மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பதவியில் இருந்தபோது மும்பையிலுள்ள பீர் பார்கள், ஹோட்டல்களில் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி மாமூல் வாங்கிக்கொடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான குற்றச்சாட்டை மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் மும்பை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கப் பிரிவும் அனில் தேஷ்முக் மீது பண மோசடி தொடர்பாக விசாரித்துவருகிறது. இது தொடர்பாக விசாரிக்க நான்கு முறை அமலாக்கப் பிரிவு அனில் தேஷ்முக்குக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை, இருந்தும் அவரைக் கைதுசெய்ய அமலாக்கப் பிரிவு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. இந்த வழக்கில் புதிய திருப்பமாக சி.பி.ஐ-யின் ஆரம்பகட்ட விசாரணையில் அனில் தேஷ்முக்குக்கு எதிரான குற்றசாட்டில் உண்மை இல்லை என்பது போன்ற அறிக்கை சமூக வலைதளத்தில் வெளியானது.
இதனால் அதிர்ச்சியடைந்த சி.பி.ஐ அதிகாரிகள் இது எப்படி வெளியானது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். சி.பி.ஐ கீழ் மட்ட அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுத்து இது போன்ற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டது தெரியவந்திருக்கிறது.
Also Read: 'மகாராஷ்டிரா: 100 கோடி மாமூல் விவகாரம்! - மாஜி அமைச்சர் அனில் தேஷ்முக் மீது அமலாக்கத்துறை வழக்கு'
இதில் அனில் தேஷ்முக் வழக்கறிஞருக்கும், மருமகன் கௌரவ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனே புதன்கிழமை இரவு இரண்டு பேரையும் சி.பி.ஐ அதிகாரிகள் அழைத்து சென்று இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பிறகு அனில்தேஷ்முக்கின் வழக்கறிஞரைக் கைதுசெய்தனர். ஆனால், அனில் தேஷ்முக்கின் மருமகனை விடுவித்தனர். கௌரவுக்கு இதில் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை என்று கூறி அவரை போகச் சொன்னதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணையில் அனில் தேஷ்முக்கின் வழக்கறிஞர் ஆனந்த், சி.பி.ஐ அதிகாரி அபிஷேக் திவாரி என்பவரிடம் லஞ்சம் கொடுத்து போலியான விசாரணை அறிக்கையைத் தயார் செய்ய வைத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அபிஷேக் திவாரியும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். முன்னதாக கௌரவும் அவரின் மனைவியும் வீட்டைவிட்டு வெளியில் வந்தபோது, 10 பேர் கொண்ட கும்பல் வந்து சட்டவிரோதமாக கௌரவை அழைத்துச் சென்றதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் குற்றம்சாட்டினார். `எந்தவித விதிகளும் பின்பற்றப்படாமல் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். நாட்டில் சட்டங்கள் அமலில் இருக்கின்றனவா...’ என்று கேள்வியும் எழுப்பினார். காங்கிரஸ் கட்சியும் சி.பி.ஐ-யின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
source https://www.vikatan.com/news/crime/cbi-official-prosecutor-arrested-for-taking-bribe-to-prepare-fake-investigation-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக