அப்படியான குறைகள் இருக்கக் கூடாது என்பதால்தான் மக்கள் என் மனைவிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். போட்டியே இல்லாமல் வெற்றிபெற்றிருப்பது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்திருக்கிற்து. கொத்தப்பல்லி ஊராட்சி மக்களுக்குக் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் என் மனைவி நிறைவேற்றுவார். ஊராட்சியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்’’ என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/in-vellore-district-local-body-election-for-the-position-of-panchayat-president-woman-win-without-contest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக